. . .

வீட்டின் சுற்றுசுவரை ஒட்டி நகர்புறவாசிகள் என்ன மரங்கள் நடலாம்? | பகுதி-1

 

கர்ப்புறங்களில் வாழ்வோர்க்கு தன் வீட்டைச் சுற்றி மரங்கள் மற்றும் செடிகள் வளர்த்து பார்க்க வேண்டும் என்ற ஆசை பொதுவாகவே இருக்கும். ஆனால் இடப்பற்றாக்குறை காரணமாக பல மரங்களை வளர்க்க முடியாது. என்ன மரங்களை தேர்ந்தெடுக்கலாம் என்ற குழப்பம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

எளிதாக வளரும் மரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வளர்த்தால் வீட்டைச் சுற்றி பார்க்க அழகாகவும், நிழல் தரக்கூடியதாகவும், பல பயன்களை கொண்டதாகவும் இருக்கும் 5 மரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

கொன்றை மரம்:

ஃபேபசியே (Fabaceae) என்னும் தாவரவியல் குடும்பம், கேஸியா ஃபிஸ்டுலா (Cassia fistula) எனும் தாவரவியல் பெயர் கொண்ட ஒரு மரம்தான் கொன்றை மரம். இதனை சரக்கொன்றை, மஞ்சள் கொன்றை என்றும் சொல்வார்கள். இதன் மலர் மஞ்சள் வண்ணத்தில் பூத்துக்குலுங்கும் என்பதால் ‘தங்கமழை மரம்‘ (Golden shower tree  or Golden rain tree) என்றும் அழைப்பார்கள்.

இம்மரம் கோடையின் வெப்பத்தையும் தாங்கி வளரக்கூடிய மரமாகும். வீட்டிற்கு ஒரு அழகான பொலிவைத் தந்து அலங்கார தாவரமாக மட்டுமில்லாமல் பல்வேறு மருத்துவ பயன்பாட்டிற்கும் பயன்படும் மூலிகை தாவரமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.  இதன் பூ, இலை மற்றும் மரப்பட்டை என அனைத்திற்கும் மருத்துவ குணம் உண்டு. காய்ச்சல், மலச்சிக்கல், சர்க்கரை நோய், பித்தம் என பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

சித்திரையில் பூத்துக்குலுங்கும் பூ என்பதால் இம்மரத்தை வளர்த்து ஒவ்வொரு சித்திரை மாதத்திலும் வீட்டைச்சுற்றி தங்க மழையை நிரப்ப தயாராகுங்கள்.

கொன்றை மரம்-kalanipoo

 

அச்சிநறுவிலி மரம்:

இதன் தாவரவியல் பெயர் கார்டியா செபெஸ்டினா (Cardia sebestena). ஆங்கிலத்தில் கெய்ஜர் மரம்(Geiger Tree) என்று அழைப்பார்கள்.

இது தென்னிந்தியாவில் புகழ்பெற்ற மரம். இதன் மலர் ஆரஞ்சு வண்ணத்தில் அழகாக காட்சியளிக்கும். கோடை மற்றும் இலையுதிர் காலத்தில் கொத்துக்கொத்தாக பூத்துக்குலுங்கும் என்பதால் வீட்டிற்கு அருகில் வளர்க்க ஏற்ற மரம். இதன் பழம் மற்றும் இலை மருத்துவத்தில் அதிகமாக பயன்படுகிறது.

 

மகிழமரம்:

இதன் தாவரவியல் பெயர் மிமோசோப்ஸ் இலஞ்சி (Mimusops elangi). ஆங்கிலத்தில் ஸ்பானிஸ் செர்ரி (Spanish cherry), புல்லட் உட் (Bullet wood) என்றும் அழைக்கின்றனர். இது அனைத்து இடங்களிலும் வளரக்கூடியது இதன் மலர் வெளிர் மஞ்சள் நிறத்தில் மிக அழகாகவும் அதிக நறுமணம் கொண்டதாகவும் இருக்கும். இம்மரம் வீட்டைச்சுற்றி குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது.

இலைகள், காய்கள், மலர்கள், பட்டை என அனைத்திற்கும் மருத்துவ குணம் உண்டு. குறிப்பாக மகிழம் பூ சாறு இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. வருடம் முழுவதும் பசுமையாகவும், வீட்டைச்சுற்றி நிழல் தரும் இம்மரத்தை வளர்ப்பதன் மூலம் உங்கள் வீட்டை அதிக நறுமணம் உடையதாகவும் மாற்றலாம்.

Mimusops elengi-kalanipoo
நன்றி-Amazon.in

கதலி மரம்:

இந்தியா பிலிப்பைன்ஸ் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வளரக்கூடிய மரம் தான் கதலி மரம். இதன் தாவரவியல் பெயர் லார்ஜஸ்ட்ரோமியா பிளஸ் ரெஜினியா (Largersteroemia flos reginae). இதன் மலர் இளஞ்சிவப்பு (pink) நிறத்தில் காட்சியளிக்கும். கோடைகாலத்தில் பூத்துக்குலுங்கும். குளிர் காலத்தில் இலைகள் உதிரும் முன் சிவப்பு நிறத்தில் மாறிவிடும். இத்தாவரம் வயிற்றுப்போக்கு, ரத்த அழுத்தம், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

இந்தியாவின் பெருமை (Pride of India) மரம் என்று அழைக்கப்படும் இதனை அலங்கார தாவரமாக வீட்டில் வளர்க்கலாம்.

Lagerstroemia flos-reginae-kalanipoo

 

செண்பக மரம்

இதன் தாவரவியல் பெயர் சிலியா சாம்பசே (Michelia champace). செண்பக மரத்தின் இலை, மலர், பட்டை மற்றும் வேர் என அனைத்து பாகங்களும் பயன்படக் கூடியவை. இதன் பூக்கள் மிக நறுமணம் கொண்டது. இம்மரம் எப்பொழுதும் பசுமையாக இருக்கும். இதனை வீட்டில் வளர்ப்பதன் மூலமாக காற்றின் தூசுக்களை வடிகட்டி மாசற்ற காற்றை சுவாசிக்கலாம். இது அதிக குளிர்ச்சி தன்மையை வீட்டை சுற்றி உண்டாக்கும். இதன் மலர் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதன் பழம் பறவைகள் விரும்பி சாப்பிடும் என்பதால் வீட்டைச்சுற்றி பறவைகளின் சத்தத்தையும் ரசிக்க முடியும். இம்மரம் அதிக மருத்துவ பயன் கொண்டது.

அலர்ஜி, வயிற்று வலி, வீக்கம் என பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. வீட்டில் அலங்கார தாவரமாக வளர்க்க ஏற்ற மரம். வீட்டைச்சுற்றி இயற்கையான நறுமணத்தையும் உண்டாக்கலாம்.

champak-kalanipoo

உங்கள் வீட்டை கவரும் வகையிலும், வீட்டைச் சுற்றிலும் பசுமையாகவும்,  நறுமணமாகவும் மாற்ற அனைவரும் பயன்பெறக்கூடிய மரங்களை வளர்க்க தயாராகுங்கள்.

இனி வரும் தொடரில் வீட்டில் வளர்க்க ஏற்ற பல மரங்கள் மற்றும் செடிகளை பற்றி காண்போம்.


மரங்களைப் பற்றிய தகவல்: நவீன் செல்வராஜ். தோட்டக்கலைத்துறை பட்டதாரி.

தொகுப்பு: சே. ஜனனி, முதுநிலை உயிரிதகவலியல் மாணவர், இயற்கை விவசாயத்திலும், வேளாண்‌ தொழில்நுட்பத்திலும் அதிக ஆர்வமுடையவர். கழனிப்பூ-வின் கட்டுரை ஒருங்கிணைப்பாளர்.

 

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது