. . .

வேளாண்மையில் உரங்கள் ஏன் ? எதற்கு ? எப்படி? பகுதி-2

வேளாண்மை உரங்கள்-kalanipoo

உயிர்களை காக்கும் உரங்கள்”

ந்த தலைப்பு உங்களுக்கு மிகவும் புதுமையானதாக இருக்கலாம். உயிர்களை கொல்லும் உரங்கள் என்பது தான் நீங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக படித்து கொண்டிருக்கும் செய்தியாக இருக்கும். உரங்கள் என்பது மனித குலத்தை அழிக்க கிளம்பியுள்ள அணு ஆயுதம் அல்லது உயிரியல் ஆயுதம் என்பது போல் இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதனைப் பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிந்து கொள்ள வரலாற்றின் சில பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம். இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரையில் உலக மக்கள் தொகை அதிகரிப்பு சீராகவே இருந்தது. கொடிய நோய் நொடிகளாலும், போர்களாலும், ஒரு சில தலைவர்களின் சித்தாந்த வெறியாலும், பசி பட்டினியாலும் இறப்புவிகிதம் என்பது அதிகமாகவே இருந்தது. முன்பெல்லாம் ஒரு மில்லியன் மக்கள் தொகை அதிகரிக்க ஒரு நூற்றாண்டு தேவைப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பின் இந்த நிலை மாறத் தொடங்கியது.

1960-ல் 3 பில்லியனான மக்கள் தொகை அடுத்த 10 ஆண்டுகளில் 4 பில்லியனாக மாறியது. அடுத்த 12 ஆண்டுகளில் 5 பில்லியனாக மாறியது. 2010-ல் 7 பில்லியனாக அதிகரித்தது. ஆனால் மக்கள் தொகை பெருகிய அளவு விளை நிலங்கள் பெருகவில்லை.

17-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர் மால்தூசின் கருத்துப்படி உலகில் மக்கள் தொகை பெருக்கத்தின் விகிதத்திலும், உணவு உற்பத்தி கூட்டல் விகிதத்திலும் வளர்கிறது. போர், பட்டினி, நோய், வறுமை போன்றவற்றின் மூலம் தொடர்ந்து மக்கள் அதிகளவில் இறப்பதாலேயே மீதி உள்ள அனைவருக்கும் உணவு கிடைக்கிறது என்றார். அந்த கூற்றுப்படி 1970 களில் மிகப்பெரிய பேரழிவு வந்து பட்டினியால் பெரிய அளவு மக்கள் தொகை குறைந்திருக்க வேண்டும். இதன் மூலம் ஏழை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் பெரிய அளவில் மக்கள் பட்டினியால் இறந்திருக்க வேண்டும். இந்த பேரழிவிலிருந்து உலகை காக்க வந்தது தான் பசுமை புரட்சி.

இந்தக் கட்டுரையின் பகுதி ஒன்றை படிக்க…

பசுமைப்புரட்சி என்பது குறுகிய நிலப்பரப்பில் அதிக அளவு சத்துக்களை உண்டு அதிக அளவு விளைச்சலை கொடுக்கும் பயிர்களை வளர்ப்பதே ஆகும்பயிருக்கு தேவையான அதிகப்படியான உணவை உரங்கள் மூலம் கொடுக்கிறோம். எனவே உரங்களின் தேவை என்பது காலத்தின் கட்டாயம் என்பதே உண்மை. பல வருடங்களாக தழைச்சத்து சுழல் (Nitrogen cycle) பற்றி ஆராய்ந்து வரும் ஸ்மில் என்ற விஞ்ஞானியின் கூற்றுப்படி தற்போது 40 சதவித மக்கள் உயிர் வாழ்வது ஹேபர்போஷ் கண்டுபிடித்த அம்மோனியா தயாரிக்கும் முறையின் உதவியால் தான்.

வேளாண்மையில் உரங்கள்-kalanipoo

இன்னொன்றையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பயிர்களின் வேருக்கு, தான் எடுக்க போகும் சத்து உரத்திலிருந்து வருகிறதா? அல்லது இயற்கையில் கிடைக்கும் கழிவுகளிலிருந்து கிடைக்கிறதா? என்று தெரியாது. பயிர்களுக்கு இரண்டுமே ஒன்று தான். கீழே உள்ள அட்டவனையை பார்த்தால் உரங்களால் ஏற்பட்டுள்ள உற்பத்தி பெருக்கத்தை அறியலாம்.

            வருடம்

உர உபயோகம்

(மி. டன்)

உர உபயோகம்

(கிலோ/ஹெக்டர்)

உணவு உற்பத்தி

(மி. டன்)

       1951-52 0.066 0.6 52
       2001-02 17.3 91.5 212
       2002-03 16.7 84.9 182.6
       2003-04 18.47 97.1 204.6
       2005-06 20.34 106.9 208.6
       2006-07 22.04 115.6 211.8
        2017 69.76 143.7  272


மேலே உள்ள அட்டவணையை பார்த்தால் இன்னொரு உண்மையும் புரியும்
. கடந்த சில வருடம் முன்பு வரை நாம் அளிக்கும் உரத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க விளைச்சல் அதிகரித்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக நிலத்தில் இடும் உரத்தின் அளவு அதிகரித்தாலும் விளைச்சல் சதவிகிதம் முன்பைப் போல் அதிகரிப்பதில்லை.

இதற்கு முக்கிய காரணங்கள்:

 1. பயிரின் தேவைக்கேற்ப உரத்தை அளிக்காமல் அதிகப்படியாக இடுவது,
 2. சமச்சீரின்றி உரத்தை உபயோகிப்பது,
 3. தழை, மணி மற்றும் சாம்பல் சத்து கொண்ட உரங்களை மட்டும் அதிகம் இட்டு மற்ற தேவையான சத்துக்களை இடாமல் இருப்பது,
 4. இயற்கையான உரங்களை சுத்தமாக அளிக்காமல் இருப்பதால் அங்கக கார்பன் (Organic carbon) குறைவாக இருப்பது,
 5. அலுமினிய அபாயம் (Aluminium toxicity), அமிலத்தன்மை (Acidity) அதிகம் மண்ணில் ஏற்படுவது,
 6. உவர் மற்றும் உப்புத்தன்மை (Salinity and Alkalinity) அதிகரிப்பது.                                                                                         

இதற்குத் தீர்வு தான் என்ன? பயிருக்கு இயற்கை உரமும் அவசியம்வேதியல் உரங்களும் அவசியம் மண்ணில் உயிர்த் தன்மை மற்றும் அதன் மற்ற குணங்களை காக்க இயற்கை உரங்கள் அவசியம். இயற்கை உரத்தால் தர முடியாத சத்துக்களை வேதி உரத்தின் மூலம் கொடுக்கலாம். உரங்களை கணக்கின்றி இடுவதை தவிர்த்து அறிவியல் முறைப்படி மண்ணை பரிசோதனை செய்து, சரியான நேரத்தில், சரியான முறைப்படி அளிக்க வேண்டும்.

 

 • இரசாயன உரம் – அது காலத்தின் கட்டாயம். அறிவியல் நமக்கு தந்த வரம்.

 • இதனை மிகச் சரியாகத் தெரிந்து கொண்டு உபயோகித்தால், செலவைக் குறைத்து சிறப்பான மகசூலும் எடுக்கலாம்.

 • அதிக உரம் = அதிக செலவு – அதிகமான பூச்சிகளும் நோய்களும்

 • குறைந்த உரம் = குறைந்த மகசூல் – நாட்டுக்கும் வீட்டுக்கும் நஷ்டம்.

 • சரியான அளவு உரம் = நிறைவான மகசூல் – நாம் அறிய வேண்டிய ரகசியம்.

 • ஆம்; உரம் – அறிவியல் தந்த வரம். ()ரத்தை சரியாகப் பயன்படுத்துவோம். வாழ்வில் வளம் பெறுவோம்.               

 • 16 வகையான சத்துக்களைப் பற்றியும், அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும், அவற்றைத் தரும் உரங்களைப் பற்றியும், உரச் செலவைக் குறைக்கும் வழிமுறைகளைப் பற்றியும் அடுத்த தொடரில் காண்போம்.

தொடரும்..

இந்தக் கட்டுரையின் அடுத்த பகுதியைப் (பகுதி 3) படிக்க…


கட்டுரையாளர்கள்:

முனைவர்..பாபு, இணைப் பேராசிரியர், உழவியல் துறை, வேளாண் புலம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். தொடர்புக்கு: agribabu74@gmail.com, அலைபேசி எண்: 9486836801.

மு.ஜெயராஜ், தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூதறிவியல் வேளாண்மை (உழவியல்) படித்து வருகிறார். விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித் திட்டத்தில் ஓராண்டு காலம் பணியாற்றி சிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றவர். பகுதி நேரமாக சில இணையதளங்களில் வேளாண்மை, கல்வி, வேலைவாய்ப்பு குறித்து எழுதி வருகிறார்தொடர்புக்கு: jayarajm96@gmail.com , அலைபேசி எண் : 8220851572. Twitter:  https://twitter.com/jayarajmuthusmy

நன்றி: The Agraria e-Magazine (சுற்றுசூழல் மற்றும் வேளாண் மின் இதழ்)

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது