. . .

நெற்பயிருக்கு மாற்றாக பாரம்பரிய பனிவரகு சாகுபடி

Kalanipoo kanthan panivaragu

 

ம்முடைய முன்னோர்களின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையாக இருந்தவை சிறுதானியங்கள்தான். நெல் சோறு சாப்பிடுவது மட்டுமே கெளரவமாக மாறிப்போன பிறகு திருவிழா, விருந்தினர் உபசரிப்பு என முக்கிய நாட்களில் மட்டும் நெல் சோறு சமைக்கப்பட்டது. காலப்போக்கில், விருந்தாலியாக வந்தவன் வீட்டுக்காரனை விரட்டிவிட்ட கதையாக, சிறுதானியங்களை புறந்தள்ளி முழுமையாக மனிதர்களை ஆக்கிரமித்துவிட்டது நெல். இதன் கூடவே, மனித உடலில் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல நோய்களும் குடியேற ஆரம்பித்து விட்டன. விளைவு, மீண்டும் சிறுதானியங்களை தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்.

Siruthaniyam millet pani varagu
பனிவரகு சாகுபடி

 

இன்றைக்கு அரிசிக்கு தரப்படும் முக்கியத்தை போல, அன்றைக்கு பெரும் மதிப்பு பெற்றிருந்தது குறுதானியமான பனிவரகு.  இதில் 12.5% புரதச்சத்தும், 1.1% கொழுப்புச்சத்தும், 68.9% மாவுச்சத்தும், 2.2% நார்ச்சத்தும் உள்ளது. மற்ற தானியங்களில் அதிக அளவு காணப்படாத லைசின் என்ற அமினோ அமிலம் பனிவரகில் 4.6% உள்ளது. அவ்வளவு சிறப்புமிக்க, தமிழர்களின் பண்டைய உணவுப்பொருளான பனிவரகு, பெரும்பாலும் மானாவாரியாகத்தான் பயிரிடப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இதன் சாகுபடி பரப்பளவு குறைந்து வந்தாலும், சில மலைகிராமங்களில் உள்ள சில விவசாயிகள் இன்னும் பனிவரகு சாகுபடி செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நொட்சிக்குட்டை மலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கந்தன். தனது பனிவரகு தோட்டத்தில் உள்ள மாமரத்தில் இருந்து மாங்கய்களை பறித்து கொண்டிருந்த விவசாயி கந்தன் அவர்களை ஒரு மாலை வேளையில் சந்தித்தோம். “பால் கறக்க நேரமாச்சு மாடுகளை மேய்ச்சலில் இருந்து பிடித்துவா” என்று தன் மனைவியிடம் சொல்லிக்கொண்டே நம்மிடம் பேசத்துவங்கினார்…

Panivaragu kalanipoo
பனிவரகு பயிர்

“நாங்கள் பாட்டன் பூட்டன் காலத்திரிருந்தே பனிவரகு சாகுபடி செய்து வருகிறோம். சித்திரை மாதத்தில் கோடையில் மழை வந்த பிறகு இரண்டு சால் நன்கு உழ வேண்டும்.  நிலத்தை ஆர விட்டு அதில் நன்கு மக்கிய சான எருவைப் போட வேண்டும். பனிவரகிற்கு ஏற்ற பட்டம் வைகாசி. வைகாசி மாதத்தில் ஒரு மழை பெய்த பிறகு பனிவரகை விதைத்து உழவு செய்ய வேண்டும்.  ஒரு வாரத்தில் அனைத்து விதைகளும் நன்கு முளைத்து விடும். விதைத்த பிறகு எந்தவொரு உரமும் போட வேண்டிய அவசியம் இல்லை. விதைப்பதற்கு முன்பு போடப்படும் சான எரு மட்டுமே போதுமானது. மானாவாரியாக விதைப்பதால் களை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. விதைத்த மூன்று மாதத்தில் பனிவரகு அறுவடைக்கு வந்துவிடும். விதைத்தது முதல் அறுவடை வரை சீரான இடைவெளியில் ஐந்து மழைகள் வந்தால் பயிர் நன்கு வளர்ந்து நல்ல மகசூல் கொடுக்கும். பனிவரகை எந்தவொரு நோயோ பூச்சியோ தாக்க வாய்ப்பில்லை” என்று கூறிய கந்தன் அறுவடை மற்றும் விற்பனை பற்றி தொடர்ந்தார்.

Kalanipoo panivaragu
பனி வரகு மணிகள்

“விதைத்த மூன்று மாதங்கள் கழித்து பயிரை அறுவடை செய்யலாம். அறுவடை செய்த பயிரை களத்திலிட்டு மாடுகளை வைத்து தாம்புகட்டி தானியத்தையும் தட்டையும் பிரித்தெடுக்க வேண்டும். தட்டை மாட்டிற்கு வைத்து கொண்டு தானியத்தை நம் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். சில வருடங்கள் முன்புவரை தானியத்திற்கு செம்மண் கட்டி வைத்து மரக்களனில் போட்டு தவிடையும் அரிசியை தனியாக பிரிந்து எடுப்போம். இப்பொழுது இதற்கு இயந்திரம் வந்துவிட்டது. நம் வீட்டு தேவைக்கு தானியத்தை அரிசியாக்கி கொண்டு, அடுத்த பருவ விதைப்புக்கு போதுமான விதைகளை வைத்துகொண்டு மீதமுள்ள தானியத்தை மண்டியில் விற்று விடுவோம்” என்று கூறினார்.

Panivaragu kalanipoo millet

மேலும் “நன்கு மழை பெய்து நன்கு எரு போட்டு பயிரை வளர்த்தால் 100 கிலோ மூட்டைகளில் 10 மூட்டை மகசூல் கிடைக்கும். தானியத்தை விற்பனை செய்ய 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரூருக்குதான் செல்ல வேண்டும். ஒரு கிலோ பனிவரகு 25 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்பனையாகிறது. நன்கு மகசூல் கிடைத்தால் செலவு போக ஒரு ஏக்கருக்கு 20,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை லாபம் எடுக்கலாம். இதுவே அரிசியாக விற்றால் ஒரு கிலோ அரிசி 80ரூபாய் முதல் 100ரூபாய் வரை விற்கலாம். அரைத்து அரிசியாக விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்” என்று கூறினார்.


தொகுப்பு: எ. செந்தமிழ், முதுநிலை வேளாண் மாணவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

எ. கீதப்பிரியா, இளம் அறிவியல் வேளாண்மை.

 

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது