. . .

வேளாண்மையிலும் சுற்றுச்சூழலிலும் தவளையின் அரும்பங்கு- தவளை என்றொரு இனமுண்டு!

 

கொசுக்கள் அதிகமா? நெல் நிலத்தில் பூச்சிகள் தொல்லை அதிகமா? இவற்றுக்கு மனிதர்களாகிய நாம் தான் முழு முதல் காரணம்.

தற்போது கொசுக்களை விரட்ட பல வழிகளில் முயற்சி செய்து போராடி வருகிறோம், கிராமங்களில் இருந்து நகரங்கள் வரை இப்போது கொசு பிரச்சனை பெரிதாக இருக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் மின்விசிரியோ அல்லது ஏதாவது கொசுவை விரட்டக்கூடிய சாதனமோ இல்லாமல் தூங்குவதென்பது மிகவும் சிரமமான நிகழ்ச்சியாகிவிட்டது இன்று. முன்னர் எல்லாம் நகரங்களை ஒப்பிடும் போது கிராமங்களில் ஓரளவுக்கு கொசுத் தொல்லை இல்லாமல் வெளியில் கட்டில் போட்டு படுக்கும் பழக்கம் எல்லாம் இருந்து வந்தது. ஆனால் இப்போது கிராமங்களிலும் கொசுவின் தொல்லை தாங்க முடியவில்லை.

நெல் வயலில் பூச்சிகள் தொல்லை பல மடங்கு அதிகரித்து விட்டது. தொட்டதுக்கெல்லாம் ‘அடிங்கப்பா அந்த பூச்சி மருந்த’ என்று பூச்சி மருந்துகள் தெளிக்க போனதால் சில காலத்தில் பூச்சிகள் அந்த மருந்துகளுக்கு ஏற்ப தக்க வைத்து மருந்துகளை எதிர்த்து வாழும் திறன் வளர்த்து வயலைவிட்டு, நெல் பயிரை விட்டு ‘போக மாட்டேன் போ!’ என்று அடம் பிடித்து வருகிறது.

இந்த நிலைக்கு நாம் தான் காரணம் என்பதை தொடர்பு படுத்தி பார்க்க முடிகிறதா?

ஆமாம்… சிறு வயதில் பார்த்த அதே அளவு தவளைகளை இன்று உங்களால் காண முடிகிறதா? தவளை மிக வேகமாக அழிந்து வருகிறது என்பதை உணர முடிகிறதா? என்னுடைய சிறு வயதில் என் நண்பன் ஒருவன் தவளையைப் பிடித்து அதன் வாயை திறந்து காட்டி எங்களை அப்போது ஆச்சரியப் பட வைப்பான், இப்போது தவளையை பார்ப்பதே மிக ஆச்சரியமாக இருக்கிறது.

Kalanipoo thavalai frog

தவளை அருவருப்பான உயிரினமா? சரி இருக்கட்டும், அதைவிட அருவருப்பான உயிரினமாக நாம் இப்போது இருக்கிறோம். இந்தச் சூழலில் ‘யாருக்கு என்ன நடந்தால் என்ன?’ என்ற நிலை தான் பலருடைய மனப்போக்காக இருக்கிறது.

அதற்காக தவளையை வீட்டுக்குள் வைத்து ஒவ்வொருத்தரும் ஐந்து தவளைகளை கட்டாயம் வளருங்கள் என்று சொல்லவில்லை, நாம் சிலவற்றை செய்வதை தவிர்த்தாலே போதும் தவளைகள் போன்று பல சிறு உயிர்கள் நம்மிடமிருந்து தப்பிக்கும். நாம் எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதற்கு முன்னால், தவளையையும் தவளையின் பயனையும் பற்றி பார்த்துவிடுவோம்.

தவளை- தலைப்பிரட்டையாக (Tadpole- தவளைக்குஞ்சு) நீரில் பிறந்து வாலறுந்து ஈரூடகவாழ்விகளாக (Amphibians- நீரிலும் நிலத்திலும் வாழும்) வாழ்ந்து வருபவை. உணவுச் சங்கிலியில் சரியாக நடுப்பகுதியில் தவளைகள் இருப்பது மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டும். சிறு பூச்சிகளை திண்ணும் பெரிய பூச்சி, அந்தப் பெரிய பூச்சியைத் திண்ணும் தவளை, தவளையைத் திண்ணும் பாம்பு அல்லது பறவை வகை இப்படி உணவுச் சங்கிலி தொடர, தவளை அழிந்தால் பாம்பும் பறவையும் பாதிக்கப்படும், தவளை சாப்பிடும் பூச்சி இனங்கள் அதிகரிக்கும், பூச்சிகள் தொல்லையும் அதிகரிக்கும். அந்தப் பூச்சியில் ஒன்று தான் கொசுவும், நெல் வயலை பாதிக்கக்கூடிய பூச்சி வகைகளும்.

உணவுச் சங்கிலியில் சரியாக நடுப்பகுதியில் தவளைகள் இருப்பது மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டும்.

தவளை தலைப்பிரட்டையாக நீரில் இருக்கும் போது செவுள்கள் மூலம் சுவாசிக்கும், கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வால் அறுபடும் போது நுரையீரல் வளர்ந்து அது வழியாக சுவாசிக்கும், தவளை மண்ணிற்குள் பாதி காலம் போய் படுத்து வாழும் அந்த சமயத்தில் தன்னுடைய தோல் (skin) மூலம் சுவாசிக்கும், தோல் மூலம் சுவசிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடு எளிதில் தவளைகளை தாக்க வல்லது, எனவே தவளைகள் தோல் நிறத்தை வைத்து சுற்றுச்சூழல் எவ்வளவு பாதிப்படைந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாமாம். மேலும் தவளைகள் அதிகமாக இருக்கும் பகுதி சுற்றுச்சூழல் நன்றாக இருப்பதாக அர்த்தமாம்.

சரி தவளை அழியாமல் இருக்க நாம் செய்ய வேண்டியது, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை முடிந்த அளவுக்கு குறையுங்கள், எப்போதும் போல கடந்த இருபது வருடமாக சொல்லி வரும் அதே கதை தான்…, எரிபொருள் சிக்கனத்திற்கு மிதிவண்டியை தூசு தட்டி அழுத்திப் பாருங்கள், ஆற்றில், குளத்தில் கலக்கும் அசுத்துங்களை கலக்காமல் இருக்க அல்லது குறைக்க கலப்பவர்கள் மனது வையுங்கள், பூச்சி கொல்லிகளுக்கு இயற்கையாக மாற்று முயற்சியுங்கள், நெல் வயலில் தவளைக்குஞ்சுகளைக் கூட கொண்டு வந்து விட்டுப்பாருங்கள், மழை நீர் வடியக்கூட இடமில்லாமல் கான்கிரீட்டும் தார் சாலையும் மறைத்த நகர அமைப்பை மாற்ற முனையுங்கள், மண் இருந்தால் தவளை கொஞ்சம் தப்பிக்கும்.

யார் கண்டார்கள், தூய்மை இந்தியா, புலிகள் பாதுகாப்புத் திட்டம் போல வரும் காலத்தில் ‘தவளையை மீட்போம்’ ‘தேசிய ஈரூடகவாழ் உயிரினமாக தவளை அறிவிப்பு’ ‘தவளையை வாகனத்தில் ஏற்றி நசுக்கியவருக்கு ₹1000 அபராதம்’ எனக் கூட அறிவிக்கலாம். அரசுக்கு முன் நாமே நம் சூழலைக் காக்க முன் வருவோம்.

ஆக்கம்: சா.கவியரசன். உயிரித்தகவலியல்  பட்டதாரி, கழனிப்பூ வேளாண் வலைதளத்தின் நிர்வாகத் தலைமையாக பொறுப்பு வகிக்கிறேன். என் வலைமனை: FromAKP

மின்னஞ்சல்: kaviyarasan411@gmail.com

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது