. . .

உரங்கள் வளர்ந்த விதம் – பகுதி-6

kalanipoo fertilizer part 6

வேளாண்மையில் உரங்கள் ஏன் ? எதற்கு ? எப்படி?- பகுதி-6

இலை தழைகள், தொழு எரு, புண்ணாக்கு போன்றவற்றில் எல்லாச் சத்துக்களும் உள்ளன. ஆனால், மிக மிகக் குறைவான அளவே உள்ளன. இவை பயிரின் தேவைக்கேற்ப கிடைப்பதில்லை. ஆகவே, அதிக விளைச்சல் பெற்றிட இரசாயன உரங்களையே நம்பியிருக்கின்றோம்.

1. நேரடி உரங்கள் Straight Fertilizers:

இரசாயன உரங்களை தயாரிக்க ஆரம்பித்த காலத்தில் அம்மோனியம் சல்பேட், சூப்பர் பாஸ்பேட் போன்ற உரங்கள் தயாராகின. இவை, ஒரே ஒரு சத்தினை மட்டுமே பயிருக்கு தருகின்றனஇவ்வரிசையில்,

தழைச்சத்து உரங்களான யூரியா, அம்மோனியம் குளோரைடு போன்றவைகளும், மணிச்சத்து உரங்களான ராக் பாஸ்பேட், சூப்பர் பாஸ்பேட் போன்றவைகளும், சாம்பல் சத்து உரமான பொட்டாசியம் குளோரைடு போன்றவைகளும் அடங்கும்.

இந்தக் கட்டுரையின் பகுதி 5 படிக்க

2. கலப்பு உரங்கள் Mixed Fertilizers:

ஒவ்வொரு பயிருக்கும் வெவ்வேறு அளவுகளில் சத்துக்கள் தேவைப்படுகின்றன. அதனை ஆராய்ச்சியாளர்கள் அளவிட்டிருக்கிறார்கள். பொதுவாக பயிர்களானது தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துக்களை கீழ்கண்ட விகிதத்தில் எடுத்துக் கொள்கின்றன.

  • நெல், பருத்தி, மிளகாய், காய்கறிகள் 2:1:1

  • வேர்க்கடலை, மல்லிகை, ரோஜா 1:2:3

  • பயிறு வகைகள் 1:2:0

  • மரவள்ளிக்கிழங்கு 1:1:2.5

  • வாழை 3:1:9

பாமர விவசாயிகள் ஒரு சத்து மட்டுமே தருகின்ற ஓரிரண்டு உரங்களை மட்டுமே உபயோகிக்கின்றனர். இதனால், மகசூல் கூடுவதில்லை. மாறாக பூச்சிகளும் நோய்களும் பெருகின. வயது கூடியது. பயிர் சாய்ந்தது. இதைக் கண்ட அரசானது, பயிருக்கேற்றவாறு பல்வேறு விகிதத்தில் உரங்களைக் கலந்து விற்பதற்கு பல நிறுவனங்களுக்கும் உரிமம் வழங்கியுள்ளது.   

kalanipoo composite fertilizer

இந்நிறுவனங்கள் டிஏபி, யூரியா, பொட்டாசியம் போன்ற உரங்களை, ஆட்களைக் கொண்டு கலந்து, மூட்டை போட்டு விற்பனை செய்கின்றன. எடைக் குறைவை சரிகட்ட ஜிப்சம், டாலமைட், மணல் போன்ற குறை நிரப்பிகளும் சேர்க்கப்படுகின்றன. இதற்கு கலப்பு உரங்கள் Standard Mixtures எனப் பெயர். கடைகளில் 2,7,10,12,18 எனப் பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன.

கலப்பு உரங்கள் மனித சக்தியால், கூலி ஆட்களைக் கொண்டு, ஒப்பந்த முறையில், மண் வெட்டியால் கலக்கப்படுகின்றன. இதனால், கலவை சரியான விகிதத்தில் கலப்பதில்லை. மேலும், வியாபாரிகள் லாப நோக்கம் கருதி தரம் குறைந்த உரங்களையே கலந்து விடவும் செய்கின்றனர். பாதிக்கப்படுவது என்னெவோ பாமர விவசாயிகள் தான்.

தமிழகத்தில் மட்டும் தான் கலப்பு உரங்கள் தயாரித்து விற்க முடிகிறது. ஆனால் நம் அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கேரள மாநில உரக்கடைகளில் விற்கப்படுவதில்லை. காரணம் அங்கே தடை செய்து பல வருடங்களாகி விட்டன.

3. இணைப்பு உரங்கள் Compound Fertilizers:

  • கலப்பு உரங்கள் தனித்தனியாக, தூசியாக இருக்கின்றன. இதனால், பயிருக்கு சரியான விகிதத்தில் உபயோகிக்க முடியவில்லை. ஆகவே, தற்போது ரசாயன உரங்களை இயந்திரத்தின் மூலமாக கலந்து, உருண்டை வடிவமாக்குகின்றனர். இதற்கு இணைப்பு உரம் (காம்பவுண்டு பெட்டிலைசர்) எனப் பெயர்.

  • கடைகளில் கிடைக்கும் பாமணி 17:17:17, விஜய் 17:17:17 என்ற உரங்கள் இணைப்பு உரங்களே. இவை குருணையாக இருந்தாலும் கலப்பு உரத்தின் மறு அவதாரமே ஆகும். இவற்றில் மணல் கலப்பும் உண்டு. தண்ணீரில் கரைத்துப் பார்த்தால் உரங்களுடன் கலந்திருக்கும் மணல் அடியில் தங்கியிருப்பது தெரியும்.

kalanipoo fertilizer

4. காம்ப்ளக்ஸ் உரங்கள் Complex Fertilizers:

உரங்களை கலப்பதற்குப் பதிலாக நவீன ஆலைகளில் உரச்சத்துக்களின் ரசாயனக் கலவையையே குருணைகளாக்குகின்றனர். இதன் ஒவ்வொரு குருணைகளிலும், ஒவ்வொரு இம்மியிலும் கூட, ஒரே மாதிரியான சத்துக்களே இருக்கும்.

இதனையே காம்ப்ளக்ஸ்Complex (கூட்டு உரம்) என்கிறோம். டிஏபி, 20:20 போன்றவை காம்ப்ளக்ஸ் உரங்களாகும். ஆம், உண்மையான உரத்தை நீரில் கரைத்துப் பார்த்தால், மணல் இருக்காது. ஏனெனில், காம்ப்ளக்ஸ் என்பது ரசாயன உரங்களின் கூட்டு கலவையாகும்.

தொடரும்


கட்டுரையாளர்கள்:

1. முனைவர். .பாபு, இணைப் பேராசிரியர், உழவியல் துறை, வேளாண் புலம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

தொடர்புக்கு: agribabu74@gmail.com, அலைபேசி எண் : 9486836801.

2. மு.ஜெயராஜ்., உதவிப் பேராசிரியர் (உழவியல்), பயிர் மேலாண்மைத் துறை, தொன் போஸ்கோ வேளாண்மைக் கல்லூரி, சகாயத்தோட்டம், வேலூர் மாவட்டம்.

தொடர்புக்கு: jayarajm96@gmail.com அலைபேசி எண் : 8220851572.

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது