. . .

பூச்சிக்கொல்லி வாங்கும் போதும் பயன்படுத்தும் போதும் நாம் செய்யக்கூடாதவை

பூச்சிக்கொல்லி மருந்து தற்போதைய வேளாண்மையில் பல கட்டங்களில் இன்றியமையாததாக இருக்கிறது. எந்தப் பயிராக இருந்தாலும் பூச்சிக்கொல்லி தேவைப்படுகிறது. அதே சமயத்தில் பூச்சிக்கொல்லி மூலம் ஏராளமான தீங்கு வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே பூச்சிக்கொல்லி வாங்கும் போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தெரிந்த மருந்துக்கடைக்காரராக இருந்தாலும் மருந்தை பார்த்து படித்து தான் வாங்க வேண்டும். அப்படி வாங்கும் போது அதனால் ஏற்படும் தீங்குகள் தவிர்க்கப்படுகிறது.

அதற்காகவே நமது அரசு பூச்சிக்கொல்லி வாங்கும் போதும் அதற்கு பின்னும் நாம் செய்யக்கூடாத செயல்கள் என்னென்ன என்று குறிப்பிட்டுள்ளது. விவசாயிகளான தாங்கள் கட்டாயம் அதைத் தெரிந்து செயல்படுவது நல்லது.

பூச்சிக்கொல்லிகள் வாங்கும்போது செய்யக்கூடாதவை:

 • அங்கீகரிக்கப்படாத விற்பனையாளரிடமிருந்து பூச்சிக்கொல்லிகளை வாங்கக்கூடாது.
 • ஒரு பருவத்திற்கு தேவைப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மொத்தமாக வாங்கக்கூடாது.
 • பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலில் அல்லது பாக்கெட்டில் அங்கீகரிக்கப்பட்ட லேபிள் இல்லாதவற்றை வாங்கக்கூடாது.
 • உபயோகிப்பதற்கான காலக்கெடு முடிந்த பூச்சிக்கொல்லிகளை வாங்கக்கூடாது.
 • பூச்சிக்கொல்லி மருந்து இருக்கும் பாட்டிலில் கசிவு அல்லது அவற்றின் சீல் உடைக்கப்பட்டிருந்தால் அவற்றை வாங்கக்கூடாது.

பூச்சிக்கொல்லி மருந்து வைக்கும் போது செய்யக்கூடாதவை:

 • பூச்சிக்கொல்லி மருந்துகளை வீட்டிலோ அல்லது வீட்டின் சுற்றுபுறத்திலோ வைக்கக்கூடாது.
 • பூச்சிக்கொல்லி மருந்துகளை அவைகளுடையது அல்லாது வேறு பாட்டில்களிலோ அல்லது பைகளிலோ மாற்றி வைக்கக்கூடாது.
 • பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக வைக்க கூடாது.
 • பூச்சிக்கொல்லி மருந்துகளை வைக்கும் இடங்களில் குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது.
 • பூச்சிக்கொல்லி மருந்துகளை சூரிய வெயில் மற்றும் மழையில் படுமாறு வைக்கக்கூடாது.

Kalanipoo pesticides

பூச்சிக்கொல்லி மருந்து கையாளும் போது செய்யக்கூடாதவை:

 • எப்பொழுதும் பூச்சிக்கொல்லி மருந்துகளை உணவு, தீவனம் மற்றும் இதர உண்ணும் பொருட்களுடன் எடுத்துச்செல்லக்கூடாது.
 • பூச்சிக்கொல்லி மருந்துகளை மொத்தமாக எடுத்துச்செல்லும்போது தோளிலோ, தலையிலோ அல்லது முதுகிலோ சுமந்து செல்லக்கூடாது.

 

பூச்சிக்கொல்லி கரைசலை தயாரிக்கும் போது செய்யக்கூடாதவை:

 • சேறு கலந்த அல்லது தேங்கிய தண்ணீரை உபயோகிக்கக்கூடாது.
 • பாதுகாப்பு உடைகளை அணியாமல் பூச்சிக்கொல்லி கரைசலை தயாரிக்க கூடாது.
 • உடம்பின் பாகங்களில் பூச்சிக்கொல்லி படுவதை தவிர்க்கவேண்டும்.
 • பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதற்கு தயாரிக்கும் போது அதன் பையில் அல்லது பாட்டிலில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படிக்கத் தவறக்கூடாது.
 • 24 மணிநேரத்திற்கு முன்பு தயாரித்த பூச்சிக்கொல்லி கரைசலை உபயோகிக்கக்கூடாது.
 • குறுணை பூச்சிக்கொல்லியை தண்ணீரில் கலந்து தெளிக்கக் கூடாது.
 • பூச்சிகொல்லி தெளிப்பானை நுகரக் கூடாது.
 • தேவையான அளவுக்கு மேல் பூச்சிகொல்லியை உபயோகிக்கக் கூடாது. அவ்வாரு செய்வது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும்.
 • பூச்சிகொல்லிகளை கையாளும் போது சாப்பிடுவது, குடிப்பது, புகைப்பிடிப்பது, பான்பராக் மெல்லுவது போன்ற செயல்களை செய்யக் கூடாது.

Kalanipoo pesticides

உபகரணங்கள் தேர்வு செய்வதில் நாம் செய்யக்கூடாதவை:

 • பூச்சிமருந்து கரைசலைத் தெளிக்க, கசியும் அல்லது குறையுடைய உபகரணங்களைத் தேர்வு செய்யக்கூடாது.
 • கோளாறுடைய அல்லது பரிந்துரைக்கப்படாத துவாரம் கொண்ட உபகரணங்களை உபயோகிக்கக்கூடாது. மேலும் அடைத்துள்ள உபகரணத்தின் மருந்து தெளிக்கும் துவாரத்தினை சுத்தம் செய்ய வாயினால் ஊதக்கூடாது. மாறாக பல்துலக்கும் பிரஷ்ஷினை தெளிப்பானுடன் கட்டிக்கொண்டு துவாரத்தினை சுத்தம் செய்ய உபயோகிக்கலாம்.
 • களைக்கொல்லி மருந்துக்கும் பூச்சிக்கொல்லி மருந்துக்கும் ஒரே தெளிப்பானை உபயோகிக்ககூடாது.

 

பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் போது செய்யக்கூடாதவை:

 • பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவு பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிக்கக்கூடாது.
 • பூச்சிக்கொல்லி மருந்தினை அதிக வெப்பத்துடன் கூடிய வெயில் அதிகமாக உள்ள நாட்களிலும் அதிகம் காற்றடிக்கும் நாட்களிலும் தெளிக்கக்கூடாது.
 • மழைக்காலத்திற்கு முன்பும் மழை பெய்த பின்பும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கக்கூடாது.
 • பேட்டரியின் மூலம் இயங்கும் ULV தெளிப்பானில் அடர்த்தி மிகுந்த பூச்சிக்கொல்லி மருந்து கரைசலை உபயோகிக்கக்கூடாது.
 • காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பூச்சிக்கொல்லி மருந்தினை அடிக்கக்கூடாது.
 • பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தபின்பு தெளிப்பான் மற்றும் வாளியினை நன்கு கழுவிய பின்பும் வீட்டு உபயோகத்திற்கு உபயோகிக்கக்கூடாது.
 • பாதுகாப்பு கவச உடைகளை அணியாமல், பூச்சிக்கொல்லி மருந்தடித்த வயலுக்குள் செல்லக்கூடாது.

 

பூச்சி மருந்து தெளித்த பிறகு செய்யக்கூடாதவை:

 • பூச்சிமருந்து கரைசலை தெளித்தபிறகு மீதமிருக்கும் கரைசலை குளத்திலோ அல்லது தண்ணீர் இருக்கும் இடங்களிலோ கொட்டக்கூடாது.
 • காலியான பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களை மற்ற பொருட்களை சேமித்துவைக்க உபயோகப்படுத்தக் கூடாது.
 • பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தபின்பு குளிக்காமலோ அல்லது துணிகளைத் துவைக்காமலோ சாப்பிடச் செல்லக்கூடாது.
 • விஷம் தாக்கிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் செல்லத்தயங்கக்கூடாது. ஏனெனில், விஷம் தாக்கியவர் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.

நன்றி: vikaspedia

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது