. . .

வேளாண்மையில் உரங்கள் ஏன் ? எதற்கு ? எப்படி? பகுதி-1

உரம்

ண் என்பது பயிர் வளர ஏற்ற இடமாக திகழ்கிறது. மண் என்பது இயற்கை நமக்கு அளித்த பெருங்கொடை ஆகும். அதில் பயிர் வளர்வதற்கு முக்கியமாக 16 விதமான சத்துக்கள் தேவைப்படுகின்றன. இயற்கை உரங்கள் மற்றும் செயற்கை உரங்கள்
இவ்விரண்டுமே பயிர்களின் சத்துத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. இதில் இரசாயன (செயற்கை) உரங்களை மண்ணில் இட்டால் மண்வளம் பாதிக்கிறது, அதன் மூலம் கிடைக்கும் உணவில் விஷம் இருக்கிறது என்கிற பல்வேறு பரப்புரைகளை கேள்விபட்டிருப்பீர்கள். இந்த உலகில் எந்த ஒரு பொருளை எடுத்து கொண்டாலும் ஒரு வகையில் நன்மை பயக்கும் போது ஒரு புறம் கண்டிப்பாக தீமை பயக்கும். ஆனால் அந்த பொருளால் தீமை பயக்காமல் நன்மை மட்டும் ஏற்படும் வகையில் பயன்படுத்தும் திறமை பயன்படுத்தும் நபர்களைப் பொறுத்ததே. இன்னொரு புறம் இயற்கை உரங்களை மட்டும் இட்டால் போதும் பயிர் நன்றாக மகசூல் தந்து விடுமா என்றால் சந்தேகம் தான். காரணம் இயற்கை உரங்களை இடும் போது பயிர்களுக்கு உடனடியாக சத்துக்கள்
கிடைப்பதில்லை. எடுத்துக்காட்டிற்கு இன்று எருவை மண்ணில் இடுகிறீர்கள் என்றால் அது மண்ணின் தன்மையை பொருத்தும் பயிரைப் பொருத்தும் எருவின் சத்தினை பயிர் எடுத்துக்கொள்ள குறைந்தது ஒரு மாதத்தில் இருந்து 3 மாதம் ஆகின்றது. அதேபோல கால்நடைகளே குறைந்து போன இக்காலத்தில் பயிர்களுக்கு தேவையான இயற்கை உரங்கள் போதிய அளவில் கிடைப்பதில்லை. “சட்டீல சோறு இருந்தா தான அகப்பைல வரும்” என்று எங்க பாட்டி சொல்லும் வரிகள் தான் இதற்கு பொருந்தும். எனவே செயற்கை உரங்கள் இடுவது என்பது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அத்தியாவசியம் ஆகின்றது.

அதனால் தனியாக செயற்கை உரத்தினை மட்டும் இட்டால் போதுமா? அதை மட்டும் இட்டால் மண் வளம் பாதிக்காதா? என்ற கேள்வி எழலாம்.

தமிழக அரசும் சரி, வேளாண்மைத் துறை அதிகாரிகளும் சரி, வேளாண் பேராசிரியர்களும் சரி எந்த ஒரு பயிருக்கும் கடைசி உழவின் போது அடியுரமாக இயற்கை உரங்களை இட்டுவிட்டு தான் பின்பு செயற்கை உரம் இட வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். ஆக இரண்டையும் சரியான விகிதத்தில் சரியான நேரத்தில் மண்ணில் இடும் போது எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் மண்வளமும் பாதுகாக்கப்படும் என்பதே இதற்கு காரணம். அறிவியலைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்கும் அடிப்படை உண்மையை புரிய வைக்க இந்தத் தொடர் அடித்தளமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

உழவின் போது அடியுரமாக இயற்கை உரங்களை இட்டுவிட்டு தான் பின்பு செயற்கை உரம் இட வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். ஆக இரண்டையும் சரியான விகிதத்தில் சரியான நேரத்தில் மண்ணில் இடும் போது எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் மண்வளமும் பாதுகாக்கப்படும் என்பதே இதற்கு காரணம்.

 

உணவும், உரமும் இரயில் தண்டவாளங்களைப் போன்ற இணைபிரியா கோடுகள் ஆகும். 2018-ம் ஆண்டின் நிலவரப்படி இந்தியாவின் நிலப்பரப்பில் 139 மில்லியன் ஹெக்டேர் அளவிற்கு விவசாயம் செய்யப்படுகிறது. நிலம் குறைவாகவும் மக்கள் தொகை மற்றும் கால்நடைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவும் இருப்பதை நாம் உணர வேண்டும். இந்தியாவின் தனிநபர் நில அளவு மிக வேகமாக குறைந்து வருகிறது. அதாவது 1950-ல் 0.34 ஹெக்டேர் என்ற அளவிலிருந்து தற்போது 0.10 ஹெக்டேராக குறைந்துள்ளது. அதாவது தற்சமயம் ஒரு ஹெக்டேர் நிலத்தை நம்பி சுமார் 12 நபர்களின் உணவுத்தேவை அடங்கியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. ஐக்கிய நாடுகளுடைய பன்னாட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நிதியம் (UNFA) அளித்த ஆய்வறிக்கையின்படி எதிர்வரும் 2037-ல் இந்தியா தனது மக்கள் தொகை பெருக்கத்தில் சீனாவை மிஞ்சி
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட தேசமாக வந்துவிடும் என்று உறுதியிட்டு கூறுகின்றது. (USDA) – அமெரிக்க ஐக்கிய வேளாண்துறையின் ஆய்வறிக்கையின்படி உலகில் விளைநிலங்களை மிக வேகமாக இழந்துவரும் நாடுகளில் இந்திய தேசம் முதலிடத்தில் உள்ளது. அதாவது ஒவ்வொராண்டும் சுமார் 25 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களை நாம் மனித நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் இழந்து வருகின்றோம்.

செயற்கை உரம்
நன்றி-Nature Bring

மக்கள்தொகை பெருக்கமும் உணவு உற்பத்தியும் இருவேறு திசைகளில் பயணிக்கின்றன என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இந்தச் சூழலில்தான் நாம் மிக முக்கியமான நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அதாவது பசித்த வயிறுக்கு உணவளிக்க வேண்டும். அதற்கு வேளாண்மை செய்ய வேண்டும். அந்த வேளாண்மையை பாரம்பரியம் சார்ந்த இயற்கை விவசாயம் செய்வதா? அல்லது தொழில்நுட்பம் சார்ந்த நவீன விவசாயம் செய்வதா? என்ற கேள்வி நம்முன்னே நிற்கின்றது. இப்பேர்ப்பட்ட சூழலில் நாம் ஒன்றை நினைவில் கொள்வது அவசியமாகிறது. இயற்கை விவசாயமோ அல்லது நவீன விவசாயமோ எதை பின்பற்றுவது அவரவர் விருப்பம். ஆனால் எதை பின்பற்றினாலும் நாம் உழவு தொழிலை பொறுத்தவரை உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தருவதை குறைத்து அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்பதை உணரவேண்டும். உணவு உற்பத்தியை பெருக்க உடனடித்தேவை சத்துக்கள் அந்தச் சத்துக்கள் இயற்கை வடிவிலோ அல்லது செயற்கை வடிவிலோ (உரமாக) எதுவாகினும் அதைப்பற்றிய புரிதல் மிகமிக அவசியம். இதன் அடிப்படையிலேயே வேளாண் மாணவர்களும், விவசாயிகளும், உரக்கடை வணிகர்களும், விவசாயிகளிடம் விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களும் உரங்களைப் பற்றிய அடிப்படை அறிவியலை புரியவைக்கும் நோக்கத்தோடு இந்த தொடரை எழுத ஆரம்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

உரம் – சில உண்மைகளைத் தெரிந்து கொள்வோம்!
பயிர்களுக்கு நாம் அளிக்கும் உரம் இயற்கை வடிவிலோ அல்லது செயற்கை வடிவிலோ எதுவாயினும் பயிர் அனங்கக (Inorganic) வடிவிலேயே சத்துக்களை எடுத்துக்கொள்ளும்.
உதாரணத்திற்கு:

சத்து பயிர் எடுத்துக் கொள்ளும் விதம்
1. ‘N’– தழைச்சத்து  

NH 4 + அல்லது NO 3 அதாவது அமோனியா வடிவிலோ
அல்லது நைட்ரேட் வடிவிலோ எடுத்துக்கொள்ளும்.

 

2. ‘P’ – மணிச்சத்து HPO 4 2- அல்லது H 2 PO 4 அதாவது ஹைட்ரஜன் பாஸ்பேட்

(அ) டை ஹைட்ரஜன் பாஸ்பேட்

3. ‘K’ – சாம்பல்சத்து    K + – பொட்டசியம் அயனிகள்

 

செயற்கை உரங்கள் இயற்கையிலிருந்து பெறப்படும் சத்துக்களான (மண் மற்றும் காற்று) ஆகியவற்றை வைத்து தயாரிக்கப்படுகிறது. தழைச்சத்தானது காற்றில் உள்ள 78% தழைச்சத்திலிருந்து அமோனியா பகுப்பாய்வு முறையில் “யூரியா” என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறது. மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் முறையே மண்ணில் உள்ள சுரங்கங்கள் மற்றும் கடல் உப்பின் மூலமே பெறப்படுகின்றன. உரங்களில் உள்ள சத்துக்கும் நம் உடல் மற்றும் உணவில் உள்ள சத்துக்களுக்கும் ஒரு வித்தியாசமும்
கிடையாது. எல்லாம் ஒன்றே.

Fertilizer
நன்றி-Rhewum

இயற்கை சத்துக்களைப் படைத்துள்ளது. உரத்தொழிற்ச்சாலைகள் அதனை பயிர்கள் சுலபமாக எடுத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கிக் கொடுக்கின்றன. அவ்வளவே! இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களிலுள்ள
சத்துக்களுக்கும், உரத்தின் மூலம் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. உரங்களால் மண்ணின் வளத்தை கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது. பிறகு என்ன செய்கின்றது என்றால் பயிர்களுக்கு தேவையான சத்துக்களை மட்டுமே வழங்குகிறது. எனவே உரங்களை கையாளும் போது மூன்று முக்கியமான கேள்விகளை நாம் நமக்குள்ளே கேட்க வேண்டும்.

1.) என்ன உரம் கொடுக்க வேண்டும்?
2.) என்ன அளவு கொடுக்க வேண்டும்?
3.) எந்தெந்த நாளில் கொடுக்க வேண்டும்?

இந்த மூன்று கேள்விகளும் நம் உழவுத்தொழிலையும் உணவு உற்பத்தியையும் இரு கண்கள் போல காக்க உதவும் என்பதில் ஐயமில்லை.

-தொடரும்..

பகுதி இரண்டைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்..

 

முனைவர். ச.பாபு,

கருத்துரை: முனைவர். ச.பாபு, உதவிப் பேராசிரியர், உழவியல் துறை, வேளாண் புலம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

தொடர்புக்கு: agribabu74@gmail.com ,
அலைபேசி எண் : 9486836801.

எழுத்தாக்கம்: மு.ஜெயராஜ்.
தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூதறிவியல் வேளாண்மை (உழவியல்) படித்து வருகிறார். விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித் திட்டத்தில் ஓராண்டு காலம் பணியாற்றி சிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றவர். பகுதி நேரமாக சில
இணையதளங்களில் வேளாண்மை, கல்வி, வேலைவாய்ப்பு குறித்து எழுதி வருகிறார்.

தொடர்புக்குjayarajm96@gmail.com அலைபேசி எண் : 8220851572.
Twitter:   https://twitter.com/jayarajmuthusmy