. . .

ஏன் இளைஞர்கள் வேளாண்மையில் ஆர்வம் காட்டவில்லை? ஏன் காட்ட வேண்டும்?

youth farming kalanipoo

‘வேளாண்மை அமைச்சகம்’ என்றிருந்ததை ‘வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சக’மாக பெயர் மாற்றப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். இருந்தும் இப்படி பெயரளவில் மாற்றம் மட்டும் பத்தாது, அரசின் செயலாக்கங்கள் பெயர் மாற்றத்தை நிரூபிக்க வேண்டும். ஆக தேர்தல் நேரத்தில் விவசாயக் கடன் தள்ளுபடியென்றும், எண்ண முடியாத வகையில் குறைந்தப்பட்ச ஆதாய விலை அளிக்கிறோம் என்றும் விவசாயிகளுக்கு ஆசை வார்த்தை காட்டாமல், காலத்திற்கு ஏற்ப அடிப்படைகளில் மாற்றத்தை உறுதி செய்ய வேண்டும், அதில் முக்கியமான ஒன்று தான் இளைஞர்களை வேளாண்மையின் பக்கம் ஈர்ப்பது.

நமது இந்தியாவில் 1970-71 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் வேளாண்மைத் துறையின் பங்கு 41.7 சதவீதம், அதுவே அப்போது சேவைத் துறையின் பங்கு 40.9 சதவீதமாக இருந்தது, இப்போது 2016-17 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் துறையின் பங்கு 53 சதவீதமாக வளர்ந்து நமது நாட்டின் தற்போதைய முதுகெலும்பாக உள்ளது அதே நிலையில் வேளாண்மையின் பங்கு 17 சதவீதமாக குறைந்துள்ளது அதற்கு முரணாக நமது நாட்டின் மக்கள் தொகையில் 53 சதவீதத்தினர் வேளாண்மையையே தொழிலாக கொண்டுள்ளனர், ஆக சேவைத்துறையை நம்பியே நமது நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டுக் கொண்டிருக்க 2022 ஆம் ஆண்டிற்குள் வேளாண்மையின் வருவாய் இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நமது அரசாங்கத்தின் முயற்சியில் இளைஞர்களின் பங்கையும் வலுப்படுத்துவதில் நாட்டம் காட்ட வேண்டும்.

வேளாண்மையின் பங்கு 17 சதவீதமாக குறைந்துள்ளது அதற்கு முரணாக நமது நாட்டின் மக்கள் தொகையில் 53 சதவீதத்தினர் வேளாண்மையையே தொழிலாக கொண்டுள்ளனர்

2011 புள்ளிவிவரத்தின் படி 422 மில்லியனாக (34.8 சதவீதமென) அதிக இளைஞர்கள் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது, அதேப் போல வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களும் 363 மில்லியனாக அதிகமாக உள்ளனர் நமது நாட்டில். முதலில் உள்ளவர்களை இரண்டாவதுள்ளவர்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்பட வைப்பதில் தான் நமது நாட்டின் வளர்ச்சியின் வேகம் அடங்கியிருக்கிறது.

வேலை பளுவிற்கு அஞ்சுகிறார்கள், நிலையான வருமானம் இல்லாத தொழிலாக வேளாண்மையைக் கருதுகிறார்கள், நகரத்து வாழ்க்கையின் மோகம், தான் விவசாயி என்று சொல்வதை தரக்குறைவாக நினைக்கிறார்கள், திருமணம் செய்யும் போது விவசாயம் என்பது ஒரு தொழிலாகவே மதிக்கப்படுவதில்லை இப்படி பல, இளைஞர்களின் விவசாயம் ஆர்வமில்லாத நிலைக்குக் காரணங்களாக இருந்தாலும் பொருளாதார ரீதியாகவே பார்ப்பின் ஒரு குறிப்பிட்ட நிலத்தில், குடும்பத்தில் இருக்கும் நான்கு பேரும் சேர்ந்து விவசாயம் செய்தால் அந்த நிலத்தில் எடுக்கக் கூடிய போதிய வருமானத்தை மட்டுமே ஈட்ட முடியும், குடும்பத்தில் இருக்கும் அனைவரும் வேளாண்மையில் ஈடுபடும்போது வேலை ஆட்களின் கூலி குறைய மட்டுமே வாய்ப்பிருக்கிறது, நிலத்திலிருந்து எடுக்கக்கூடிய உற்பத்தியானது மாற்றம் காண வாய்ப்பில்லை. அதேப் போன்று அவ்வளவு பெரிய மாற்றம் வருமானத்திலும் சாத்தியமில்லை. இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கே தற்சார்பு கொண்ட ஒருங்கிணைந்த பண்ணை மூலம் அரசும் முயற்சித்து வருகிறது.

 

kalanipoo youth farming

 

இப்படியிருக்க ஒட்டுமொத்தமாக இளைஞர்கள் வேளாண்மையில் ஆர்வமில்லாதவர்கள் என்று சொல்லிவிட முடியாது. கிராமப்புற நகர்புற இளைஞர்கள் பலர் வேளாண்மையிலும் வேளாண் சார்ந்த தொழில்களிலும் சுயதொழில் தொடங்கி மிகுந்த ஆர்வத்துடன் சிறப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர். அவர்களை இன்னும் அதிகரிக்க வேண்டும் அதற்கான முயற்சியில் தான் நமது அரசாங்கம் முனைப்பு காட்டி வருகின்றது.

வேளாண்மையில் இளைஞர்களை அதிகரிக்க உள்ளார்ந்து பார்க்கும் போது மக்களின் மனநிலை, அரசாங்கத்தின் செயல் திட்டங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி என மூன்று பகுதிகளாக கவனிக்க வேண்டும்.

முதலாவது மக்களின் மனநிலை, உதாரணமாக தந்தை மாவட்ட ஆட்சியராக வர வேண்டுமென்று தீவிர முயற்சியுடன் பயிற்சி செய்து சிறு சிறு தவறுகளால் தோல்வியே கொள்கிறார், அதைக் கண்டு அவரது மகன் அதற்கு முயற்சி செய்யாமல் இருப்பாரா? தந்தையின் தோல்வியை ஆராய்ந்து தவறுகளை கலைந்து வெற்றி பெறுவதில் தான் அவர் தெரிவார், அதே தான் வேளாண்மையும், தந்தையின் அனுபவத்தோடு நம்முடைய புதிய சிந்தனையோடு அணுகும்போது வெற்றி நிச்சியம். நிலையான வருமானம் இல்லாத நிலையா? அந்த நிலையை மாற்றச் சிந்தியுங்கள். பொறியியல் படித்திருக்கிறீர்களா அல்லது வேறு துறையா உங்களது துறை சார்ந்து வேளாண்மைக்கு எப்படி உதவ முடியுமென சிந்தியுங்கள்.

1945 இல் அதுவரை இளங்கலை உயிரியல் படித்துவிட்டு மாறாக மீண்டும் வேளாண்மைக்காகத் தான் படிப்பேன் என்று இளங்கலை வேளாண்மை படிக்கச் சென்றவர் அப்போதைய இளைஞன் திரு. எம்.எஸ்.சுவாமிநாதன், உணவுப்பற்றாக் குறையை போக்கிய இந்திய ‘பசுமை புரட்சி’யின் தந்தை. திருமணத்தின் போது இழிவாக பார்க்கும் இதே வேளாண்மையைத் தான் அவர் ‘உயிர் காக்கும் தொழில்’ என்கிறார். எனவே பெற்றோர்களும் தங்களது மனப்போக்கை மாற்ற வேண்டும், இளைஞர்களும் தங்களது மனப்போக்கை மாற்ற வேண்டும், 4 ஏக்கர் நிலத்தை கிடப்பில் போட்டுவிட்டு நகரச் சம்பளம் ரூபாய் பன்னிரெண்டாயிரமே போதும் என்ற நிலையில் தான் இருக்கின்றனர், 4 ஏக்கரில் நீர் பற்றாக்குறையால் வேளாண்மை இல்லாவிட்டாலும் வேளாண் சார்ந்த தொழில் தாராளமாக தொடங்களாமே. உங்களது முனைப்பும் ஆற்றலும் தான் தேவை. அடுத்தவருக்கு உழைப்பதற்கு பதில் உங்களுக்காக உழையுங்கள்.

இரண்டாவது, அரசாங்கத்தின் முயற்சியாக சிறந்த திட்டங்கள் செயல்படுத்துதல். வேளாண்மையின் தோல்வி நிலை, இளைஞர்கள் அச்சத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது, அந்தத் தோல்வி தழுவாமல் இருக்கவே உற்பத்தி இடுபொருளுக்கு விலை மானியமும், உற்பத்தி பொருளுக்கு உரிய ஊதியமும், சிறந்த சந்தை கட்டமைப்பு வசதியும் அமைத்துத் தர வேண்டியது அரசின் ஆகக்கடமை.

அதற்கான பல திட்டங்களை அரசு வெளியிட்டு மக்கள் பயனுக்காக செயல் படுத்தி வருகிறது, அவை நிலையான வேளாண்மைக்கு தேசியக் கொள்கை ( National mission for Sustainable Agriculture), பிரதம மந்திரி அன்னதாதா வருவாய் பாதுகாப்பு இயக்கம் (PM AASHA) அதன் கீழ் ஆதரவு விலைத் திட்டம், விலைப் பற்றாக்குறை வழங்கும் திட்டம், தனியார் கொள்முதல் மற்றும் இருப்புச் சரக்கு முன்னோடித் திட்டம், இவைகள் விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு உரிய விலையை அளிக்க முயற்சி செய்து வருகிறது.

சந்தை கட்டமைப்பை எடுத்துக்கொண்டால் 22000 வேளாண் சில்லறைச் சந்தைகளை அரசாங்கம் விவசாயிகளுக்காக இந்த ஆண்டு தொடங்கியுள்ளது, மின் வேளாண் சந்தை (eNAM)யில் பதிவு செய்வதன் மூலம் வேளாண் உற்பத்தி சந்தைக் கமிட்டியில் (APMC) வர்த்தகம் செய்ய முடியும். உற்பத்தி அதிகமாகும் போது விலைச் சரிவால் சந்தைப் படுத்துவதில் சிரமம் ஏற்படுவதை தடுக்க இளைஞர்கள் புதிய முறைகளை உருவாக்க வேண்டும், பொருளை உருவாக்குவது மட்டும் போதாது அதனை இன்னும் சீராக வியாபாரம் செய்வதும் நம்முடைய கடமை என்பதை விவசாயம் செய்வோர் உணர வேண்டும் பதிலாக இடைத்தரகர் கையில் அந்த பொறுப்பை ஏற்றிவிட்டு விவசாயிகளைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாக தரகரின் வருமானம் உள்ளது. Swiggy, Zomato போன்ற நிறுவனங்கள் சந்தைப் படுத்துதல் மட்டுமே மையமாக வைத்து இளைஞர்களால் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வரும் சுயதொழில்களாகும், இதேப் போன்று வேளாண் உற்பத்தியான காளான், காய்கறிகள் இப்படி வியாபாரம் செய்வதில் இளைஞர்கள் முனைப்பு காட்டலாம்.

youth farming kalanipoo

 

விவசாயத்தில் இளைஞர்களை கவர்ந்து தக்க வைக்கும் திட்டமான ‘ஆர்யா’ (ARYA-Attracting and Retaining Youth in Agriculture) ஒரு ஆண்டிற்கு 200-300 இளைஞர்களுக்கு வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில் பயிற்சி அளித்துச் சான்றிதழ் வழங்கி வருகிறது, அந்த இளைஞர்கள் சான்றிதழ் கொண்டு வங்கிகளில் விவசாயக்கடன் வாங்கி தொழில் தொடங்க வாய்ப்பளிக்கிறது. இதில் மற்றொரு திட்டம் தான் கிராமப்புற தொழில் முனைவோர் விழிப்புணர்வு மேம்பாட்டுத் திட்டம் (Scheme READY-Rural Entrepreneurship Awareness Development Yojana), குறிப்பாக கிராமப்புற இளைஞர்களுக்காக செயலாக்கப்பட்டுள்ளது.

அத்தனையும் நமது தேடல்களில் தான் இருக்கிறது, இப்படி அரசு திட்டங்களும் அதன் சலுகைகளும் பற்றி படித்த இளைஞர்கள் எளிமையாக தெரிந்து அணுகும் வகையில் அரசு வலைதளத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண்மை அறிவியல் மையம் (KVK), விவசாயி குறை தீர்க்கும் மையம் (Kisan Call center) அனைத்தையும் பயன்படுத்தி வேளாண்மை செய்யும் இளைஞர்கள் கேள்வி கேட்டு அவர்களது தேவைகளை உரிமையுடன் பெற்று வேளாண்மையை எளிமையாக்க வேண்டும். இதேப் போன்று பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (PMFBY), வேளாண்மையில் நீர்ப்பாசனத் திட்டம் (PMKSY), பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டம் (Paramparagat Krishi Vikas Yojana) என பல திட்டங்களின் பயன்களை தெரிந்து கொண்டு அதனைக் கேட்டுப் பெறுவதில் முனைப்பு காட்ட வேண்டும்.
கூட்டுறவுச் சங்கங்களையும் இன்னும் முறைப்படுத்தி விவசாயிகள் பிரச்சனைகளை ஒருங்கிணைந்து தீர்க்கும் வகையிலும் செயலாற்ற வேண்டும், இவை அனைத்தும் படித்த ஆர்வமுள்ள இளைஞர்களால் எளிமையாக தாராளமாக முடியும். 1946 இல் அதுவரை இயற்பியல் படித்துவிட்டு டாடா நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு அதிலிருந்து விலகி பால் உற்பத்தி துறையில் ஆராய்ச்சி செய்து மேற்கொண்டு படிக்க முடிவு எடுத்த திரு. வர்கீஸ் குரியன் அப்போது இளைஞர் தான், அவர் தான் பின் நாளில் வெள்ளை புரட்சி செய்து அதிகமாக கிடைக்கப்பட்ட எருமை பாலை என்ன செய்வதென்று தெரியாமல் வீணாக்கிக் கொண்டிருந்த நிலையை மாற்றி பால் பொடியாக மாற்றி அதனை சந்தைப் படுத்துவதை சீராக்கி ‘அமுல்’ நிறுவனத்தைத் தொடங்கி நாட்டின் பொருளாதாரம் வலுவடையக் காரணமானார்.

ஐந்து ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்து வந்த பி காம் படித்த இளைஞர் சத்திய மூர்த்தி தற்போது சம்பந்தமற்று சென்னையில் தனியார் மருந்தகத்தில் மாதச்சம்பளமாக ஒன்பதாயிரத்திற்கு சொந்த ஊரைவிட்டு வந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார், அவரிடம் வேளாண்மையிலிருந்து விலகிய காரணத்தை கேட்ட போது “வேளாண்மையில் ஆர்வமதிகம் எனக்கு, இரண்டாண்டு வேளாண்மை செய்து விட்டுத் தான் இலாபம் பார்க்க முடியாமல் இங்கே வந்தேன், இலாபம் பார்க்க முடியாததற்கு முக்கியக் காரணம் டீசல் இன்ஜின் மூலம் இன்னும் நீர் பாசனம் மேற்கொள்வது தான், மின் மோட்டார் மூலம் நீர் பாசனத்திற்கு எழுதிப் போட்டு மூன்று வருடமாகியும் இன்னும் மின் இணைப்பு பெற முடியவில்லை, இரண்டு வருடமாக அதற்காக அலைந்துவிட்டு தான் இங்கே வந்தேன், இப்போது எனது அப்பா கரும்பு சாகுபடியை டீசல் இன்ஜின் மூலமே தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்” அரசின் செயல்பாடுகளில் இந்த அலைக்கழிப்பு பிரச்சனை முக்கியமானது, கடைநிலையில் நிகழக்கூடிய இந்தப் பிரச்சனை விவசாயம் செய்வோரை பொறுமை இழக்க வைக்கிறது, கட்டாயம் களைய வேண்டியது.

மூன்றாவதாக பார்த்தால், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் வேளாண்மை. திரு. எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் கூறும் போது “நமது நாட்டில் பெண்களும் இளைஞர்களும் விவசாயித்தில் தழைத்தோங்க முக்கியமான வழி தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயத்தை மேம்படுத்துவது தான்” என்றார். வேளாண்மையில் உள்ள வேலைப் பளுவையும் உற்பத்திச் செலவையும் குறைக்க தொழில்நுட்ப வளர்ச்சியோடு இளைஞர்கள் வர வேண்டும். சொட்டு நீர் பாசன முறை (Drip irrigation), தெளிப்பு நீர் பாசன முறை (Springler) இதில் இன்னும் புதிய முறைகளோடு நீர் மேலாண்மையை மேம்படுத்த தொழில்நுட்பத்தை நாடலாம். பள்ளி கல்லூரிகளில் வேளாண்மை கல்வியை மேம்படுத்தி மாணவர்களுக்கு அதில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும், அவர்கள் கற்பது எந்தவொரு பாடப்பிரிவாக இருப்பினும் அந்தப் பாடத்தின் மூலம் வேளாண்மையில் எவ்வகை பயனாற்ற முடியுமென்பதையும் கற்றுத் தர வேண்டும்.

youth farming kalanipoo

 

ஆளில்லா விமானம் (Drone) மூலம் நீர் மற்றும் பூச்சி மருந்து தெளிப்பது, இயந்திர உதவியுடன் நாற்று நடுவது, விதை தூவுவது என இயந்திர வளர்ச்சியை வேளாண்மையில் உட்படுத்த இளைஞர்கள் தேவை. மேலே கூறிய சேவைத்துறையின் பங்கு 53 சதவீதமாக இருக்கும் போது அந்த சேவைத்துறையை வேளாண்மைத் துறையில் ஈடுபடுத்துவதும் இளைஞர்கள் கையில் தான் இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு கொண்டு சேகரித்த பெரும் தரவுகள் (Big Data) மூலமும், பருவ நிலை மாற்றத்தை தெளிவாக ஆய்வதன் மூலமும், தேர்ந்த தொழில்நுட்பத்தோடு மண் பரிசோதனை செய்வதன் மூலமும் பயிரிட்டு பயன் பெற இளைஞர்கள் இன்னும் வேளாண்மையில் வர வேண்டும்.

விவசாய தொழில்நுட்ப மேலாண்மை மற்றும் பயிற்சி என்ற ‘ஆத்மா’ திட்டத்தின் (ATMA- Agriculture Technology Management and Training) கீழ் அரசாங்கம் ஒவ்வொரு கிராமங்களிலிருந்தும் 2 இளைஞர்கள் வீதம் தேர்ந்தெடுத்து வேளாண்மையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை பயிற்றுவிக்கிறது, மேலும் விவசாயிகளுக்கும் கருத்தருங்குகள் நடத்தப்படுகிறது, இப்படி இந்தியா முழுவதும் இந்த ஆத்மா திட்டம் 676 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது, அரசாங்கத்தின் இத்தனை நிலையங்களிலும் எத்தனை இளைஞர்கள் முறையாக பயனடைகிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கும் வகையில் இல்லை, எனவே தான் இளைஞர்கள் வாய்ப்புகளை தவற விடக்கூடாது, கேள்வி கேட்டு உரிமையுடன் பெற வேண்டும்.

அரசாங்கமும் அமல்படுத்துகின்ற திட்டங்கள் அதன் நோக்கத்தில் முழுமையடைகிறதா என்பதை முறையாக மேற்பார்வையிட்டு செம்மை படுத்த வேண்டும், திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியையும், திட்டத்தின் மூலம் பயன் பெறுவோரின் கட்டாய நிலையையும் கருத்தில் கொண்டு கடைநிலை வரை திட்டங்கள் சென்றடைவதை கவனமாக செயல்படுத்த வேண்டும்.
பல்வேறு வகையான மன அழுத்தத்தினால் இளைஞர்களின் தற்கொலை எண்ணிக்கையும் நமது நாட்டில் அதிகரித்து வருகிறது. வீட்டுத்தோட்டம், விவசாய நல மேம்பாட்டுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது போன்ற செயல்களாலும் மன அழுத்தத்திலிருந்து விலக வழி வகுக்க முடியும்.

‘விவசாயிகள்’ என்றாலே கண்ணங்கள் சுருங்கி நான்கு மடிப்புகளுடன் கூடிய முகமும், தோளில் துண்டும், கசங்கிய சட்டையும் ஓய்ந்து போய் வெடிப்புகளுடன் கூடிய பாதங்களும் உடைய பிம்பங்கள் மனதில் எழுவதை மாற்ற வேண்டும். நிலம் வளம் இல்லை என்று சொல்லாமல் கிடைத்த இடத்தில் மாடித் தோட்டம் அமைத்து தன்னிறைவு அடையும் வகையில் காய்கறிகள் வளர்த்தாலே நாம் விவசாயி தான், மாட்டிற்கு புல் அறுக்கும் கருக்கறுவாளில் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தாலும் நாம் விவசாயி தான், இப்படி எழுதுகின்ற என்னைப் போன்றோரும் விவசாயி தான், விவசாயம் செய்வோம் விஞ்ஞானத்தின் துணையோடு புதிய கைகளால்.

தொகுப்பு: சா.கவியரசன். உயிரித்தகவலியல் பட்டதாரி, கழனிப்பூ நிர்வாகத் தலைமையாக பொறுப்பாற்றி வருகிறேன்.

Mail: kaviyarasan411@gmail.com
Blog: FromAKP

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது