. . .

காளான் வளர்க்கும் முறை அடிப்படையும் அதன் ஏற்றுமதியும்-பகுதி 1

kalanipoo kaalan paguthi1

சிறிய இடமாக இருந்தாலும் நாள் தோறும் இலாபம் பார்க்கும் தொழிலாக காளான் வளர்ப்பு தமிழகத்தில் நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது. அப்படிப்பட்ட இந்த காளான் வளர்ப்பில் சுய தொழில் முனைய ஆர்வமுள்ளவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் விதமாகத்தான் ‘கழனிப்பூ’ சார்பாக முனைவர். திரு. பிரகாசம் அவர்களுடனான இந்த உரையாடல்.

kalanipoo kalaan part1
முனைவர் திரு. பிரகாசம் அவர்கள், தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் தாவர நோயியல் (Plant Pathalogy) துறையில் முன்னாள் பேராசிரியராகவும், அனைத்து இந்திய ஒருங்கிணைந்த காளான் ஆராய்ச்சித் திட்டத்தின் திட்ட அலுவலராகவும் பணியாற்றிவிட்டு தற்போது கிருஷ்ணமூர்த்தி சர்வதேச விவசாய மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நாற்பது ஆண்டு கால காளான் வளர்ப்பு அனுபவத்துடன் கோயம்புத்தூரில் உள்ள இந்தியக் காளான் அறவாரியத்தினை நிறுவி அதன் தலைவராகவும் பணியாற்றி பல பேருக்கு சிறந்த முறையில் காளான் வளர்ப்பது பற்றி பயிற்றுவித்து வருகிறார், அவர்களுடனான உரையாடலிலிருந்து…

1# காளான் வளர்ப்பிற்கான அடிப்படைத் தேவைகள் என்னவாக இருக்கிறது?

முதன்மையாக காளான் வளர்ப்பில் வளர்ப்போருக்கு ஆர்வம் வேண்டும், அடுத்ததாக இடம் 15 அடி அகலத்திலும் 20 அடி நீளத்திலும் உள்ள சிறிய இடமாக இருந்தாலும் போதுமானது, பின் வைக்கோல் தேவை, காளான் விதை வாங்க வேண்டும். அவ்வளவு தான் இடம் நம்முடையதாக இருந்தால் தென்னை மட்டையில் குடில் அமைத்து 25 ஆயிரம் செலவில் சிறிய அளவில் காளான் வளர்ப்பில் ஈடுபடலாம், அதன் மூலம் நாள் தோறும் 5 கிலோ வரை காளான் வியாபாரம் செய்யலாம்.

2# காளான் வளர்ப்பு முறையில் இயற்கை முறை, செயற்கை முறை என ஏதேனும் இருக்கிறதா?

அப்படி எதுவும் இல்லை, காளான் நாம் வளர்க்கிறோம் என்றாலே அது செயற்கை முறை தான், ஆனால் அது செயற்கை காளான் கிடையாது, அஃதாவது இரசாயனங்களைக் கொண்டெல்லாம் உருவாக்குவது கிடையாது, வைக்கோலையும் சோள விதைகளையும் வைத்து வளரக் கூடியது தான். மழை பெய்தால் காட்டில் முளைத்திருக்குமே அதனையே நாம் இயற்கை காளான் என்கிறோம்.

3# இந்தியாவில் என்னென்ன வகை காளான் இருக்கின்றன? அதில் எந்த இரகம் தமிழகத்தில் சிறந்து விளங்குகிறது?

நம்முடைய நாட்டை பொறுத்த வரை நான்கு காளான் வகைகள் பெரிதாக வளர்க்கப்படுகின்றன. அவை மொட்டுக் காளான் (Button mushroom), சிப்பிக்காளான் (Oyster mushroom), பால் காளான் (Milky mushroom), மற்றும் வைக்கோல் காளான் (Paddy straw mushroom). அதில் தமிழகத்தில் அதிகமாக வளர்க்கக் கூடியவை என்றால் சிப்பிக்காளான் மற்றும் பால் காளான் தான், அதிலும் குறிப்பாக சிப்பிக்காளான் தான் தமிழகமெங்கும் அதிகமாக வளர்க்கிறார்கள். மொட்டுக் காளான் மிகவும் குளிர்ந்த பிரதேசங்களில் தான் வளரக்கூடியவை, தமிழகத்தில் ஊட்டியில் அவைகள் வளர்க்கப்படுகின்றன. தமிழகத்தில் ஏறத்தாழ 800 பண்ணைகளில் சிப்பிக்காளான் வளர்க்கின்றனர். அந்த சிப்பிக்காளானில் 8 இரகங்களை  தமிழக வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கிறது, அதில் ப்ளியுரோடஸ் ஃபொலோரிடா (Pleurotus florida) PF எனப்படும் இரகம் தான் தமிழகமெங்கும் சிறப்பாக வளர்க்கப்பட்டு வருகிறது.

kalanipoo kaalan paguthi1

4# எளிமையாக காளான் வளர்க்கும் முறை பற்றி கூறுங்களேன்…

தென்னை குடிலுக்குள் ஆற்று மணல்களை பரவச் செய்து, அதற்கு மேலாக வைக்கோலுக்குள் காளான் விதைகளை சேர்க்கப்பட்ட பாலித்தீன் பைகளை கட்டித் தொங்க விட வேண்டும்.  2 அடி நீளம் 1 அடி அகலமுள்ள பாலித்தீன் பைகளில் முதலில் பதப்படுத்தப்பட்ட வைக்கோலை 2-3 இன்ச்சு அளவில் நிரப்பிக்கொண்டு ஒரு கை அளவு விதையினை தூவ வேண்டும், அடுத்து அதேப் போல் 2-3 இன்ச்சு அளவிற்கு மீண்டும் வைக்கோல் பின் ஒரு கை விதை என ஐந்து அடுக்குக்கு வைக்கோலினை நிரப்பி அதனை மெதுவாக அழுத்திய பின் கட்டித் தொங்க விட்டு அந்தப் பைகளில் சுத்தமான கம்பியோ குச்சியோ வைத்து மேலிருந்து கீழ் வரை ஆங்காங்கே 15 ஓட்டைகளை இட வேண்டும். இதற்கு பெயர் தான் ‘அடுக்கு முறை படுக்கை தயாரிக்கும் முறை’ (Layer method of spawning).

வைக்கோலை பதப்படுத்துதல் என்றால், இத்துப் போகாத சுத்தமான வைக்கோலை, நீரில் போட்டு ஊர வைத்த பின், மேலும் அதனை நெல்லினை அவிப்பது போல் சாக்கைப் போட்டு மூடி வைத்து அவித்து அதனை உலர விட வேண்டும். பின் கையில் எடுத்து பார்த்தால் ஈரமாக இருக்க வேண்டும் ஆனால் பிழிந்தால் நீர் வரக் கூடாது, அந்த மிதமான ஈரப்பதத்தைத் தான் பாலித்தீன் பைகளுக்குள் பயன்படுத்த வேண்டும், இதனையே பதப்படுத்தப்பட்ட வைக்கோல் என்கிறோம். வைக்கோலினை வெட்டியும் (தரிக்கப்பட்டு) பயன்படுத்தலாம், வெட்டாமலும் பயன்படுத்தலாம்.

5# காளான் அறுவடை செய்யும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை?

தொங்கவிடப்பட்ட பிறகு அடியில் இருக்கும் ஆற்று மணலில் தண்ணீர் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும், குடிலுக்குள் வெப்ப அளவு 25-30° செல்சியஸும், 80-90% ஈரப்பதத்தையும் கடைப்பிடித்து வர வேண்டும். தொங்க விட்டு 15-20 நாட்களுக்குள் முதல் அறுவடை செய்யலாம், அடுத்து 7-10 நாட்களுக்கு பிறகு இரண்டாம் அறுவடை செய்யலாம், அடுத்த 7-10 நாட்களில் மூன்றாம் அறுவடை. அதன் பின்னர் அந்த பை மெலிந்துவிடும் அதனை அப்புறப்படுத்தி விட்டு புதிய பையினை நிரப்பி விட வேண்டும். அந்த அப்புறப்படுத்தப்பட்ட பையில் உள்ள வைக்கோலை பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்தலாம் மேலும் மண் புழு வளர்ப்பிற்கும் பயன்படுத்தலாம். முதல் அறுவடையின் போது பைகளில் அல்லாமல் மணலில் மட்டும் நீர் தெளித்து வந்தால் போதுமானது, அடுத்து வரும் இரண்டு அறுவடைக்கும் பைகளின் மீதும் நீர் தெளிக்க வேண்டும்.

இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் ஒரு குடிலுக்குள் ஒட்டு மொத்தமாக பைகளை நிரப்பி விடுதல் கூடாது. ஒரு படுக்கை, முதல் அறுவடை வரும் சமயத்தில் மற்றொரு படுக்கை இரண்டாம் அறுவடையும் மற்றொரு படுக்கை மூன்றாம் அறுவடையும் வரும் வகையில் தொடர்ந்து படுக்கைகளை அமைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நாள் தோறும் தொடர்ந்து உற்பத்தி வந்து கொண்டே இருக்கும். இதைக் கவனத்தில் வைக்காமல் தான் பல பேர் நஷ்டத்திற்கு உள்ளாகின்றனர்.

kalanipoo kaalaan pagudhi 1

6# குறைவான முதலீட்டில் வீடுகளிலேயே காளான் வளர்க்க முடியுமா?

வளர்க்கலாம். பழைய கோழிப் பண்ணைகளிலெல்லாம் வளர்க்கிறார்கள். ஆஸ்ப்பெஸ்டாஸ் போட்ட அறைகளில் கூட வளர்க்கலாம், ஆனால் எங்கு வளர்த்தாலும் மேலே குறிப்பிட்டுள்ள வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் அளவினை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

7# காளானின் ஏற்றுமதியின் நிலை நம் நாட்டில் எவ்வாறு உள்ளது?

ஏற்றுமது காளானில் பெரிதாக இல்லை, ஏனென்றால் உள் நாட்டு தேவையே அதிகமாக இருக்கிறது, தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டாலே ஒரு நாளைக்கு 75-100 டன் வரை தேவை உள்ளது, ஆனால் இப்போதைய நமது ஒரு நாள் உற்பத்தி 15-20 டன் வரை தான் உள்ளது. இருப்பினும் இந்தியாவிலிருந்து மொட்டுக் காளான் குறிப்பிட்ட அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, அதனை டின்னில் அடைத்து ஏற்றுமதி செய்கிறார்கள். அந்த மொட்டுக் காளான் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள மாநிலம் பஞ்சாப், வைக்கோல் காளான் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் ஒரிசா, அடுத்த படியாக பால் காளான் மற்றும் சிப்பிக்காளான் உற்பத்தியில் முதல் இடத்தில் தமிழ் நாடு தான் முன்னிலை வகித்து வருகிறது. இருந்தும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நாம் இன்னும் வளரவில்லை, எனவே உற்பத்தியில் தயக்கமின்றி பலர் ஈடுபட நேர்ந்தால் அவர்கள் இலாபம் பெறுவதோடு நம் நாட்டின் ஏற்றுமதியையும் அதிகரிக்கலாம்.

காளான் விதை தயாரிப்பில் சுய தொழில் தொடங்குதல், வங்கிக் கடன் பெறுவது, சந்தைப்படுத்தும் முறை, காளான் விலை ஏற்ற இறக்கம், தென்னை தோப்பினுள் காளான் வளர்க்கும் முறை குறித்து இந்த உரையாடலின் அடுத்த பகுதியின் தொடர்ச்சியில் பார்க்கலாம்.

உரையாடல்: சா. கவியரசன், வேளாண் கல்லூரியில் உயிரித்தகவியல் பட்டதாரி. விகடன் மாணவ பத்திரிகையாளர். ‘கழனிப்பூ’ வலைதளத்தின் நிர்வாகத் தலைமையாக பொறுப்பு வகித்து வருகிறேன். kaviyarasan@kalanipoo.com

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது