. . .

மேரியும் அவள் சித்தப்பாவும் – தண்ணீரைச் சேமிக்கலாம் வாருங்கள்

kalanipoo marrie

 

குழந்தைகளுக்கான வேளாண் அறிவையும் வாசிப்புப் பழக்கத்தோடு சேர்த்த இலக்கண ஆற்றலையும் மேம்படுத்தவே கழனிப்பூவின் இந்த மழலை கழனி பகுதி… 

மேரியும் அவள் சித்தப்பாவும் கடை வீதிக்கு சென்று மளிகை பொருட்களை வாங்கி வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு ஆழ்துளை கிணற்றின் அருகில் நிறைய காலி குடங்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். இதைக் கண்ட மேரி  ஏன் சித்தப்பா இங்கு இவ்வளவு கூட்டமாக இருக்கிறார்கள்..! எதற்காக.? என்று கேட்டாள்.

 

சித்தப்பா: தண்ணீருக்காக நிற்கிறார்கள், வரிசையில் நின்றுதான் தண்ணீர் பிடிக்க வேண்டும். ஒருவருக்கு இரண்டு குடம் தான் அனுமதிப்பார்கள்.

மேரி: இரண்டு குடம் தானா?!

சித்தப்பா: ஆமாம்…இந்த ஊரில் இருப்பவர்கள் எல்லாம் இங்கு தான் தண்ணீரை பிடித்துச் செல்கின்றனர். தண்ணீர் பஞ்சம்.

மேரி: வேறு எங்கேயும் தண்ணீர் இல்லையா சித்தப்பா?!

சித்தப்பா: இல்லைை மேரி… இங்கு மட்டும் இல்லாமல் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் தண்ணீர் பஞ்சம் பெரும் பிரச்சனையாக உள்ளது.

மேரி: எதனால் சித்தப்பா!?

சித்தப்பா: தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதனால் தண்ணீர் தேவை பெரிதாக உள்ளது. அதுமட்டுமின்றி நகரமயமாக்கலால் இயற்கை வளங்களான காடுகள், மரங்கள் மற்றும் ஏரிகள் எல்லாம் அழிக்கப்படுகிறது.

மேரி: அதனால் என்ன ஆகும் சித்தப்பா?

சித்தப்பா: தார் சாலைகளுக்கும் கட்டிடங்களுக்கும் இடையிலும் கான்கிரீட் போட்டுவிட்டதால் மழைநீர் பூமிக்கு செல்ல முடிவதில்லை. நெகிழி குப்பைகள் ஆங்காங்கே போடுவதால் அவை மக்காமல் அப்படியே இருந்து விடுகிறது. அதுமட்டுமின்றி நிலத்தடி நீர் மட்டத்தை அதிகம் பயன்படுத்தப்படும் நாடுகளில் இந்தியா முதலில் உள்ளது. இன்னும் சில வருடங்களுக்கு பிறகு தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருக்கும். தண்ணீரே இல்லாத நிலை உருவாகிவிடும்.

மேரி: அச்சச்சோ! அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் சித்தப்பா?

சித்தப்பா: தண்ணீரை சில எளிய வழிகளில் சேமிக்கலாம். குளிப்பதற்கு குறைவான அளவே  தண்ணீர் பயன்படுத்தலாம், பாத்திரம் கழுவும் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றலாம். துணி துவைக்கும் போது தண்ணீரை வீணாக விடாமல் சிக்கனமாக பயன்படுத்தலாம். சமையல் செய்யும் போது வீணாகும் நீரை ஆடு, மாடுகளுக்கு ஊற்றலாம். பல் துலக்குதல், முகம் கழுவும்  போது குழாயை திறந்து விடாமல் வாளியில் சிறிது நீரை எடுத்து கழுவலாம். நாம் செல்லும் வழியில் எங்கேனும் குழாய்களில் நீர் வீணாகச் சென்றிருந்தால் அதை சரி செய்ய வேண்டும். ஒவ்வொருவரது வீட்டிலும் மழை நீர் சேகரிப்பு தொட்டி வைக்கலாம், மரம் நடலாம். காடுகள் அழிப்பதை குறைத்து,  ஏரி, குளங்களை எல்லாம் தூர் வாரி அதில் கடலில் கலக்கும் நீரை சேமித்து வைக்கலாம்.

மேரி: நீங்கள் கூறிய அனைத்து விஷயங்களையும் நான் கடைப்பிடிப்பேன். தண்ணீரை வீணாக்க மாட்டேன், மழைநீரை சேமிப்பேன், மரம் நட்டு அதை நல்ல முறையில் வளர்ப்பேன். இதை என் பள்ளி நண்பர்கள் மற்றும் என்னுடன் விளையாடும் அனைவரிடமும் சொல்லி அவர்களையும் செய்ய சொல்லுவேன்.

 

குழந்தைகளே மேரி அவள் நண்பர்களுக்கு சொல்வதைப்போல நாமும் நம் நண்பர்களுக்கு சொல்லுவோம். மரம் வளர்ப்போம் மழை பெறுவோம். தண்ணீரை சிக்கனமாக்குவோம், சேமிப்போம்.

 

தொகுப்பு: G. செல்வ சுதாகர், வேளாண் மாணவர் ( மின்னஞ்சல்: selvasudhakarssk@gmail.com).

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது