. . .

வாழ்நாள் அங்கீகார விருது பெற்ற தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர்

 

நேற்று (மே, 28, 2019) நடந்த இந்தியத் தோட்டக்கலை சங்கக் கூட்டமைப்பில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் திரு. என்.குமார் அவர்களுக்கு ‘வாழ்நாள் அங்கீகார விருது’ (Lifetime Recognition Award) வழங்கி சிறப்பிக்கப் பட்டிருக்கிறது. உத்திரகாண்ட் மாநிலம் பண்ட் நகரில் நடந்த சர்வதேச தோட்டக்கலை புத்தாக்கு மாநாட்டில் இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

Kalanipoo VC TNAU Mr.Kumar
முனைவர் திரு. என். குமார்

இந்தியத் தோட்டக்கலை சங்கக் கூட்டமைப்பானது (CHAI-Confederation of Horticulture Association of India), தோட்டக்கலைத் துறை சார்ந்த ஆராய்ச்சிகள், பாடத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சியினை மேம்படுத்துவதற்காக 2010 இல் தொடங்கப்பட்ட அமைப்பாகும். தோட்டக்கலைத் துறை சார்ந்த ஆராய்ச்சி, கற்பித்தல், மேலும் அதன் செயலாக்க முறையில் ஈடுபட்டுள்ள தனிநபர், கூட்டமைப்பு, விவசாயி என பலதரப்பட்டோரையும் அங்கீகரித்து விருது வழங்கி வருகிறது இந்த அமைப்பு.

இந்த அமைப்பின் வாழ்நாள் அங்கீகார விருதானது, ஒரு குறிப்பிட்ட பயிரின் வளர்ச்சியில் தலைசிறந்து விளங்கி சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு வழங்கும் விருதாகும்.

இந்தச் சிறப்பான விருது இம்முறை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் திரு.என்.குமார் அவர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தோட்டக்கலை துறை சார்ந்து சிறப்பாக செயல்பட்டு அதன் மூலம் மனிதவள மேம்பாட்டுக்கு முக்கிய பங்காற்றியதற்காக இந்த விருது இவர் வசம் வந்து சேர்ந்திருக்கிறது.

முனைவர் திரு.என்.குமார் அவர்கள் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பதிமூன்றாவது துணைவேந்தராக பொறுப்பாற்றி வருகிறார். இவர் தனது 35 வருட வேளாண் ஆராய்ச்சிப் பணியில் 5 முறை தங்கப் பதக்கம் வென்ற சிறப்பிற்குரியவர். தோட்டக்கலைத் துறையில் 10 தலை சிறந்த பயிர் இரகங்களை உருவாக்கியதிலும், தோட்டக்கலைத் துறை சார் பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளிலும் இவரது பங்கு அளப்பரியது. மக்களுக்கு எளிமையான முறையில் அதே சமயத்தில் இலாபத்தை அதிகரிக்கச் செய்யும் வேளாண்மை ஆராய்ச்சியில் அரும் பங்காற்றி வரும் இவரைப் போன்றோரை இந்தியத் தோட்டக்கலை சங்கக் கூட்டமைப்பகம் மட்டுமல்லாது, கழனிப்பூ குழுமமும் சிறப்பாக அங்கீகரிக்கிறது.

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது