. . .

இருமடங்காக திரும்பக் கிடைக்கும் அஞ்சலக சேமிப்பு-அரசுத்திட்டம் 1

kalanipoo kvk

 

கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra) 

அஞ்சல் நிலையங்களில் பத்திரத்தை பெற்றுக் கொண்டு முதலீடு செய்த பணத்தை 118 மாதங்கள் கழித்து மீட்டும் போது இரு மடங்காக கிடைக்கும் திட்டம் தான் இந்த கிசான் விகாஸ் பத்ரா. (KVP).

ஆரம்பத்தில், வங்கிக் கணக்கு இல்லாத ஏழை விவசாயிகளுக்கு அவசர காலத்தில் ஏற்படும் பணத்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக எளிமையான சேமிக்கும் முறையாக இத்திட்டத்தை 1988 இல் தொடங்கியது மத்திய அரசு. 2011 இல் இத்திட்டம் கைவிடப்பட்டு மீண்டும் 2014 இல் தொடங்கப்பட்டுள்ளது. இப்போது விவசாயிகள் மட்டுமின்றி 18 வயது பூர்த்தி அடைந்த இந்தியக் குடிமகன்கள் யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் பணத்தை சேமித்து வைக்கலாம்.

இந்திய அஞ்சல் துறை இத்திட்டத்தினை அமல்படுத்தி வருகிறது. குறைந்த பட்சமாக ₹1000 மதிப்பில் கூட பத்திரம் வாங்கிக்கொள்ளலாம். மேலும் ₹5,000, ₹10,000 மற்றும் ₹50,000 மதிப்புடைய முதலீட்டு பத்திரங்களும் கிடைக்கிறது. இதில் ₹50,000 பத்திரம் உங்கள் மாவட்ட தலைமை அஞ்சல் நிலையத்தில் தான் கிடைக்கும். ₹50,000 க்கு மேல் முதலீடு செய்ய வேண்டுமென்றால் பான் கார்டு அவசியம் (PAN Card).

நீங்கள் கெடுகட்டிப் போடும் ஆண்டின் அளவை வைத்து இதற்கான வட்டி விகிதம் மாறுபாடுகிறது. சராசரியாக ஆண்டுக்கு (2018இல்) 7.3% வட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

பெறப்பட்ட உங்கள் கணக்கோடு கூட்டு கணக்காக 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் மைனர் அக்கவுண்ட்டும் (இளவர் கணக்கு)  தொடங்கிக்கொள்ளலாம்.

சந்தை பணவீக்கத்தைப் பொறுத்து எந்த மாறுபாடும் இல்லாமல் நம்பகமான சேமிப்பை இரட்டிப்பாக்கும் திட்டம். 118 மாதங்கள் (9 வருடம் 10 மாதம்) சேமிப்பின் போது தான் இரட்டிப்பு வரவு இருக்கும், அதற்கு முன்பாக பணத்தேவையில் எடுக்க வேண்டும் என்று இருந்தால் 30 மாதங்களில் தான் எடுக்க முடியும்.

முதலில் படிவம் 1 இந்த லின்க்கைத் தொட்டு பதிவிறக்கம் செய்து அதில் உள்ளவற்றைப் பூர்த்தி செய்து உங்களுடைய ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் அட்டை போன்று ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் சேர்த்து அஞ்சலகத்தில் கொடுத்து நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் அளவிற்கேற்ற வகையில் பத்திரத்தை வாங்கிக் கொண்டு பத்திரமாக அதனை வைத்திருக்க வேண்டும். பணம் பெறுவதற்கு பத்திரம் அவசியம்.

kalanipoo kvp
பத்திரம்

100 மாதத்தில் இரட்டிப்புத் தொகை என்றிருந்த இந்தத் திட்டம் 118 மாதங்கள் என திருத்தம் செய்த போது இதில் முதலீடு செய்திருந்த பலர் கூடுதலாக 18 மாதங்கள் காத்திருக்க வேண்டியதாக அமைந்தது.

இதில் சிறப்பான பயன் என்னவென்றால் இந்த பத்திரத்தை வைத்து வங்கிக்கடன் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் கடன் பெறுபவர்களுக்கு வட்டி மிகவும் குறைவாகவே இருக்கும். வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு இது சிறப்பான திட்டம். அனைவருக்கும் வங்கிக்கணக்கு என ஜன்தன் திட்டம் வந்ததும் இந்த கிஷான் விகாஸ் பத்ரா திட்டம் கொஞ்சம் சிறப்பு இழந்து காணப்படுகிறது. இருந்தும் பல வழிகளில் சேமிப்பு இருப்பது அவசியம் தான், அதனால் குறிப்பிட்டத் தொகையில் இதில் சேமித்து வைப்பதும் நன்மையே.


தொகுப்பு: சா.கவியரசன். உயிரித்தகவலியல் பட்டதாரி. கழனிப் பூவின் நிர்வாகத் தலைமை. editor@kalanipoo.com

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது