. . .

ஒருங்கிணைந்த பண்ணை முறையில் முக்கியமான தேனீ வளர்ப்பு – பகுதி 1

டந்த 2018 குடியரசு தினத்தன்று ஒருங்கிணைந்த பண்ணை முறை (Integrated Farming System) தான் விவசாயிகளுக்கு விவசாயத்தில் இரட்டிப்பு இலாபத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்என்று அரசு நம்பிக்கை வைத்து அந்த ஒருங்கிணைந்த பண்ணை முறை மீது அதீத கவனம் செலுத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது. அந்த ஒருகிணைந்த பண்ணை முறையில் ஒன்றான தேனீ வளர்ப்பு பற்றி தான் இந்த தொடரில் தெரிந்து கொள்ள போகிறீர்கள்.

நம்மூரில் தேனீ போல் சுறுசுறுப்பா இருக்கணும்னு சொல்லுவாங்க. தேனீக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக தான் செயல்படும் ஆனால் மழைக்காலங்களை தவிர.

அந்த மழைக்காலங்களில் உணவை சேமித்து வைப்பதற்காகத்தான் தேனீ எல்லா காலங்களிலும் சுறுசுறுப்பாக ஒற்றுமையாக வேலை செய்து உணவை சேமித்து வைக்கிறது .

பூவில் இருந்து எடுக்கப்படும் மகரந்தம், தேனீயின் உமிழ்நீருடன் கலந்து தேனாக மாறுகிறது. அந்த தேனை கூட்டினில் மெழுகு கொண்டு அடைத்து சேமித்து வைக்கிறது.

ஒரு தேனீப் பெட்டியில் 1 ராணி தேனீ, 20 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை வேலைத் தேனீக்கள்  இருக்கும். ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும்.

தேனீக்களின் வகைகள் :

* இந்தியத்தேனீ

* மலைத்தேனீ

* கொம்புத்தேனீ

* இத்தாலியத்தேனீ

* கொசுத் தேனீ ( stingless bee )

kalanipoo-Beekeeping part 1

இனத்தேர்வு:

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை இந்தியத் தேனீக்கள் (அடுக்குத்தேனீ) தான் அதிகம் வளர்க்கப்படுகின்றன.

அடுக்குத் தேனீ இனங்களை மட்டுமே தேனீப் பெட்டிகளில் வைத்து வளர்க்க இயலும். இந்திய தேனீயும், இத்தாலிய தேனீயும் அடுக்கு வகையைச் சார்ந்தது, அதனால் பெட்டிகளில் வைத்து வளர்க்க உகந்தது. கொசுத் தேனீயில் அதன் கொடுக்கின் வளர்ச்சி குன்றி இருக்கும், அந்த கொசுத் தேனீயின் தேன் அதிக மருத்துவ குணம் வாய்ந்தது.

தேனீப்பெட்டியின் அம்சங்கள்:

மரச்சட்டத்தால் ஆன பெட்டியில், அடிப்பலகை, புழுஅறை, தேன் அறை, சிகைப்பலகை, மேல்மூடி அல்லது கூரை என பல பகுதிகள் இருக்கும்.

அதில் புழுஅறை தேனிக்கள் இங்குதான் கூட்டமாக இருக்கும் .

தேன்அறை இங்கிருந்துதான் நாம் சுவைக்கும் தேன் பெறப்படுகிறது .

சிகைப்பலகை இதில்தான் தேனீ தேன் அடைவைக்கிறது.

இதில் இத்தாலிய தேனீக்களை லாங்கஸ்டிராத் தேனீ பெட்டி வகையில் வைத்து வளர்க்கலாம். நியூட்டன் மற்றும் மார்த்தாண்டம் என்னும் தேனீ பெட்டியில் இந்திய தேனீ வகைகளை வளர்க்கலாம். சாதாரண மண் பானைகளின் மூலம் கொசுத் தேனீ வகைகளை வளர்க்கலாம்.

kalanipoo-beekeeping-part1

தேனீ வளர்க்கும் முறை :

*  தேனீப் பெட்டியில் புழுஅறையில் 3000-5000 தேனிக்களுடன் ஆரம்பத்தில் விற்கப்படும். தேனீ வளர்ப்பவர்களிடமிருந்தே நாம் பெட்டிகள் வாங்கிக்கொள்ளலாம்.

* தேனீப் பெட்டிகளை இரவில்தான் இடம்மாற்ற வேண்டும்.

* தேனீப் பெட்டிகளை நிழலான இடங்களில், பூக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் வைக்க வேண்டும்.

* தேன் பெட்டி வைத்து இரண்டு மதங்களுக்கு பிறகு தேன் எடுக்கலாம். பின்னர் , 30-40 நாட்களுக்கு ஒரு முறை தேன் எடுக்கலாம். தேன் அறையில் தேன் முழுவதும் நிரம்பப் பெற்றிருந்தால் தேனை எடுக்கலாம்.

முருங்கைப் பூவில் அதிகளவில் தேன் இருப்பதால் முருங்கை தோட்டத்தில் வைத்த பெட்டிகளில் 20 நாட்களுக்கு ஒரு முறை கூட தேன் எடுக்கலாம். முருங்கை மகசூலும் அதிகரிக்கும்.

தேனீ சட்டத்தில் கீழ் அறையில், தேன் எடுக்க கூடாது; அவை இனவிருக்திக்கானது, தொந்தரவு செய்யக்கூடாது. மேல் அறையில் தேன் எடுக்கும்போது புகைக்கருவி கொண்டு புகைவிட்டால் மேல்அறையில் இருக்கும் தேனிக்கள் கீழ்அறைக்கு சென்றுவிடும். தேன்சட்டத்தில் இருந்து தேனை எடுக்கலாம்.

தேன் அடையிலிருந்து தேன் எடுக்க தேனெடுக்கும் கருவிபயன்படுத்தலாம். தேன் எடுத்தது போக நாள் பட்ட கருத்த மெழுகை அதன் தரத்தை பொருத்து கிலோ 5௦௦ ரூபாயிலிருந்து கூடிக்கொண்டே போகிறது.

தேனீ வளர்ப்பின் இலாபங்கள் :

* ஒரு கூட்டிலிருந்து வருடத்திற்கு 5-9 கிலோ வரை தேன் எடுக்கலாம். ஒரு கிலோ தேன் 500 ரூபாயிலிருந்து விற்கப்படுகிறது.

* அதனுடைய நாள் பட்ட மெழுகையும் நாம் விற்று இலாபம் பார்க்கலாம்.

* மகரந்த சேர்க்கையை அதிகரிக்க உதவுகின்றது .

மேலும் சில குறிப்புக்கள்:

ஒரு தேனிப்பெட்டிக்குள் வேறொரு பெட்டியைச் சேர்ந்த தேனீ நுழைந்தால் அதை தேனிக்கள் தடுத்துவிடும் (ஒவ்வொரு பெட்டியும் ஒரு ராஜ்ஜியம்). எனவே, பெட்டிகளை அருகருகில் வைப்பதை தவிர்க்கவும்.

தேனீப் பெட்டிகளை வைக்கும் தாங்கிகளின் (ஸ்டாண்டு) கால்களை நீர் ஊற்றிய கிண்ணங்களில் வைக்க வேண்டும் அல்லது வேப்ப எண்ணெய் கலந்தகிரீஸைதாங்கியின் கால்களில் தடவி வைக்க வேண்டும்.

தேனீப் பெட்டியை தாங்கியுடன் சேர்த்து கயிறு கொண்டு கட்டி வைப்பது நல்லது, இதனால் ஒருவேளை தேனீப் பெட்டி சாய நேரிட்டாலும் பெட்டியின் பாகங்கள் தனித்தனியே பிரித்து விழாது.

போதிய அளவு பூக்கள் இல்லாத பொழுது, மழைக் காலங்களில் தேன் உற்பத்திபாதிக்கப்படும். அதனால் சர்க்கரைப் பாகுவை தென்னைமூடியில் வைத்தல் மூலம் தேன் பெறலாம். அஸ்கா (வெள்ளை சர்க்கரை) உடம்புக்கு நல்லதில்லை இருப்பினும் தேனீ அதனை எடுத்து தனது உமிழ்நீருடன் சேர்த்து தேனாக மாற்றும் பொழுது அவை ஆரோக்கியமனதாக மாறிவிடுகிறது. இப்போது உங்களுக்கு கேள்வி வரலாம் நாட்டுச்சர்க்கரை வைக்கலாமே என்றுநாட்டுச்சர்க்கரை 2-3 நாட்கள் கழித்து புளித்துப் போய்விடும், அதனை தேனீ விரும்பாது .

இது மட்டும் இல்லாமல், சப்போட்டா போன்ற பழத்தின் சாறுபிழிந்து (3 கிலோ) வைத்தால் 1 கிலோ தேன் எடுக்கலாம் என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

அடுத்த பகுதியில் தேனீ வளர்ப்பில் பயன்படும் சாதனங்கள் குறித்து பார்ப்போம்

தேனை ருசிப்போம்

இரண்டாம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்

தொகுப்பு: சு.யுகேந்திரன், தோட்டக்கலை பட்டதாரி.

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது