. . .

காளான் வளர்ப்பில் நேரடி விற்பனை நிச்சியம் கைகொடுக்கும்-பகுதி 2

kalanipoo mushroom part 2

காளான் வளர்ப்பில் சுய தொழில் முனைய ஆர்வமுள்ளவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் விதமாகத்தான் ‘கழனிப்பூ’ சார்பாக ‘கிருஷ்ணமூர்த்தி சர்வதேச விவசாய மேம்பாட்டு அறக்கட்டளை’யின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நாற்பது ஆண்டு கால காளான் வளர்ப்பு அனுபவத்துடன் கோயம்புத்தூரில் உள்ள இந்தியக் காளான் அறவாரியத்தினை நிறுவி அதன் தலைவராகவும் பணியாற்றி பல பேருக்கு சிறந்த முறையில் காளான் வளர்ப்பது பற்றி பயிற்றுவித்து வரும் முனைவர். திரு. பிரகாசம் அவர்களுடனான இந்த உரையாடல்.

kalanipoo kaalaan part2
முனைவர். திரு. பிரகாசம்

 

 

 

 

 

 

 

 

 

 

கடந்த பகுதி ஒன்றில் காளான் வளர்ப்பிற்கான அடிப்படை தேவைகள், எளிமையாக காளான் வளர்க்கும் முறை, அதனை அறுவடை செய்யும் வழிமுறைகள் மற்றும் காளானின் ஏற்றுமதி நிலை பற்றியெல்லாம் பார்த்திருந்தோம், அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த இரண்டாம் பகுதி…

 

 

 

முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்குங்கள்…

 

1# காளான் வளர்ப்பினை தவிர்த்து காளான் விதையினை மட்டும் உற்பத்தி செய்து காளான் வளர்ப்போருக்கு வியபாரம் செய்து இலாபம் பார்க்க முடியுமா?

தாராளமாகச் செய்யலாம், அதற்கான பயிற்சி வகுப்புகள் இருக்கின்றன, அதன் மூலம் கற்றுக் கொண்டு செய்யலாம். ஆனால் அதற்கு முன்னர் அவருக்கு காளான் வளர்ப்பில் அனுபவம் இருந்திருக்க வேண்டும். அப்போது தான் சிறந்த விதைகளை உருவாக்க முடியும், காளான் வளர்ப்போரின் தொடர்பும் கிடைத்து அவர்களுடைய விதையின் வியாபாரமும் பெருகும். அப்படித்தான் கோயம்புத்தூரில் ஒருவர் முதலில் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு, இடையில் அவருக்கு தேவையான காளான் விதையினை அவரே உருவாக்கத் தொடங்கினார். பின் தேவைக்கு அதிகமான விதை இருப்பதால் அவற்றை மற்ற காளான் வளர்ப்போருக்கு வியாபாரம் செய்து அதன் மூலமும் இலாபம் பார்த்து வருகிறார். காளான் விதையினை தயாரிப்பதற்கு ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டியது இருக்கும், இரண்டு லட்சம் வரை செலவாகும். முக்கியமாக கல்வித் தகுதி என்பது இதில் அவசியமில்லை, அனுபவமே போதுமானது. தற்போது தமிழ்நாட்டில் 70 விதைப்பண்ணைகள் வரை இருக்கின்றன.

2# தென்னை போன்ற தோப்புகளுக்குள் நடுவில் வைத்து காளானை வெளிப்புறத்தில் வளர்க்க முடியுமா?

கடினம், வெளிப்புறத்தில் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் அளவுகளையும், தூய்மையையும்  முறையாகக் கடைப்பிடிப்பது கடினம். நாங்கள் தஞ்சாவூரில் முள்ளில்லா மூங்கில்களுக்குள் முயற்சித்து காளான் வளர்ப்பில் வெற்றி பெற்றோம், இருந்தும் அது எல்லா நேரங்களிலும் சாத்தியம் ஆகாது. தென்னை மரத்தோப்பினுள் குடில்கள் போட்டு வளர்க்கலாம்.

3# எல்லா காலங்களிலும் காளான் வளர்க்கலாமா?

கட்டாயம் வளர்க்கலாம். எல்லா காலங்களிலும் இதில் வருமானம் வந்து கொண்டே இருக்கும். அதுவும் சிப்பிக்காளான் எல்லா காலத்திலும் நன்றாகவே வளரும். கோடை காலத்தில் மட்டும் வெப்பத்தை கட்டுப்படுத்த நாம் முயற்சிகள் எடுக்க வேண்டியதிருக்கும்.

 

kalanipoo mushroom part 2

4# பொதுவாக காளான் வளர்ப்பில் ஈடுபடுவோர்க்கு ஏற்படும் சிக்கல்கள்?

எல்லோர்க்கும் உள்ள பொதுவான சிக்கல் அவர்களுக்கு உற்பத்தி சரியாக வராதது, அதற்கு முதல் காரணம் சிறந்த வைக்கோலை தேர்வு செய்யாததே ஆகும். அடுத்து நம்பகமான சிறந்த நிறுவனத்திடமிருந்து விதைகளை வாங்க வேண்டும்.

வளர்ப்பதற்கு ஏற்ற சூழ்நிலை சரியானதாக அமைக்க வேண்டும். அதனை கடைப்பிடிக்காதது தான் அவர்களுக்கு காளான் வளர்ப்பில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

5# மற்ற காய்கறிகளைப் போல காளான் விலை ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படுமா?

காளான் வளர்ப்பில் சிறப்பே இது தான். சராசரியாக ஒரு கிலோ காளானின் விலை ரூ.130க்கு குறைவதே இல்லை. அதனால் நிலையான விலை இருப்பாதால் காளான் வியாபாரத்தில் கண்டிப்பாக இலாபம் என்பது நிச்சியம். மற்ற காய்கறிகளைப் போல ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படாது. நமக்கு உற்பத்தி செலவு ரூ.75 வரை வரும் என்பதால் மீதமெல்லாம் இலாபமே. இது போல் குறைந்த நாட்களில் இவ்வளவு இலாபம் ஈட்டுவது வேறெந்த தொழில்களிலும் இல்லை.

 

6# காளானில் சந்தைப் படுத்துதல் எவ்வாறு இருத்தல் வேண்டும்?

காளான் வளர்ப்போரு முக்கியமாக இதில் தான் கவனம் செலுத்த வேண்டும். இன்று பல பேர் காளான் உற்பத்தி செய்து மொத்தமாக கடைகளுக்கோ அல்லது இடைத் தரகருக்கோ கொடுத்து விடுகிறார்கள். நான் என்னிடம் பயிற்சி பெறுபவர்களுக்கு என்ன சொல்கிறேன் என்றால், உற்பத்தி செய்யும் நீங்களே வியாபாரம் செய்யுங்கள், தொடர்புகள் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள், காலையில் உழவர் சந்தைக்குச் சென்று வியாபாரம் செய்யுங்கள், பேப்பர் போடுவோரிடம், பால் பாக்கெட் போடுவோரிடம் பேசி அவர்களுடன் கொடுத்து அனுப்புங்கள், நகரப் புறங்களில் டோர் டெலிவரி செய்ய முயற்சி செய்யுங்கள், இப்படி செய்வதின் மூலம் இலாபம் முழுக்க உங்களுக்கே வந்து சேரும். என்னிடம் பயிற்சி பெற்றவர் கோயம்புத்தூரில் பெரிய காளான் வளர்ப்பு மையத்தை வைத்து இலாபம் பார்த்து வருகிறார், அவர் சூப்பர் மார்க்கெட்டுக்கு போடுவார், இப்படி நேரடியாகவும் அவரே வியாபாரமும் செய்வார், அதன் மூலம் அதிக இலாபம் பெற முடியும். ஒரு அப்பார்ட்மெண்ட், ஒரு தெரு அல்லது ஒரு பள்ளி என கவனம் செலுத்தி நாமே பேசி விற்கும் பொழுது அவர்கள் நமக்கு வாடிக்கையாளராக மாறினால் நாம் இந்த காளான் வளர்ப்பில் விரைவில் முன்னுக்கு வரலாம். காளானுக்கு அதிகத் தேவை இருக்கிறது, எனவே இந்த நேரடி விற்பனை தான் காளான் வளர்ப்பில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

kalanipoo mushroom part3

 

7# சுய உதவிக் குழுக்கள் (Self Help Group) மூலம் காளான் வளர்ப்பது நம் தமிழ்நாட்டில் எந்த நிலையில் உள்ளது?

சுய உதவிக் குழுக்கள் மூலம் இது போன்று காளான் வளர்ப்பில் ஈடுபடுவது சிறந்ததே. வங்கிக்கடன், பராமரிப்பு, உற்பத்தி செய்வதிலிருந்து சந்தைப் படுத்துவது வரை கூட்டாகச் சேர்ந்து செய்யும் பொழுது எளிமையாக இலாபத்தை எட்ட முடியும். இருப்பினும் அதற்கு அந்தச் சுய உதவி குழுவில் இருப்பவர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்தக் கருத்துடன் இருக்க வேண்டும். ஆர்வம் இல்லாமல் செயல்படுபவர்களை நீக்குவது நல்லது. அப்படி ஆர்வமில்லாமல் செயல்படும் ஒருவரால் ஆர்வத்துடன் செயல்படும் மற்றவரும் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். பல சுய உதவிக் குழுக்கள் தற்போது இந்த ஆர்வமில்லாத செயல் பாட்டினால் தான் செயலற்றுப் போகிறது.

8# காளான் வளர்ப்போர்க்கு வங்கிக் கடன் அளிப்பதில் எந்த மாதிரியான சூழ்நிலை இப்போது இருக்கிறது?

காளான் வளர்போர்களுக்கு எல்லா வங்கிகளிலும் கடன் வழங்கப் படுகிறது. தேசியத் தோட்டக்கலை வாரியம் மூலமாகவும் சிறப்பாக கடன்கள் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் நாம் காளான் வளர்ப்பினை ஆரம்பிப்பதற்கே கடன் வாங்குவதைக் காட்டிலும் குறைந்த முதலீட்டில் சிறிய அளவில் தொடங்கி அதில் இலாபம் காட்டி அதன் மூலம் தொழிலை விரிவு படுத்தி வங்கியில் கடன் வாங்கினால் சிறந்ததாகும். அதன் மூலம் வங்கியிலிருந்து கடனும் நமக்கு விரைவாக ஒப்புதல் அளிக்கப்படும்.

தொகுப்பு: சா. கவியரசன், வேளாண் கல்லூரியில் உயிரித்தகவியல் பட்டதாரி. விகடன் மாணவ பத்திரிகையாளர். ‘கழனிப்பூ’ வலைதளத்தின் நிர்வாகத் தலைமையாக பொறுப்பு வகித்து வருகிறேன். kaviyarasan411@gmail.com

 

error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது