
நெற்பயிரில் நடவு முதல் பூக்கும் பருவம் வரை இப்புழுவின் தாக்கம் அதிகமாக இருக்கும். இப்புழு ஆங்கிலத்தில் லீப் போல்டர் (அ) லீப் ரோலர் (Cnaphalocrosis medinalis) என்று அழைக்கப்படும். இலையின் அடிப்புறத்தில் இப்புழுவின் முட்டைகள் மஞ்சள் வெள்ளை நிறத்தில் நேர்வரிசையாக காணப்படும். இப்புழுவின் முட்டைக் காலம் நான்கு முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும். பின்பு, முட்டையில் இருந்து வெளிர்பச்சை நிற புழுக்கள் வெளியே வரும். அதாவது, இப்பூச்சியின் நான்கு பருவங்களில், முட்டைப் பருவம் முடிவடைந்து அடுத்த பருவமான புழு பருவத்தை அடையும். இரண்டாம் பருவமான புழு பருவமே நெற்பயிரை தாக்கும். இப்புழுக்கள் இலைகளை நீளவாக்கில் அல்லது இரு இலைகளைச் சுருட்டி அல்லது இலையை மடக்கி உட்புறத்தில் இருந்து கொண்டு பச்சையத்தை சுரண்டும்.
இவ்வாறு, சுரண்டுவதால் இலைகள் வெள்ளையாகி பின் காய்ந்துவிடும். இப்பூச்சியின் புழு பருவம் பதினைந்து முதல் இருபது நாட்கள் வரை இருக்கும். அதன்பிறகு, அடுத்த பருவமான கூட்டுப்புழுவாக (மூன்றாம் பருவம்) ஆறு முதல் எட்டு நாட்கள் வரை சுருட்டிய இலைக்குள் இருக்கும். இறுதியாக, அதன் நான்காம் பருவமான அந்துப்பூச்சியாக நெல் வயலில் வளம் வந்து கொண்டு இருக்கும். இந்த அந்துப் பூச்சியானது மஞ்சளான பழுப்பு நிற இறக்கைகள் கொண்டது. அதில் கருப்பு நிற அலைகள் போன்ற கோடுகள் நடுவிலும், இறக்கையின் ஓரத்தில் கருப்பு நிற பட்டையான கோடுடன் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்
Ø நிழல் இருக்கும் இடங்களில் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். மர நிழல்கள் மற்றும் வரப்பு ஓரங்களில் தாக்குதல் முதலில் தோன்றி பின் வயல் முழுவதும் பரவிவிடும்.
Ø நெல் வயலில் தலைச் சத்தாகிய யூரியாவை அதிகமாக இடும் போது இலைச்சுருட்டு புழுவின் தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே, தழைச்சத்தை பலமுறை பிரித்து இடுவதன் மூலம் இப்புழுவின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
Ø கயிறு கொண்டு இழுத்து புழுக்களை கீழே விழச் செய்தல்.

Ø ஒரு ஏக்கருக்கு இரண்டு விளக்குப்பொறி அல்லது ஒரு எக்டருக்கு ஐந்து விளக்குப்பொறி அமைக்கலாம்.
Ø டிரைக்கோடெர்மா கைலோனிஸ் ஒட்டுண்ணி அட்டைகளை ஒரு ஏக்கருக்கு 2 சி.சி, என்ற அளவில் வயலில் கட்டுதல்.
Ø வயலில் இயற்கையாக இருக்கும் ஊண் உண்ணிகளான சிலந்தி, பொறிவண்டு, ஊசித் தட்டான் போன்றவற்றை அழிக்காமல் இருத்தல்.
Ø ஏக்கருக்கு 4 – 6 லிட்டர் வேப்ப எண்ணெய், 200 லிட்டர் நீரில் கலந்து வயலில் தெளித்தல்.
Ø பொருளாதார சேத அளவைத் தாண்டி புழுக்களின் தாக்குதல் அதிகரித்தால், ரசாயன பூச்சிக் கொல்லிகளை தெளித்து இலை சுருட்டுப் புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
Ø குளோர்பைரிபாஸ் 20EC 1250 ml (அ) குளோரன்ட்ராநிலிப்ரோல் (Chlorantraniliprole) 18.5 SC 150 ml (அ) கார்ட்டப் ஹைட்ரோ குளோரைடு (Cartap hydrachloride) 50 SP 1 kg (அ) புளுபென்டையமைடு (Flubendiamide) 20WG 125 – 250 mg எடுத்து லிட்டர் நீரில் கலந்து ஒரு எக்டருக்கு (2.5 ஏக்கர்) தெளிக்கலாம்.
தொகுப்பு:
சி. கா. பவித்ரா தரணி,
உதவிப் பேராசிரியர் (வேளாண் பூச்சியியல்), பயிர்ப் பாதுகாப்புத் துறை, அதியமான் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி, அத்திமுகம் – 635 105. மின்னஞ்சல்: pavithrraento@gmail.com
மு. முருகன்,
உதவிப் பேராசிரியர் (வேளாண் விரிவாக்கம்), சமூகவியல் துறை, அதியமான் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி, அத்திமுகம் – 635 105.