. . .

கடலுக்கடியிலும் விவசாயம் – இந்தியாவின் கவனத்திற்கு

kalanipoo deep sea farming

டலுக்கடியில் விவசாயம் என்பது சாத்தியமா? இன்றைக்கு உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைத்தும் சாத்தியமே. இன்று உணவு சார்ந்த தொழில் துறைக்கு வாய்ப்பு மற்றும் தேவை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப உணவு உற்பத்தி அதிகரிக்க வேண்டும். ஆனால் இன்று உணவு உற்பத்தியை அதிகரிக்க தேவையான நிலமும் இல்லை நீரும் இல்லை. எங்கு பார்த்தாலும் கட்டிடங்களும் தொழிற்சாலைகளும் பெருகி வருகின்றன. பார்க்கப்போனால், கடந்த ஒரு நூற்றாண்டில் உலகளவில் முன்பை விட நான்கு மடங்கு மக்கள்தொகை பெருகியிருக்கிறது, எனவே  வளர்ந்து வரும் மக்கள் தொகையின் தேவைகளை பூர்த்தி செய்ய தொழிற்சாலைகளும் கட்டிடங்களும் அவசியம் தான். அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு தட்டுப்பாட்டையும் நிவர்த்தி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இதற்கான ஒரு மாற்று வழியாகத்தான் கடலுக்கடியில் விவசாயம் என்ற ஆராய்ச்சியை தொடர்ந்துள்ளது பெருங்கடல் ரீஃப் குழு (Ocean Reef Group – Nemo’s Garden) என்ற அமைப்பு. இது எங்கு அமைந்து உள்ளது என்றால், இத்தாலியில் உள்ள நோலி என்ற கடற்கரையில். இவர்கள் இந்த ஆராய்ச்சியை ஆரம்பித்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. இம்முறையில் அவர்கள் தக்காளி, முட்டைக்கோஸ், ஸ்ட்ராபெரி மற்றும் துளசி போன்றவற்றை சாகுபடி செய்து வருகிறார்கள். எவ்வாறு சாத்தியமானது அதன் பின்னால் உள்ள அறிவியல் என்ன?

kalanipoo deep ocean farming
நன்றி: nemos garden

கடலுக்கடியில் சுமார் 8 அடி ஆழத்தில் பலூன் (Plastic pods) போன்ற அமைப்பை நிறுவி அதில் உள்ள நீரை வெளியேற்றி பகுதியளவு நீர் மட்டும் அதில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுகின்றனர்.கடலுக்கடியில் உள்ள வெப்பநிலையின் அளவு வெளியில் உள்ள வெப்பநிலை மாற்றத்தைக் காட்டிலும் சீராக இருக்குமாம். பின்னர் அந்த பலூனில் பெட்டி போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதனுள் தாவரத்தை வளர்க்கின்றனர். அதனுள் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் சீராக இருக்குமாறு கவனித்துக் கொள்ளுகின்றனர். இங்கு தாவரத்திற்கு தேவையான நன்னீர் எப்படி கிடைக்கிறது? கிட்டத்தட்ட 2000 லிட்டர் கொள்ளளவு உள்ள இந்த பலூனில் உள்ள பகுதியளவு தண்ணீர் வெப்பத்தினால் ஆவியாகி பலூனின் மேல்பகுதிக்கு சென்று மீண்டும் குளிர்ந்து நன்னீராய் திரும்பக் கிடைக்கும். அப்படி பெறப்பட்ட நீரில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்காது. எனவே அந்நீரில் ஊட்டச்சத்துக்களை செறிவூட்டி பின்பு தாவரங்களுக்கு அளிக்கின்றனர். மேலும் இங்கு பூச்சி தாக்குதலுக்கும் நோய்தாக்குதலுக்கும் எந்த ஒரு வாய்ப்பும் இல்லை. பூச்சிக்கொல்லிக்கும் பூஞ்சணக்கொல்லிக்கும் வேலை இல்லை. 

 

2027 ஆம் வருடத்தில் சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் என்று சமீபத்தில் ஐநா சபை அறிவித்திருக்கும் நமது இந்தியாவிற்கு இது போன்ற முயற்சிகள் கட்டாயம் அவசியம். 

 

மேலும் பல ஆராய்ச்சிகளின் முடிவில் பெரும்பாலான தாவரங்கள் அதன் வளர்ச்சிக்கு சூரியனில் இருந்து கிடைக்கும் சிவப்பு நிறமாலையே அதிகம் சார்ந்து உள்ளன. இந்த சிவப்பு நிறமாலை கடலுக்கடியில் 15 அடி ஆழம் வரை ஊடுருவி செல்லும். இந்த அமைப்பு கடலுக்கடியில் 8 அடி ஆழத்தில் உள்ளதால் தாவரத்திற்கு தேவையான சூரிய ஒளி போதுமான அளவு கிடைகிறது. இந்த அமைப்பானது முழுவதும் கணினிமயமாக்கப்பட்டு அங்குள்ள கேமராவின் உதவியால் தாவரங்களின் வளர்ச்சி கண்காணிக்கப்படுகிறது. மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ இணைப்பை பயன்படுத்தி இதைப் பற்றிய முழு அறிவியலையும் தெரிந்து கொள்ளலாம்.

வீடியோவை பார்க்க இங்கே சொடுக்குங்கள்

இதில் உள்ள சிக்கல் என்ன?

இவ்வளவு நன்மைகள் இருந்தும் ஏன் இன்னும் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமாகவில்லை?, இதை பெரிய அளவில் சாகுபடி செய்ய தேவையான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. மேலும் தாவரங்களின் வளர்ச்சியை கடலுக்கடியில் சென்று கண்காணிக்கவும் சாகுபடி செய்யவும் அதில் பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே முடியும். இப்பொழுது இல்லை என்றாலும் பிற்காலத்தில் இது போன்ற தொழில் நுட்பங்களால் தான் உணவு உற்பத்தியை பூர்த்தி செய்ய முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதிலும் 2027 ஆம் வருடத்தில் சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் என்று சமீபத்தில் ஐநா சபை அறிவித்திருக்கும் நமது இந்தியாவிற்கு இது போன்ற முயற்சிகள் கட்டாயம் அவசியம். 


ஆக்கம்: கோகிலா.ப   (வேளாண்மை இளங்கலை முடித்தவர்  நவீன இயற்கை வேளாண்மை மற்றும் நில எழிலூட்டுதலில் ஆர்வம் உள்ளவர். விவசாயம் சார்ந்த புதிய தொழில்நுட்பம் பற்றிய செய்திகளை மக்களுக்கு தெரிவிப்பதில் அதிக ஈடுபாடு உள்ளவர் ) மின்னஞ்சல்: kokilaagri96@gmail.com

 

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது