. . .

வேளாண்மையில் உரங்கள் ஏன் ? எதற்கு ? எப்படி? பகுதி-3

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!”

வாழ்வு வளம் பெற 16 பேறுகள் பெற வேண்டுமென சான்றோர்கள் வாழ்த்துவர். பயிருக்கு உயிரூட்டவும் 16 வகைச் சத்துக்கள் வேண்டுமென விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 16 வகைச் சத்துக்களும் நிறைவாகக் கிடைத்தால் தான், விவசாயிகள் நினைத்த மகசூல் நிச்சயம் கிடைக்கும். இச்சத்துக்களின் தேவையானது பயிருக்குப் பயிர் கொஞ்சம் கூடவோ குறையவோ இருக்கும். 17-வதாக நிக்கல் (Nickel) என்ற சத்தும் பயிர் வளர்ச்சிக்கு தேவை என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர், சிலர் நிக்கல் பயிர் வளர்ச்சிக்கு தேவையில்லை என்றும் கூறி வருகின்றனர். ஆக நிக்கலைப் பற்றி இருவேறு கருத்துக்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்திய நாட்டின் சூழலில் அதைப்பற்றி பெரிதாக ஆய்வுகள் எதுவும் இல்லை.

இந்தக் கட்டுரையின் முந்தைய பகுதியான பகுதி இரண்டை படிக்க…

இயற்கை தந்த இலவசப் பரிசுகள்!

காற்றிலிருந்து – கார்பன், ஆக்ஸிஜன் என்ற 2 சத்துக்களும், நீரிலிருந்து – ஹைட்ரஜன் என்ற சத்தும் பயிருக்கு கிடைக்கின்றன. இம்மூன்று சத்துக்களும் இயற்கை அன்னையின் இலவசப் பரிசுகள்.

பேரூட்டங்கள்:

கீழ்க்கண்ட 6 வகையான சத்துக்களும் பயிருக்கு நிறைய தேவைப்படுகின்றன. ஆகவே, பேரூட்டங்கள் (Macro Nutrients) என்று கூறுகின்றோம்.

      தழைச் சத்துநைட்ரஜன் (N)

     மணிச்சத்துபாஸ்பரஸ் (P)

     சாம்பல் சத்துபொட்டாசியம் (K)

     சுண்ணாம்பு சத்து கால்சியம் (Ca)

     கந்தக சத்துசல்பர் (S)

     வெளிமச்சத்துமக்னீசியம் (Mg)

உரங்கள்-கழனிப்பூ

நுண்ணூட்டங்கள்:

கீழ்க்கண்ட 7 வகையான சத்துக்களும் பயிருக்கு கொஞ்சமாகவும், ஆனால் அவசியமாகவும் தேவைப்படுகின்றன. ஆகவே, இவற்றை நுண்ணூட்டங்கள் (Micro Nutrients) என்றும் கூறுகின்றோம்.

     இரும்புஅயர்ன் (Fe)

     தாமிரம்காப்பர் (Cu)

     துத்தநாகம்ஜிங்க் (Zn)

     மாங்கனீசுமாங்கனீஸ் (Mn)

     போரான்போரான் (B)

     குளோரின்குளோரின் (Cl)

     மாலிப்டினம்மாலிப்டினம் (Mb)

நுண்ணூட்டங்களின் தேவையோ, சாப்பாட்டுக்கு உப்பு சேர்ப்பது போல கொஞ்சமே, ஆயினும் அவற்றின் செயல்பாடுகளைப் பொறுத்த வரை முக்கியமானவைகள். பயிரின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமானவைகள். ஆம், மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது.

பயிர் அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் பேரூட்டங்களையும், நுண்ணூட்டங்களையும் மண்ணின் மூலமாகவோ அல்லது இலை வழி தெளிப்பு மூலமாகவோ நாம்தான் கொடுத்தாக வேண்டும், பற்றாக்குறை ஏற்பட்டால் பயிர் நோய்வாய்ப்படும். அதனால் மகசூலும் அதன் தரமும் குறையும். ஆம்; பசி வந்தால் பத்தும் மறந்து போகும்.

முக்கியம்! முக்கியம்! மூன்று சத்துக்கள் முக்கியம்!

இந்த 16 வகையான சத்துக்களிலும் முக்கியமான சத்துக்கள் மூன்று. அவை தழை (N), மணி (P) மற்றும் சாம்பல் (K). இவை மூன்றையும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். இச்சத்துக்களின் பணிகளைப் பற்றி தெரிந்து கொண்டால் தான் பயன்பாடுகள் புரியும். இச்சத்துக்கள் கூடினால் என்னாகும்? குறைந்தால் என்னாகும்? என்றெல்லாம் அறிந்து கொண்டால் தான், குறைந்த உரத்தில் கூடுதல் மகசூல் பெற முடியும். இதைப்பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.

தொடரும்


கட்டுரையாளர்கள்:

1.முனைவர்..பாபுஇணைப் பேராசிரியர், உழவியல் துறை, வேளாண் புலம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்தொடர்புக்கு: agribabu74@gmail.comலைபேசி எண் : 9486836801.

2.மு.ஜெயராஜ்தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூதறிவியல் வேளாண்மை (உழவியல்) படித்து வருகிறார். விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித் திட்டத்தில் ஓராண்டு காலம் பணியாற்றி சிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றவர். பகுதி நேரமாக சில இணையதளங்களில் வேளாண்மை, கல்வி, வேலைவாய்ப்பு குறித்து எழுதி வருகிறார்.

தொடர்புக்கு: jayarajm96@gmail.com

அலைபேசி எண் : 8220851572.

Twitter:  https://twitter.com/jayarajmuthusmy

நன்றி: The Agraria e-Magazine (சுற்றுசூழல் மற்றும் வேளாண் மின் இதழ்)