. . .

காடுகளை தண்ணீர் தொட்டிகளாக பார்க்க வேண்டும்- ஓசை காளிதாசன்

kalanipoo-ulaga vana naal

ணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்

– என்று திருவள்ளுவரை துணை கொள்ளாமல் வனங்களை பற்றிய மேடைப்பேச்சாளர்களும், கட்டுரையாளர்களும் இருப்பது சொற்பம், எனவே நானும் பல்லாயிர வருடங்களுக்கு முன்பே ஒரு நாட்டின் காடு தான் அந்நாட்டின் அரண் என்ற திருவள்ளுவரின் வாக்கை நினைவு கூர்ந்தே மார்ச் 21, உலக வன நாளான இன்று ஓசை தன்னார்வ அமைப்பை நடத்தி வரும் திரு.காளிதாசன் அவர்களுடனான கலந்துரையாடலை கழனிப்பூவில் பதிவு செய்கிறேன்.

கலந்துரையாடலுக்கு முன்பாக திரு காளிதாசன் அவர்களைப் பற்றி,… கனரா வங்கியில் பணிபுரிந்து வந்த காளிதாசன் அவர்கள் சுற்றுச்சூழல் கருத்தியலைப் பரப்புவதற்காக வங்கிப் பணியைத் துறந்துவிட்டு பதினைந்து ஆண்டுகளாக முழு நேரப்பணியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி மக்களிடம் பரப்புரை ஆற்றி வருகிறார்.  இமயமலையைக் காட்டிலும் மூத்திருக்கும் நமது நாட்டின் சிறப்பான மேற்கு தொடர்ச்சி மலைகள் பற்றி நன்கு அறிந்தவர், கோவையில் தன் நண்பர்களுடன் சேர்ந்து ‘ஓசை‘ என்ற சுற்றுச் சூழல் இயக்கத்தை நடத்தி வருகிறார், தமிழகக் கடலோர மேலாண்மை குழுமத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். அவருடன் கலந்துரையாடல்…

kalanipoo-ulaga vana naal

1# 2018ஆம் வருடம் உலக வன நாளில்  ‘வனங்கள் மற்றும் நிலையான நகரங்கள்’ என்ற மையக்கருத்தை எடுத்துக்கொண்டு நாம் அனுசரித்து வருகிறோம், அந்த நிலையான நகரங்களுக்கு காடுகளின் பங்களிப்பைப் பற்றி…

அதற்கு சரியான உதாரணமாக நம் கோயம்புத்தூர் நகரையே எடுத்துக்கொள்ளலாம். 1927ஆம் ஆண்டு, அப்போது தமிழ்நாட்டில் மிக மோசமான தண்ணீர் பிரச்சனையும், சுகாதாரப் பிரச்சனையும் கொண்ட நகரமாக இருந்தது தான் நம் கோவை நகரம். அடுத்து 1929ஆம் ஆண்டில் தான் சிறுவாணி நீர் கோவைக்கு வந்தது, அடுத்து அத்திக்கடவும் வந்தது, அதன் பின் தான் தண்ணீர் பிரச்சனை தீர்ந்து தொழில் நகரமாக பசுமையானதாக கோவை மாற்றம் கொண்டது. நகரத்தின் பசுமைக்கு வித்திட்ட நதிகளுக்கு முழு முதற் காரணம் காடுகள் தான். வட இந்திய நதிகள் இமயமலையில் உருவாகிறது, அது பனிமலை, ஆனால் நம் தென்னிந்திய நதிகள் உருவாகக்காரணம் காட்டின் பங்களிப்பே ஆகும். உச்சிப்பகுதியில் புல் வெளியும், மரங்களும் நிறைந்த முதிர்ந்த காடுகளை (Saturated forest) சோலைவனங்கள் என்று சொல்வார்கள், காலம்காலமாக பெய்கிற மழைநீரை அந்த பகுதி தேக்கி வைக்கும், எவ்வளவு அடை மழை பெய்தாலும் சோலைக்காடுகளில் வெள்ளப் பெருக்கு இருக்காது, மண்ணில் தேங்கிய நீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊறி பாறை இடுக்குகள் வழியாக அருவியாகி, ஓடையாகி, சிற்றாறாகும், அதிலிருந்து நதியாகும். அப்படித்தான் தென்னிந்திய நதிகள் எல்லாம் காடுகளிலிருந்து பிறக்கின்றன. நிலையான நகரங்கள் எனும் போது காடுகள் பாதுகாப்பிற்கும் நகரங்களின் வளர்ச்சிக்கும் நேருக்கு நேரான தொடர்பிருக்கிறது.

காடுகளை நாம் தண்ணீர் தொட்டிகளாக பார்க்க வேண்டும். அந்த காடுகள் பாதுகாப்பென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், நம்மால் மரங்களைத் தான் வளர்க்க முடியும், காடுகளை அல்ல. மரங்கள் என்பது உயிர், அதுவே காடுகள் என்பது உயிர்ச்சூழல் அதில் செடி, பாசி, பாறை வரை எல்லாவிற்கும் பங்குண்டு. அப்போது காடுகள் பாதுகாப்பிற்கு மனிதன் காடுகளுக்கு எதுவும் செய்யாமலிருத்தலே நன்று.

2# மலை பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களை பச்சை பாலை வனம் என்கிறார்களே அது பற்றி…

தேயிலைத் தோட்டங்கள் மட்டுமல்ல, Monoculture என்று சொல்லப்படும் ஒரே தாவரங்களை அதிக பரப்பளவில் வளர்க்கும் போது சூழலியல் பங்களிப்பென்பது குறைவு, அது தேயிலைத் தோட்டமென்றில்லை, தேக்குத் தோட்டமாக இருந்தாலும் தான். பிரிட்டிஷ்காரர்கள் வருவாய் பெயரில் அறியாமல் செய்தது தான் தேயிலைத்தோட்டம். அவர்கள் அப்படி செய்யாமல் இருந்திருந்தால் பல தண்ணீர் பிரச்சனைகள் இங்கு ஏற்பட்டிருக்காது. மழை பெய்தால் மட்டும் நீர் ஓடினால் அது ஆறு கிடையாது, மழை பெய்யாத காலங்களிலும் சோலைவனங்களில் தேக்கிவைக்கப்பட்ட நீர் கசிந்து ஆற்றில் ஓட வேண்டும். தமிழ்நாட்டில் மழை நாட்கள் 35-50 நாட்கள் தான், ஆனால் நமக்கு 365 நாளும் ஆற்றில் தண்ணீர் ஓட வேண்டும், அதற்கு காடுகள் வேண்டும், அந்த காடுகளை அழித்து உருவாக்கியது தான் தேயிலைத்தோட்டம், அவை போன்று மீண்டுமொரு பச்சை பாலை வனத்தை உருவாக்காமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

3# வனங்களை அழித்து வேளாண் நிலங்களை உருவாக்குகிறோம். அப்படியானால், அந்த வேளாண்மை என்பது மலைப் பகுதிகளில் எவ்வாறு இருத்தல் வேண்டும்?

இப்போது வனநிலங்கள், வனத்துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்படுகிறது, அதில் இன்று யாரும் வேளாண்மை செய்வதில்லை. ஆனால் இன்று வேளாண்மை நிலங்களாக இருப்பது ஒரு காலத்தில் காடுகளாக இருந்தது, இப்போது அது பட்டா போடப்பட்டு தனியார் நிலங்களாக்கப்பட்டு விட்டது. அதை நாம் பறிக்க முடியாது, அப்படித்தான் மலைப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் எல்லாம் வந்தன. இப்போது என்னவென்றால் அந்த இடங்களில் மக்கள் வேளாண்மையாவது செய்யட்டும், கட்டிடங்கள் ஏற்படுத்தாமல் இருந்தால் போதும் என்றளவுக்கு வந்துவிட்டது, இருந்தும் அங்கு கட்டிடங்கள் பெருகி வருகிறது.

4# பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை, வனத்துறை மூன்று பிரிவுகளாக பிரித்து வைத்திருக்கிறது அவை 1. காப்புக்காடு
2. சரணாலயம் 3. தேசியப்பூங்கா, இவை மூன்றிற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி…

1980ல் கொண்டு வந்த வனச்சட்டம் மூலம் மூன்று வகைக் காடுகளும் அரசால் பாதுகாக்கப்பட்டது, இங்குள்ள காடுகள் அனைத்துமே reserved forest என்றழைக்கப்படும் காப்புக்காடுகள் தான். ஒரு குறிப்பிட்ட உயிரினம் அல்லது பல்லுயிரினங்கள் அதிகமாக வாழும் காடுகளை சரணாலயம் என்று சொல்கிறோம். சரணாலயங்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மத்திய அரசின் நிதி கிடைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. காப்புக்காடுகளில் மலை வாழ் மக்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், சிறுவன மகசூல் (Minor Forest Produce) என்று சொல்லப்படும் சீமாற் புல் செய்தல், தேன் எடுத்தல் எல்லாம் மேற்கொள்ளலாம், ஆனால் அது சரணாலயங்களில் கட்டுப்பாடுகளோடு இருக்கும், சரணாலயத்திற்கும், தேசிய பூங்காவிற்கும் உள்ள வேறுபாட்டை பார்க்கும் போது தேசிய பூங்கா என்பது மனித குடியிருப்பே இல்லாத செழுமை மிக்க வனப்பகுதி எனப்படுவது.

5# யானை- மனித மோதல்கள் போன்ற பிரச்சனை தற்போது அதிகரித்து வருவது பற்றி…

விலங்குகள், காடுகளை விட்டு வெளி வருவதற்கு காரணம், அதனுடைய இடங்களை நாம் பயன்படுத்துவது தான், நிலங்களை பிரிக்கும் போது அவைகள் வாழ்ந்து வந்த இடங்களையும் நாம் பட்டா நிலங்களாக பிரித்து விட்டோம், அடுத்து காண்ட்டூர் கால்வாயிலிருந்து, மின்சாரத்திற்காக கொண்டு வரப்பட்ட பென் ஸ்டாக் வரை மனித மேம்பாட்டிற்காக காடுகளின் சூழலை சீர்குலைப்பதாக இருக்கிறது, அப்போது இது போன்ற பிரச்சனைகள் கட்டாயம் ஏற்படும். மனிதர்கள் உலகில் உள்ள எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்று நினைக்கக்கூடாது.

kalanipoo-ulaga vananaal
நன்றி-Mother Nature Network

6# ஆர்வக்கோளாரில் பல இளைஞர்கள் தெளிவான புரிதல் இல்லாமல், மலை ஏறுகிறேன் என்று சென்று காடுகளுக்கு மட்டுமில்லாமல் அவர்களுக்கும் சேர்த்தி பல பாதிப்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர், அதனால் பொதுவாக மலை ஏறுவது பற்றியும், அதனை மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும்…

இமயமலைப் போன்ற மலைகளில் ஏறுவது தான் ட்ரெக்கிங், அதனை சாகசம் (adventure) என்று சொல்வார்கள், அதற்கு சரியான உடல் தகுதியும் அவசியம். ஆனால் நம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி போன்ற இடங்கள் பறவைகள், விலங்குகளின் வீடு, இது சாகசம் செய்வதற்கான இடம் இல்லை. சுற்றுலா, சாகசம், கொண்டாட்டம் போன்ற மன நிலையோடு காடுகளுக்கு செல்லக்கூடாது, அப்படி சென்ற விளைவு தான் குறங்கணி போன்ற பாதிப்புகள். காடுகளை உணரும் மனநிலையோடு காடுகளுக்குச் செல்ல வேண்டும். அதற்கு அந்த காட்டைப்பற்றி நன்கு அறிந்த உள்ளூர் மக்களின் பங்களிப்பு கட்டாயமாகும். நம்முடைய இயற்கை ஆர்வமென்பது வேறு, காட்டைப் பற்றிய அறிவு என்பது வேறு. தவறினால் காடுகளுக்கும் ஆபத்து, நமக்கும் ஆபத்து. அப்படி கல்லூரியிலிருந்து செல்பவர்கள் கொண்டாட்ட மனநிலையோடு இல்லாமல் காட்டைப் பற்றின கள அறிவு உள்ளவர்களின் பங்களிப்போடு மலை ஏறுதல்களை மேற்கொள்ளலாம்.

7# சுற்றுலா செல்வது மூலமாக காடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி…

சுற்றுலா என்றால் கோவில்களுக்கும், கடலுக்கும், சிறப்பான சுற்றுலா தளங்களுக்கும் செல்வார்கள், ஆனால் இப்போது இயற்கை ஆர்வம் என்ற ஈடுபாட்டில் காடுகள் பக்கம் திரும்பியுள்ளனர், அடர்ந்த காடுகளுக்குள் நட்சத்திர விடுதி, களியாட்டம், இரவு சஃபாரி, ஃபையர் கேம்ப் என்று வருவாய்க்காக சுய தொழில் முனைவோரே புதிய வழியாக இதனை தேர்ந்தெடுத்து, ‘காடுகளுக்குள் இரவு சஃபாரி’ என்றே மக்களிடம் விளம்பரம் செய்து வருகின்றனர்.

இது அங்குள்ள விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இதனை தடுக்கலாம். உண்மையான இயற்கை ஆர்வலரென்றால் இயற்கைக்கு எதிராக எந்த செயலும் செய்யக்கூடாது, ஆனால் சுற்றுலா என்ற பெயரில் இயற்கை ஆர்வலராக ஏமாந்து போவதோடு காடுகளையும் சிதைக்கிறார்கள்.

8# மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மரங்களைப் பற்றி…

641 வகையான மரங்கள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது, அதில் ஏறக்குறைய 360 மரங்கள் இந்த  பகுதியை தவிற வேறு எங்கும் காணப்படுவதில்லை (endemic species). அந்த மாதிரியான மரங்களை கட்டாயமாக காக்க வேண்டும்.

forest day western ghat

 

9# இன்றைய வனத்துறை அதிகாரிகளின் நிலை பற்றியும்,  மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவதைப் பற்றியும்…

நம்மிடம் 17-20% காடுகள் இருக்கின்றன, அதை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது வனத்துறை, அத்துறையில் இப்போது பல விதமான பலவீனங்கள் உள்ளன, 1950 களில் 5000 களப்பணியாளர்களும், 8000 காவலர்களும் இருந்தனர். இப்போது காவலர்கள் ஒன்றரை லட்சம் பேர் இருக்கின்றனர், ஆனால் களப்பணியாளர்கள் அதே 5000 பேர் தான். அப்போதைய நிலையைக்காட்டிலும் யானை விரட்டுவது, தீ விபத்துக்கள் போன்ற பல வேலைப்பளுவும் களப்பணியாளர்களுக்கு அதிகரித்திருக்கும் நிலையில் அரசு அவர்களுக்கான பணியிடங்களையும் அதிகப்படுத்தி முறையாக நியமிக்க வேண்டும். Eco tourism என்பது இயற்கையால் வருமானம் ஈட்டுவதைக் காட்டிலும் இயற்கையை மற்றவர்களுக்கு கற்பிக்கப்படுவதில் முக்கியத்துவம் கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டைக் காப்பாற்றுகின்ற இராணுவ வீரனின் மன நிலையோடு வனத்துறை மாணவர்கள், காடுகளை அடுத்த தலைமுறைக்காக காப்பாற்ற வேண்டும். அந்த மாணவர்கள் அவர்கள் படித்த காட்டைப் பற்றின அறிவை சமூகத்திற்கு ஏதாவது ஒரு வகையில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

10# வனப்பகுதியை பொறுத்த வரை தற்போது தேவைப்படும் சட்ட திட்டங்கள் பற்றி…

1972 ஆம் இந்திய வன உயிரினச் சட்டம், 1980 ஆம் ஆண்டு வனச்சட்டம், பல்லுயிர் பாதுகாப்புச் சட்டம் என பல சட்டங்கள் வனப்பகுதியை பாதுகாக்க இருக்கின்றன, இருப்பினும் காடுகள் மட்டுமில்லாமல் காட்டை ஒட்டிய நிலப் பகுதிகளும் இப்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. அதனால் காடுகள் மட்டுமின்றி காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மனித-யானை மோதல், நீர் அசுத்தம், கட்டிடமயமாதல் போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன, அதற்காக அதனை தடுக்க சிறப்பான சட்டங்கள் வேண்டும், அந்த சட்டத்திற்கான பரிந்துரையை ஏற்படுத்தி மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்கத் தான் மாதவன் காட்கில் குழு, கஸ்தூரி ரங்கன் குழு போன்றமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

 

தொகுப்பு: சா. கவியரசன்வேளாண் கல்லூரியில் உயிரித்தகவியல் பட்டதாரி. விகடன் மாணவ பத்திரிகையாளர். ‘கழனிப்பூ’ வலைதளத்தின் நிர்வாகத் தலைமையாக பொறுப்பு வகித்து வருகிறேன். kaviyarasan411@gmail.com

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது