. . .

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குமா ஜீரோ பட்ஜெட் விவசாயம்?

 

ட்ஜெட் 2019-20 இல் “நமது விவசாயிகள், அடிப்படையான விவசாயத்தை நோக்கிச் செல்ல வேண்டும், அஃதாவது ‘ஜீரோ பட்ஜெட் விவசாய’த்தை மேற்கொள்வதில் முனைப்பு காட்ட வேண்டும், அதன் மூலம் வருகிற 75 வது சுதந்திர தினத்திற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற அரசின் கொள்கையை அடைய வழி செய்ய முடியும்” என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். 

 

‘ஜீரோ பட்ஜெட் விவசாயம்’ என்றால் என்ன? 

‘ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்’ (Zero Budget Natural Farming) – இது கர்நாடக மாநிலத்தில் வேளாண் ஆர்வலர் திரு. சுபாஷ் பாலேக்கர் மற்றும் கர்நாடக ராஜய ரைத்த சங்கம் (Karnataka Rajya Raitha Sangam) இணைந்து 25 ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுக்கப்பட்டு அங்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு இலாபம் ஈட்டிக்கொடுத்த ஒரு நல்ல வேளாண் முறை தான். பிறகு தென் மாநிலங்களில் பல இடங்களில் இந்த ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய முறை மேற்கொள்ளப்பட்ட வருகிறது. 

 

இயற்கையைச் சார்ந்து பெரிதாக செயற்கை உரம் எதுவும் இல்லாமல் கடன் வாங்குவதற்கான அவசியமின்றி விதையிலிருந்து உரம் வரை, மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துவதென நாமே செய்து தன்னிறைவுடன் செய்யப்படும் விவசாய முறை தான் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் என்பது.

 

விவசாயிகள் பெரிதாக பாதிக்கப்படுவது விவசாய உள்ளீடுகளுக்கான தேவைக்காக கடன் வாங்கி அதனைத் திரும்ப கட்ட முடியாமல் தவிப்பது தான், அதற்காகத் தான் அவர்களுக்கு கடன் வாங்கும் நிலையே ஏற்படாத வகையில் பூச்சிக் கொல்லியாக வேப்பமரத்தெண்ணெய் – மிளகாய்த் தூள் கலவை எனவும், உரமாக பஞ்சகாவிய, அமிர்த கரைசல் எனவும், அறுவடை செய்ததில் தரமான விதைகளைப் பதப்படுத்தி வைத்து அடுத்த முறைக்கு பயன்படுத்தும் வகையில் சேமித்து வைப்பது, குறைந்த அளவில் நீர் செலவு செய்யும் நீர் பாசன முறை என தம்மால் முடிந்ததை வைத்து முயலும் விவசாயம் தான் இது.

 

ஒருங்கிணைந்த பண்ணை முறையை வலியுறுத்தும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்

ஒருங்கிணைந்த பண்ணை முறையையும் இந்த ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய முறை முன் வைக்கிறது. ஆடு, மாடு, கோழி வளர்ப்பது அவற்றின் எச்சங்களை உரமாக காட்டிற்கு பயன்படுத்துவது, காடுகளில் மிஞ்சும் வைக்கோல், சோளத்தட்டு, தேங்காய் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு போன்ற வற்றை ஆடு மாடுகளுக்குத் தீவனமாக பயன்படுத்துவது, முடிந்தால் மீன் வளர்த்து அதில் கழிவான பழைய நீரை காட்டிற்கு பயன்படுத்துவது இப்படி என்னென்னவெல்லாம் எளிமையாக நமக்கு சாத்தியமோ அதனை உள்ளடக்கி வருமானத்திற்கு வழிகோலும் முறை தான் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்.

நன்றி:tnau agriportal

 

ஒவ்வொரு முறையும் விதைக்காக  தனியார் நிறுவனத்திடம் செலவு செய்யத் தேவையில்லை, உரத்திற்கான செலவும் பெரிதாக இருக்காது, அந்த வகையில் குறைந்த செலவில் செய்யப்படும் விவசாயத்தால் சிக்கல்கள் ஏற்பட்டாலும் பெரிதாக விவசாயிகளுக்கு நட்டம் ஏற்பட்டுவிடாது என்பது தான் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தின் முக்கிய அம்சம்.

நீர் பிரச்சனை முக்கால் வாசி இயற்கையின் கையிலும் கால் வாசி அரசாங்கத்தின் கையிலும் தான் இருக்கிறது, அரசாங்கம் தன் பங்கில் சிறப்பாக செயல்பட்டு நீர் பிரச்சனையையும், சந்தைப்படுத்தலில் உள்ள சிக்கல்களையும் களைந்தால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்குதலுக்கு ஜீரோ பட்ஜெட் விவசாயம் நிச்சயம் கை கொடுக்கும்.

ஆக்கம்: சா. கவியரசன்.

உயிரித்தகவலியல் பட்டதாரி, கழனிப்பூ வேளாண் வலைதளத்தின் நிர்வாகத் தலைமையாக பொறுப்பு வகிக்கிறேன். என் வலைதளம்: FromAKP (fromakp.blogspot.com) மின்னஞ்சல்: kaviyarasan411@gmail.com