. . .

‘மீன் அமிலக்கரைசல்’- இயற்கை வாழை விவசாயியின் வெற்றிக்கதை

kalanipoo imayam banana

 

ரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மகாதானபுரத்தைச் சேர்ந்தவர் திரு.பி.ஜெயபால். இவர் 15 வருடமாக வாழை விவசாயம் செய்துவருகிறார். இவர் வாழை சாகுபடியில் முன்னோடியாக திகழ வேண்டும் என்பதற்காக ATMA (SEEPERS) 2017-2018 நடத்திய பல பயிற்சிகளில் கலந்துகொண்டு பயன் பெற்றுள்ளார். இவர் இதுவரை இரசாயன உரங்களையே பயன்படுத்தாமல், இயற்கை விவசாயம் மட்டும் செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். மேலும், மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் நடத்திய ‘வாழை திருவிழாவில்’ ஐம்பதிற்கும் மேற்ப்பட்ட விவசாயிகளைத் தன் தலைமயின் கீழ் அழைத்துச் சென்று பயிற்சி பெற செய்துள்ளார். விவசாயிகள் இந்த இரண்டு நாள் பயிற்சியில் கலந்து கொண்டு பயனும் பெற்றுள்ளனர்.

மேலும் விவசாயி ஜெயபால் அவர்கள், வாழையைத் தனியாக நடவு செய்யாமல், அத்துடன் காய்கறிகள், மரவள்ளிக்கிழங்கு, சின்னவெங்காயம், கொடி காய்கறிகள் முதலியவற்றை நட்டு கூடுதல் வருமானம் ஈட்டியுள்ளார்.

kalanipoo banana imayam
திரு.பி.ஜெயபால்

இவரின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது இயற்கை தொழில்நுட்பமான ‘மீன்அமிலக்கரைசல்’. 

மீன் அமிலக்கரைசலைத் தயாரிக்கும் முறை

ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ மீன் இரண்டையும் கலந்து ஒரு பிளாஸ்டிக் அல்லது சிமெண்ட் தொட்டியில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும். நாற்பது நாள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் தயாராகும், மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். அதிலிருந்து பழவாடை வீசும். இது மீன் அமிலக்கரைசல் தயாரானதை அறிகுறிக்கும். அந்த மீன் அமிலத்தை 200 மி.லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மீது தெளிக்கலாம். இந்த மீன்அமிலக்கரைசலை இவர் வாழையில் தெளித்துள்ளார். இதனால் வாழை இலையானது அபரீவிதமான வளர்ச்சியைப் பெற்று அதிக இலாபம் ஈட்டியுள்ளார்.      

பொதுவாக, வாழையில் எந்த ஒரு விவசாயியும் மூன்று ரத்தூனுக்கு மேல் வளர விடுவதில்லை. ஏனெனில் மூன்று ரத்தூனுக்கு மேல் வாழையானது அதிக மகசூல் தருவதில்லை. ஆனால் ஜெயபால் அவர்கள், தற்போது ஆறாவது ரத்தூன் வரை வாழையை வளரச் செய்து அதிக மகசூலும் ஈட்டி வருகிறார். இப்படி அவர் இலாபம் ஈட்டுவதற்கு மல்சிங் (MULCHING) முறையே காரணமாகும். மல்சிங்  என்பது இலைதழைகளை மண் மீது பரப்பி நீர் ஆவியாகாமல் பார்த்துக் கொள்வதாகும். மேலும் இலைதழைகளே மக்கி மண்ணுக்கு உரமாகவும் ஆகிறது.

மல்சிங்  என்பது இலைதழைகளை மண் மீது பரப்பி நீர் ஆவியாகாமல் பார்த்துக் கொள்வதாகும். மேலும் இலைதழைகளே மக்கி மண்ணுக்கு உரமாகவும் ஆகிறது.

அடுத்து, பார்த்தீனியம் என்னும் களை, கிருஷ்ணரயபுரத்தில் பரவலாகக் காணப்படுகிறது. இது பயிர் உற்பத்தியை பெருமளவில் பாதிப்பதுடன், ஒவ்வாமை, சுவாச பிரச்சனைகளை உண்டாக்குகிறது. மேலும் கால்நடைகளின் பிறழ்வுத்தன்மைக்கும் காரணமாகிறது. இதனை கட்டுப்படுத்த நமது இயற்கை விவசாயியான ஜெயபால் அவர்கள், ரசாயனக் களைக்கொள்ளியைப் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்த புது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார்.

அது 250 கிராம் உப்பை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெவிட்டிய கரைசலை உருவாக்கி, பின் அதில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை விட்டு, பர்த்தீனியும் மீது தெளித்தால், ஐந்து நிமிடத்தில் அந்த களை இறந்து போவதை நாம் கண்கூடாகக் காணமுடிகிறது. அதைத்தெளித்து ஒரு வாரத்தில் பார்த்தீனியும் முற்றிலுமாகக் காய்ந்து விடுகிறது. இதை பயன்படுத்துவதால் அதிக செலவில்லாமல் களைகளை அழித்து, மண் வளமும் கெடாமல் பார்த்துக்கொள்கிறார். இவர் மேலும், தன் வயலுக்கு பஞ்சகாவ்யா முதலியவற்றைப் பயன்படுத்துகிறார். இவ்வாறு இயற்கை முறையில், அதிக இலாபம் பெற்று பயிர் வளமும், மண் வளமும் கெடாமல் விவசாயம் செய்து திரு.ஜெயபால் அவர்கள், மற்ற விவசாயிகளுக்கு முன் உதாரணமாக விளங்குகிறார்.    


எழுத்தாக்கம்: இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி மாணவிகள், கிராம தங்கல் அனுபவத்திட்டம், கிருஷ்ணராயபுரம்.

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது