. . .

வேளாண் ஹைகூ-நீங்களும் எழுதலாம்

kalanipoo haiku

 

முதலில் ஹைகூ பற்றி பார்ப்போம்… மூன்றே வரிகளில் ஒரு சிறிய பூப்போல் கவிதைகள். உலகின் அத்தனை இலக்கியத்திலும் இந்த ஹைகூ வடிவம் இடம்பிடித்து எழுதப்படுகின்றன. ‘உலக ஹைகூ குழு’ என பல குழுக்கள் ஹைகூ ரசிகர்களுக்காக சிறப்பாக இயங்கி வருகின்றன, ஹைகூவுக்கு என்றே பத்திரிகைகளும் இருக்கின்றன.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழிலும் இந்த ‘ஹைகூ’ பிறக்க ஆரம்பித்துவிட்டது. திரு. சுப்பிரமணிய பாரதியார் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் அக்டோபர் 16, 1916 அன்றே ‘ஜாப்பானிய கவிதைகள்’ என்ற தலைப்பில் இரண்டு ஜாப்பானிய ஹைகூக்களை தமிழில் மொழி பெயர்த்து எழுதியுள்ளார், அதுவே ஹைகூவின் தமிழ் பிறந்தநாள் என வைத்துக் கொள்ளலாம், அதன் பின்பு திரு. சி. மணி, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், அறிவுமதி போன்றோர் ஹைகூ தொகுப்புகள் பல வெளியிட்டார்கள்.

கணையாழியின் கடைசி பக்கங்கள் தொகுப்பில் திரு. சுஜாதா அவர்கள் ஹைகூ பற்றி எளிமையாக விளங்கும்படி எழுதியிருப்பார், அதிலிருந்து… ஹைகூ என்பது ஜாப்பானிய கவிதையின் புராதன வடிவங்களில் ஒன்று. ‘ரெங்கு'(renku) என்னும் நீண்ட பாடலுக்கு முன்னுரைகளாக முதல் ஹைகூ திரு. மாட்ஸுவோ போஷோ என்பவரால் (1644-1694) எழுதப்பட்டது. அவருடைய

 

‘பழைய குளம்

தவளை குதிக்க

ஜலத்தில் சத்தம்’

 

-என்னும் ஹைகூ ஜப்பானிய மொழியிலேயே ஏன், உலகிலேயே மிகப் பிரசித்தமானது. ஹைகூ என்ற சிறிய கவிதை ‘சோக்கா’ என்னும் வடிவத்திலிருந்து பிறந்து ‘தன்கா’ என்கிற வடிவத்தில் மாறி இன்னும் சிறியதாகிவிட்டது.

ஜப்பானிலேயே சம்பிரதாய ஹைகூ வடிவத்திலிருந்து பல மாறுதல்கள் வந்துவிட்டன. இருந்தும் அளவில் சிறியதாக இருப்பதும், சுமார் பதினேழு ஒலிக்குறிப்புகள் கொண்டதும், ஒரு கருத்தைச் சொல்லிச் சட்டென்று திருப்புவதும் ஹைகூவின் பொது அம்சங்கள் என்று சொல்லலாம்.

ஹைகூவின் கவர்ச்சிக்குக் காரணம் அதன் எளிமை, ஹைகூ என்பதில் உவமைகளே இருக்காது. ‘சந்திரனைப் போன்ற கண்கள், பவளம் போல உதடுகள்’ இவையெல்லாம் ஹைகூ இல்லை! நேரடியாகக் கிடைத்த ஒரு கவிதாநுபவத்தை உடனே சிறைப்பிடிக்கும் தன்மை தான் நல்ல ஹைகூவாகும். அந்த அநுபவக் கணத்தை அதிகம் வார்த்தை ஜாலமில்லாமல், உவமை ஏதும் இல்லாமல் நேராக வாசகனுக்கு கடத்தும் முயற்சி தான் சிறந்த ஹைகூ. 

நம் அன்றாட வாழ்வில் பல்வேறு அற்புதமான கணங்களைச் சந்திக்கிறோம். மிகுதியான உற்சாகம், ஆச்சரியம், சோகம் எல்லாமே சற்றும் எதிர்பாராமல் நம்மைத் தாக்குகின்றன. அந்த உன்னத கணங்களை அப்படியே மிகையின்றி எளிதாகச் சிறைப்படுத்திக் கொண்டு அதை அப்புறம் படிப்பவனுக்குப் பங்கு கொடுப்பதுதான் ஹைகூ.

உதாரணமாக பூசான் என்பவரின் மிக எளிய ஹைகூ…

‘பியோனி மலர்கள்

உதிர்கின்றன

ஓரிரு இதழ்கள் ஒட்டிக்கொண்டு’

 

இந்த கவிதையின் எளிய வடிவத்தைப் புரிந்துகொள்ள இலக்கணமோ இலக்கியமோ தேவையில்லை. நாம் எல்லோரும் மலர்கள் உதிர்வதைப் பார்த்திருப்போம், ( ‘பியோனி’ என்பது ஜப்பானிய பிரகாசமான வர்ண மலர்) நமக்கு மல்லிகை மலர்கள் என்று வைத்துக்கொள்வோம். உதிரும்போது ஓரிரு இதழ்கள் ஒட்டிக் கொண்டு உதிர்வதையும் கவனித்திருக்கலாம். அந்த ஞாபகத்தை நேரடியாக நம் மனத்தின் மேல் தளத்துக்குக் கொண்டுவந்து அந்தக் கணத்தின் ஒளியாடலை மறுபடி நிகழ்த்துகிறது இந்தக் கவிதை.

திரு. சி. மணி அவர்களின் 

‘மூங்கில் நிழல் இரவெல்லாம்

மாடிப்படி பெருக்கிற்று

தூசுகள் அகலவில்லை’

என்னும் மொழி பெயர்ப்பு கவிதை நல்ல ஹைகூவிற்கு உதாரணம்.

 

திரு. சுஜாதா அவர்களே இந்த ‘ஹைகூ’வை “கவிதையின் ஜூம்லென்ஸ்” என்று கூறுகிறார்.

‘சமவெளியில்

பசுவின் உதடுகளில்

புல்லின் ஈரம்’

-இந்தக் கவிதை ஒரு காமிராவின் ‘ஜூம்லென்ஸ்’ போல புல்வெளியிலிருந்து பசுவின் உதடுகளை ‘க்ளோஸப்’பில் காட்டுகிறது போன்றதாக அமைகிறது.

 

இது போன்ற ஹைகூவிற்கு பின்னால் கருத்துக்களும் இருக்கலாம், முன்பு சொன்ன அந்த மலர் உதிரும் ஹைக்கூவில் உட்கருத்தாக உயிரின் வாழ்வும் அழிவும் இருப்பதை உணர்ந்து கொள்பவர்களும் இருக்கலாம், ஆனால் அவையெல்லாம் தேவையில்லை. ஹைகூவின் பிரபலத்திற்கு அதன் நேரடி அநுபவம்தான் காரணம். இன்னும் சில உதாரணங்கள்…

 

‘வயலருகே

லாரி போக

நெல் அதிர்கிறது’

 

தோட்டத்தை விற்றதும்

பறவைகள் கானம்

வேறாக ஒலிக்கிறது’

-இவை அனைத்தும் நேரடி அநுபவத்தை அளிக்கிறது தானே…

நல்ல ஹைகூவின் மூன்று முக்கிய குணாதிசயங்கள்… வரும் நாட்களில் ஹைகூவை கை பிடிப்பவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்…

  1. நேரடி அநுபவம்
  2. உவமை உருவகம் கூடாது.
  3. மூன்றாவது வரியில் ஒரு திருப்பம்.

 

ஹைகூவை தமிழ் படுத்த எண்ணி அதனை ‘துளிப்பா’ என்று சிலர் அழைத்ததும் உண்டு. அப்படி துளிப்பாவோ ஹைகூவோ வேளாண் சார்ந்து எழுதினால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் எழுந்தது தான் இந்தப் பகுதி…உதாரணங்கள்…

பாதமருகே சிதறியது முகத்திலும் தெறிக்கிறது

செம்மஞ்சள் நிறத்தில் விழும் கோமியம்,

அவள் பால் கறக்கும்பொழுது…

 

ஒரு விளம்பரம்…

செடிகள் கருகியிருக்கிறது

கழுத்தில் சிவப்பு துண்டு தொங்க விவசாயி முகம் மலர்ந்திருக்கிறது…

அருகில் களைக்கொல்லி டப்பாவின் படம்…

 

மழைநீர், ஏரி, விவசாயம்

அதனைத் தொடர்ந்து உற்பத்தி விலை…

மழைநீர், ஏரி, விவசாயம்

அதனைத் தொடர்ந்து வினாக்குறி…

 

நட்சத்திர பிரபலங்கள்

பொழுதுபோக்காக

இயற்கை விவசாயம்…

 

விரல் ஓரத்தில் பேணா அச்சுப்பதிந்து கொஞ்சம் மை ஒட்டி வியர்த்திருக்கிறது…

கட்டுரைப் போட்டியில் ‘வெல்லும் வேளாண்மை’ தலைப்பில் எழுதி முடித்த போது…

 

உழவர் தற்கொலையை பெருஞ்சேவையாக பகிர்கிறான்

முகநூலில்

கோலா அருந்திக்கொண்டே…


இந்த வேளாண் ஹைகூக்கள் சார்ந்த விமர்சனங்கள் இருந்தாலும், இவ்வளவு தானா ஹைகூ! என்று உடனே ஹைகூ எழுத தோன்றினாலும் imotkalanipoo@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள், உங்கள் ஹைகூக்களும் கழனிப்பூவில் பிரசுரமாகும்.

 

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது