. . .

இப்படி வளர்த்தால் மரங்கள் வேகமாக வளருமாம்

miyawaki kalanipoo

 

ன்று நகரமயமாதல் என்ற மாயையில் மூழ்கியுள்ள நாம் இயற்கையை காக்க மறந்துவிட்டோம் என்றுதான் கூற வேண்டும். நகரமயமாதல் என்பது இயற்கை என்ற விதானத்தின் மீது தொங்கிக்கொண்டிருக்கும் கோடாரியாகத்தான் உள்ளது. இயற்கையை மனிதனின் ஆடம்பர தேவைக்காக அழித்துவிட்டு இன்று அவசிய தேவைக்காக அல்லல் பட்டுக்கொண்டு இருக்கிறோம். இன்றும் இயற்கையை சீரழித்துக்கொண்டுதான் இருக்கிறோம். சமீபத்தில் உலகத்தின் நுரையீரல் என்று சொல்லக்கூடிய அமேசான் காடுகளில் ஏற்பட்ட தீவிபத்தால் கிட்டத்தட்ட ஒவ்வொரு மணிநேரத்துக்கும்  10 கிலோமீட்டர் பரப்பளவிலான காடுகளில் உள்ள மரங்கள் மற்றும் உயிரனங்கள் எரிந்து சாம்பலாயின. இவ்வாறு சென்றால் இறுதியில் மனிதன் சுவாசிக்கத் தேவையான காற்றை கூட விலை கொடுத்து வாங்கும் நிலை வரும் என்பதில் சந்தேகமில்லை. 

நமக்கும் நம் வருங்கால தலைமுறையினருக்கும்  இந்நிலை ஏற்படாமல் தடுக்க நாம் அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும். இப்பொழுதாவது முயற்சி எடுத்தால்தான் இயற்கையை காக்கமுடியும். ஒரு செடியை நட்டு அது வளர்ந்து மரமாக வேண்டும் என்றால் குறைந்தது பதிமூன்றிலிருந்து பதினாறு வருடங்களாவது ஆகும். ஆனால் பத்து ஆண்டுகளில்  ஒரு மரம் அடையும் வளர்ச்சியை இரண்டு ஆண்டுகளில் அடைந்தால் இப்பொழுது இருக்கும் இயற்கையில் பாதியையாவது நம்மால் காக்கமுடியும். பத்து ஆண்டுகளில் ஒரு மரம் அடையும் வளர்ச்சியை இரண்டு ஆண்டுகளில் அடைய முடியுமா? அது சாத்தியமா?

kalanipoo miyawaki

மியோவாக்கி முறை

ஆம் செடியை இரண்டு ஆண்டுகளில் மரமாக்க முடியும். அது மியோவாக்கி முறையில் சாத்தியம். அது எவ்வாறு? மியோவாக்கி என்பது குறைந்த இடத்தில் ஆழமான குழிகளை வெட்டி மட்கும் குப்பைகளைக் கொட்டி  அடர்த்தியான முறையில் மரங்களை நட்டு வளர்ப்பதாகும். இவ்வாறு வளர்த்தால் பத்து வருடத்தில் அடையும் வளர்ச்சியை இரண்டு வருடத்தில் அடைய முடியும். ஏனென்றால் மரங்களை நெருக்கமாக நடுவதால் ஒளிச்சேர்க்கை செய்வதற்க்கான சூரிய ஒளிக்காக போட்டியிட்டு வளரும். அதனால் தாவரங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

மேலும் ஆழமான குழிகளில் நடுவதால் வேர்களும் நன்கு கீழிறங்கி உறுதியாக இருக்கும். இம்முறை ஜப்பான் நாட்டில் முதன்முதலில் கிராமியவாக்கி என்ற தாவரவியலாளரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் இம்முறைக்கு அவருடையே பெயரே வைக்கப்பட்டுள்ளது. இம்முறையின் மூலம் நான்கு கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டு காடுகளை உருவாக்கியிருக்கின்றார். இவருடைய இந்தச் சேவையைப் பாராட்டும் விதமாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு “ப்ளூ பிளானட்” என்கிற விருது கொடுத்து பெருமைப்படுத்தியுள்ளது.

இம்முறையில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் வனமரங்களை மட்டுமல்லாமல்  பழமரங்களையும் நட்டு பொருளாதார ரீதியாகவும் பயன்பெறலாம். 

இம்முறையில் பலமாற்றங்களை செய்து அவரவர் தேவைக்கேற்ப ஒவ்வொரு நாடுகளிலும் செயல்படுத்துகின்றனர். அதுபோல நம் தேவைக்கு ஏற்ப பழ மரங்களையும் நட்டு பயன் பெறலாம். உதாரணமாக திருப்பூர் மாவட்டத்தில் ‘கலாம் அறக்கட்டளை’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சுமார் 63 வகையான மரங்களை 22  சென்ட் நிலத்தில் மியாவாக்கி முறையில் நட்டு வெற்றியும் பெற்றுள்ளனர். இவர்கள் மட்டுமல்லாது வேறு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதைச் செய்து வருகின்றனர். அதையும் தாண்டி பொள்ளாச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் இந்த மியாவாக்கி முறையை பயன்படுத்தி கார்பொரேட் நிறுவனங்களிலும் பசுமை என்கிற எண்ணத்தில் ஒரு சிறு தொழிலாகவும் செய்து வருகின்றனர்.

சுற்றுச்சூழல் உகந்த பல ஸ்டார்ட் அப்கள் உருவாகி அவை இன்று வெற்றி பெறுவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். அதில் கார்ப்ரேட் தொழிலகங்களில், பெரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மியாவாக்கி முறை மூலம் மரம் வளர்த்துத் தருவதை ஒப்பந்த அடிப்படையில் மேலே உள்ள உதாரணம் போல் தொழிலாக ஆரம்பிக்கலாம், ஏனெனில் இப்போது பல நிறுவனங்களில் இது போன்ற இயற்கை சார்ந்த நடவடிக்கையை ஏற்படுத்த அந்நிறுவனம் பெரிதும் ஆர்வமாக உள்ளது. அதனால் இளைஞர்கள் இதில் கவனம் செலுத்தினால் ஒரு புதிய போட்டியில்லாத வருமானம் காத்திருக்கிறது.

kalanipoo miyawaki

இயற்கையில் ஏதாவது நெருக்கடிகள் வரும் பொழுது தான் மனிதன் அதன் அவசியத்தை உணர்கிறான். இப்பொழுது இந்த மியாவாக்கி முறை ஒரு சில சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களால் மட்டுமே பேசப்பட்டு வருகின்றது. ஐநா சபையின் கணக்கெடுப்பின்படி இந்த பூமியில் மூன்று லட்சத்து நான்கு ஆயிரம் கோடி மரங்கள் உள்ளன. ஆனால் மனித நாகரீகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை 48% மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் இந்த பூமியில் இருந்து 1530 கோடி மரங்கள் காணாமல் போகின்றன. அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் 500 கோடி மரங்கள் மனித முயற்சியாலும் இயல்பாகவும் வளர்கின்றன. எப்படி பார்த்தாலும் இழப்பு என்பது சுமார் 1330 கோடி மரங்கள்.

   

“மழைக்கு மரம்தான் வரம், மண்ணுக்கும் மரந்தான் உரம்.          மனிதா கோடாரியை தூர எறி, மரம் காக்கும் புதுக்கொள்கையைத் தரி”

 

மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக 405 மரங்கள் உள்ளன. இந்த கணக்கீட்டுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் நிலை மிகவும் பரிதாபம். இங்கு ஒவ்வொரு மனிதருக்கும் ஈடாக வெறும் 26 மரங்கள் மட்டுமே உள்ளது. காடுகள் அனைத்துமே பறவைகள், வனவிலங்குகள் மற்றும்  நீரோட்டத்தினால் உருவானவை. இவ்வாறு இயற்கையில் உருவான காடுகளை இன்று செயற்கையாய் உருவாக்கும் நிலையில் உள்ளோம். முயற்சி எடுப்போம் வரும் தலைமுறையினரை காப்போம்.      


ஆக்கம்: ப. கோகிலா

வேளாண்மை இளங்கலை முடித்தவர். நவீன இயற்கை வேளாண்மை மற்றும் நில எழிலூட்டுதலில் ஆர்வம் உள்ளவர். விவசாயம் சார்ந்த புதிய தொழில்நுட்பம் பற்றிய செய்திகளை மக்களுக்கு தெரிவிப்பதில் அதிக ஈடுபாடு உள்ளவர்மின்னஞ்சல்: kokilaagri96@gmail.com

 

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது