. . .

தெரு விளக்கிற்கு மாற்றாகும் ஒளி வீசும் மரங்கள் – மின்சாரமில்லாமல் வெளிச்சம்!!

 

தெருவிளக்கு‘ என்றாலே நமக்கு ஞாபகம் வருவது நம் பெற்றோர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட “அந்த காலத்துல நாங்க எல்லாரும் தெரு விளக்கு வெளிச்சித்தில தான் படிச்சோம்” என்கிற அந்த வசனம் தான், ஏன் நம்மில் பலரும் மின்சார வசதி இல்லாமல் தெருவிளக்கில் படித்து வந்தவர்களாக இருப்போம், இன்னும் சொல்லப்போனால் இன்றும் பல இடங்களில் மின்சார வசதி இல்லாமல் தெரு விளக்கு அடியில் அமர்ந்து படிக்கும் நிலை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி பல கதைகள் கொண்ட தெருவிளக்கிற்கு ஒளி தர மின்சாரம் தேவை. ஆனால் இன்று உள்ள அறிவியலோ மின்சாரம்  இல்லாமல் இயற்கையாய் சாலையோரத்தில் வளரும் மரங்களே ஒளிவீசும் என்கிறது.

மரம் ஒளி வீசுமா!! அது எப்படி சாத்தியம்?

நம்மில் பலருக்கும் சிறுவயதில் மின்மினி பூச்சியை பிடித்து விளையாடிய அனுபவம் இருந்திருக்கும். அது எவ்வாறு ஒளிவீசுகிறது என்ற கேள்வியும் எழுந்திருக்கும்.  மின்மினிப்பூச்சி எவ்வாறு மின்னுகிறது என்ற கேள்விக்கான பதில் மூலம் தான் நம் ஆராய்ச்சியாளர்களால் மரங்களை ஒளிவீச வைக்க முடிந்தது. இன்று நானோபயோனிக்ஸ் (nanobionics) என்பது வளர்ந்து வரும் ஒரு தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பல மாற்றங்களை கொண்டுவர முடியும் என்கிறது அறிவியல். இம்முறையை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களின் ஒளிச்சேர்க்கையை (Photosynthesis) அதிகப்படுத்தியுள்ளனர். மேலும் இம்முறையின் மூலம் வெடிமருந்தில் பயன்படுத்தக்கூடிய நைட்ரோ-அரோமாட்டிக்ஸ் (nitroaromatics) என்ற நச்சு நிலத்தடிநீரில் கலந்திருப்பதை தாவரத்தை வைத்தே கண்டறிந்தனர். இந்த தொழிற்நுட்பத்தின் அடுத்த ஆராய்ச்சியாக அவர்கள் செய்வது தான் தெருவிளக்கிற்கு மாற்றாய் மரங்களே ஒளி தர வைக்கும் ஏற்பாடு.

மின்மினிப்பூச்சிகள் எவ்வாறு ஒளிவீசுகின்றன? 

மின்மினிப்பூச்சிகளில் உள்ள லூசிபெரின் (luciferin) என்ற மூலக்கூறுதான் அவைகள் ஒளிர்வதற்கு காரணம். அதாவது லூசிபெரேஸ் (luciferase)  என்ற நொதி லூசிபெரின் என்ற மூலக்கூறுடன் வினைபுரியும் போது ஒருவித ஆற்றல் வெளிப்படும். அந்த ஆற்றல் தான் மின்மினிப்பூச்சிகளில் ஒளியாக வெளிப்படுகிறது. மேலும் கோ என்சயம் எ (Co enzyme A) என்ற மற்றொரு மூலக்கூறும் இதற்கு உறுதுணையாக உள்ளது. 

ஆடிவேரை -kalanipoo
ஆடிவேரை (Watercress) தாவரம்

இந்த மூன்று மூலக்கூறுகளையும்  ஆடிவேரை (Watercress)  என்ற தாவரத்தில் நானோ கேரியர் (Nano carier)  உதவியுடன் செலுத்தி முயற்சி செய்தார் அமெரிக்கா கேம்பிரிட்ஜில் உள்ள MIT  பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மைகேல் ஸ்ட்ரானோ (Michael strano). எவ்வாறு இவை மின்மினிப்பூச்சிகளில் வினைபுரிகின்றனவோ அதே போன்று தாவரங்களிலும் வினைபுரிந்து ஒளிவீசின. இம்மூலக்கூறுகளை தாவரங்களினுள் எடுத்துச்செல்ல சிலிக்காவினாலான நானோதுகள்களை உபயோகிக்கின்றனர். இதற்கு அவர்கள் தாவரத்தின் இலைகளை  நானோதுகள்கள் செறிவூட்டப்பட்ட ஒரு திரவத்தினுள் சிறிது நேரம் வைப்பதன் மூலம் அந்த மூலக்கூறுகள் தாவரத்தினுள் சென்று வினைபுரிய ஆரம்பிக்கின்றன அல்லது மைக்ரோ ஊசி (micro syringe) போன்ற இதற்காகவே வடிவமைக்கப்பட்ட கருவிகளை பயன்படுத்தி இம்மூலக்கூறுகளை தாவரத்தினுள் செலுத்துகின்றனர். மேலும் இந்த நானோதுகள்கள் பாதுகாப்பானவை என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம்  என்ற அமைப்பால் வகைப்படுத்தப்பட்டவை. 

இந்த நானோதுகளின் அளவும் தாவரங்களுக்கு நச்சாகாத  வகையில் பார்த்துக் கொள்கின்றனர். இந்த ஆராச்சியின் ஆரம்பத்தில் தாவரங்கள் வெறும் 45 நிமிடங்கள் மட்டுமே ஒளிவீசின. பின்பு ஆராய்ச்சியாளர்களின் தொடர்முயற்சியால் தாவரங்களின் ஒளிரும் திறனை மூன்றரை மணி நேரமாக அதிகரித்துள்ளனர். இன்னும் அதன் திறனை அதிகப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இந்த தொழில்நுட்பத்தின் அடுத்த ஒரு படியாக முன்னேறி மரங்களிலும் இம்மூலக்கூறுகளை பயன்படுத்தி ஒளிவீசச் செய்யும் முயற்சியும் நடந்து வருகிறது. இதனால் மரங்களை தெருவிளக்கிற்கு மாற்றாக பயன்படுத்தலாம்  என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

nanobionics-kalanipoo

      

இன்று வளர்ந்து வரும் தொழிற்சாலைகள் வெளியேற்றப்படும் கார்பன்-டை-ஆக்சைடு (Carbon di Oxide) அளவு அதிகரித்து புவி வெப்பமயமாதலுக்கு காரணமாகின்றது. மரங்கள் மூலம் மட்டும்தான் இதை கட்டுக்குள் வைக்க முடியும். இந்த ஆராய்ச்சி மட்டும் வெற்றிகரமாக முடிந்து நடைமுறைக்கு வந்தால் ஒரே கல்லில் பல மாங்காய் என்பதை போல தெருவிளக்கிற்கு மாற்றாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுதலைக் குறைக்கவும் மற்றும் மின்சாரம் உபயோகிப்பதன் அளவையும் குறைக்க முடியும். மேலும் மரங்கள்தான் மழைக்கு முக்கியமான ஆதாரமாகவும் பறவைகளுக்கு வாழிடமாகவும் இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் இயற்கையை பாதுகாக்கவும் பெரும் துணையாக இருக்கும். 

 


தொகுப்புகோகிலா.ப  வேளாண்மை இளங்கலை முடித்தவர். நவீன இயற்கை வேளாண்மை மற்றும் நில எழிலூட்டுதலில் ஆர்வம் உள்ளவர். விவசாயம் சார்ந்த புதிய தொழில்நுட்பம் பற்றிய செய்திகளை மக்களுக்கு தெரிவிப்பதில் அதிக ஈடுபாடு உள்ளவர்.  மின்னஞ்சல்: kokilaagri96@gmail.com

 

 

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது