. . .

புவிசார் குறியீடு பெற்ற நம் ஈரோட்டு மஞ்சள்- ஓர் முழுப் பார்வை | பகுதி 1

kalanipoo erode turmeric

 

 

மஞ்சள் முக்கியமான விவசாயப் பயிராகும். இவை உணவு, மருத்துவம், மூலிகை என எல்லாவற்றிற்கும் பயன்படுகிறது. மஞ்சள் உற்பத்தியில் உலகில் 60% இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில். நம் நாட்டில் விளையும் மஞ்சள் கிழங்கில் ‘குர்குமின்’ என்ற மருந்துப் பொருள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் வெளிநாடுகளில் நம் நாட்டு மஞ்சளுக்கு அதிக வரவேற்பு.

தமிழ்நாட்டில் ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களில் மஞ்சள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. அதுவும் ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு கிடைக்கும் அளவிற்கு தரம் வாய்ந்ததாக இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் வைகான் மஞ்சள், ஒடிஷாவின் கந்தமால் மலை மஞ்சள் ஆகியவற்றிற்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இப்போது ஈரோடு மஞ்சளுக்கும் கிடைத்துள்ளது. மஞ்சள் போலவே தமிழகத்தில் காஞ்சிப் பட்டு, நாச்சியார் கோவில் குத்து விளக்கு போன்ற 28 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

 

புவிசார் குறியீடா ?! அப்படியென்றால்?

ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும் படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு ஆகும் (GI TAG). இந்தக் குறியீடு அந்தப் பொருள் புவி சார்ந்து பெறும் தரம் அல்லது நன்மதிப்பை பெறும் சான்று ஆகும். இந்தக் குறியீடு பெற்ற பொருள் சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப் படுத்த முடியாது. அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இந்தியாவில் இந்தச் சட்டம் 1999ல் நிறைவேற்றப்பட்டது. பிறகு 2003ல் இருந்து நடைமுறைக்கு வந்தது. இந்தியாவில் இதுவரை 195 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் உணவு மற்றும் விவசாயம் சார்ந்த 57 பொருட்களுக்கு கிடைத்துள்ளது.

kalanipoo turmeric 1

 

நம் ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு:

சங்க காலத்தில் இருந்தே மஞ்சள் பயிரிடும் வழக்கம் தமிழகத்தில் இருந்து வந்ததாகவும், மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் ஈரோடு மாவட்டத்தில் பெருவாரியாக பயிரிடப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு புவிசார் குறியீடு பதிவுத்துறை ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு அந்தஸ்தை வழங்கி உள்ளது. இந்தச் சான்றிதழ் ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்து, பின் வரும் பத்திகளில் மஞ்சள் பயிரிடும் முறை மற்றும் விளக்கம் பற்றி பார்ப்போம்.

மஞ்சளின் இரகங்கள்:

கோ 1, பி எஸ் ஆர் 1,2 , ரோமா, ஸ்வர்ணா, ரங்கா, ராஷ்மி, ராஜேந்திர சோனியா, கிருஷ்ணா, சுகுணா, சுகந்தம், விரலி மஞ்சள், அலப்பி சுப்ரிம், பிரதீபா மஞ்சள் ஆகிய ரகங்கள் உள்ளன.

கோ 1, பி எஸ் ஆர் 1,2, பிரதீபா ஆகியவை தமிழ் நாட்டு ரகங்கள் ஆகும். பிரதீபா மஞ்சள் ஈரோட்டில் அதிகமாக பயிரிடப்படுகிறது.

 

பருவம்:

மஞ்சளுக்கேற்ற பருவம் வைகாசி முதல் ஆனி வரை சிறந்த பட்டம் ஆகும்.

மண்:

நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் மற்றும் களி கலந்த மணற்பாங்கான இருமண் பாட்டு நிலம் சாகுபடிக்கு ஏற்றது.

விதையளவு:

விதையின் அளவைப் பொருத்து மாறுபாடு ஏற்படும். தாய் கிழங்கைக் கொண்டு பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கர் நிலத்திற்கு 750 முதல் 850 கிலோ விதை கிழங்கு தேவைப்படுகிறது.

kalanipoo turmeric 1

 

விதை நேர்த்தி:

விதை நேர்த்தி செய்வதால் விதை மற்றும் மண் பரவக் கூடிய நோய்களிடமிருந்தும், பூச்சிகளிடமிருந்தும் முளைக்கும் விதைகள் பாதுகாக்கப்படுகிறது. மஞ்சள் அறுவடை செய்ததும் செதில் பூச்சி மற்றும் பூஞ்சணம் தாக்காதவாறு விதை நேர்த்தி செய்ய வேண்டும். மஞ்சள் நடுவதற்கு முன்பும் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நிலம் தயாரித்தல்:

ஒருமுறை மஞ்சள் பயிரிட்டால் தொடர்ந்து மீண்டும் மீண்டும் மஞ்சள் பயிரிடக் கூடாது. ஒரு வருட இடைவேளை விட்டு பயிரிடலாம். தொடர்ந்து பயிரிட்டால் நூற்புழுத் தாக்குதல் இருக்கும். நிலத்தை களை இல்லாமல் குறுக்கு நெடுக்காக இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். பயிரிடுவதற்கு முன் நிலத்தை 3 – 4 முறை நன்கு உழ வேண்டும். கடைசி உழவின் போது ஒரு ஏக்கருக்கு 10 டன் மக்கிய தொழு உரம் இடுவது நல்லது. அல்லது 2 டன் மண்புழு உரம் கூட இடலாம். நிலத்தில் சாம்பல் சத்து குறைபாடு இருந்தால் நெல் உமிச் சாம்பல் ஒரு ஏக்கருக்கு 500 கிலோ வீதம் கடைசி உழவின் போது இடலாம். பிறகு நான்கு அடி அகலத்திற்கு மேட்டு பாத்தி அமைக்க வேண்டும். பாத்தியின் நீளத்தை இடத்தின் தன்மைக்கு ஏற்ப மாற்றி கொள்ளலாம்.

 

விதைத்தல்:

நடவுக்கு முன் ஆவூட்டம் இரண்டு லிட்டர், சூடோமோனஸ் ஒரு லிட்டர் உடன் 100 லிட்டர் தண்ணீர் கலந்து விதை மஞ்சளை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் நடவு செய்யலாம். இதனால் முளைப்பு திறன் அதிகரிக்கும். நிலத்தில் நீரை பாய்ச்சி விதை மஞ்சளை பாத்திகளின் ஓரம் 15 முதல் 20 செ.மீ இடைவெளியில் நான்கு செ.மீ ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். சரியான முறையில் நடவு செய்வதில் கவனம் அவசியம். இல்லையெனில் முளைக்காமல் போக அதிக வாய்ப்பிருக்கிறது. நெருக்கமாகவும் இல்லாமல் தூரமாகவும் இல்லாமல் சரியாக நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்:

மஞ்சள் நீண்ட கால பயிர் என்பதால் சற்று குறைவான அளவில் நீர் பாய்ச்சினாலும் எந்த பாதிப்பும் பெரிதாக இருக்காது. முதலில் நடவு செய்த மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் மண்ணின் தன்மைக்கேற்ப வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். வறட்சி காலங்களில் சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்ச வேண்டும். இதனால் மகசூல் எந்த விதத்திலும் பாதிக்காது.

kalanipoo erode turmeric

 

பயிர் பராமரிப்பு:

நடவு செய்த சில தினங்களில் களைகள் முளைக்க தொடங்கிவிடும். இதற்கு சுரண்டு களை கொண்டு களைகளை அகற்றலாம். 20 – 25 நாட்கள் கழித்து மீண்டும் களைகள் இருப்பின் அதை கைகளால் எடுத்து அகற்றலாம். நச்சு நிறைந்த இரசாயன களைக்கொல்லிகளை முடிந்த வரையில் பயன்படுத்தாமலிருப்பது நல்லது.

ஒரு மாதம் கழித்து களை இருந்தால் மீண்டும் ஒருமுறை களைகளை அகற்ற வேண்டும். ஓரிரு மாதங்களில் மஞ்சள் செடி சிறிது வளர்ந்து விடும். வளர்ந்த பிறகு அதைச் சுற்றி மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 45 நாளில் அமுதக்கரைசல் பயன்படுத்தலாம். இதனால் பயிர்கள் உடனடி வளர்ச்சி எடுக்கும். 2 கிலோ மாட்டு சாணம், 2 லிட்டர் மாட்டு கோமியம், 500 கிராம் பனை வெல்லம் இவற்றை 20 லிட்டர் தண்ணீரில் நன்கு கலக்கி ஒரு நாள் ஊற வைத்து, இதிலிருந்து அரை லிட்டர் கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பான் மூலம் இலைகளில் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும். இந்த அளவுகள் நிலத்தின் தன்மையைப் பொருத்து மாறுபடும்.

உரங்கள்:

ஒரு ஏக்கருக்கு 80 – 85 கிலோ வேப்பம் அல்லது கடலை புண்ணாக்கை அடி உரமாகப் போட வேண்டும். செயற்கை உரமான நைட்ரேட், பாஸ்பரஸ், பொட்டாசியம் (NPK) ஆகியவற்றை10- 20- 40 கிலோ அளவில் போட்டால் நல்லது. மேலுரமாக ஏக்கருக்கு 10 கிலோ தழை மற்றும் 35 கிலோ சாம்பல் சத்தினை மாதம் ஒருமுறை இட வேண்டும்.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாக மஞ்சளில் தாக்கும் பூச்சி மற்றும் புழுக்கள் பற்றியும், அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும், மஞ்சளின் மகசூல் அளவு, வியாபாரம் செய்யும் முறை, மஞ்சளின் மருத்துவ குணங்கள் என இதன் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.

தொகுப்பு: G.செல்வ சுதாகர், வேளாண் மாணவர்.

மின்னஞ்சல்: selvasudhakarssk@gmail.com

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது