. . .

காகிதத்தில் வேளாண்மை- ஹைட்ரோஜெல் பிலிம் மூலம் காய்கறிகள்

காகிதத்தில் கமம் (விவசாயம்) என்பதைக் கேட்கவே வியப்பாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது அல்லவா? மண்ணில்லா விவசாயம் (Hydrophonics) என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதையும் தாண்டி காகிதத்தில் விவசாயம் என்பது நமக்கு புதுமையாகத்தான் உள்ளது. அந்த தொழில்நுட்பத்தின் பெயர் ஹைட்ரொஜெல் பிலிம் சாகுபடி (Hydrogel film cultivation).

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பழங்கள் மற்றும் காய்கறிகளை எந்த ஒரு சூழலிலும் சாகுபடி செய்ய முடியும். இன்று உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி இல்லை. உற்பத்தி செய்ய போதுமான அளவு நீரும் இல்லை. அப்படியே நீரும் நிலமும் இருந்தாலும் அவை மாசு அடைந்தவையாக உள்ளன. அதனால் உணவு உற்பத்தியை மக்கள் தொகைக்கு ஏற்ப ஈடு செய்ய முடியவில்லை. இதற்கு ஒரு தீர்வாக அமைவதுதான் இந்த ஹைட்ரொஜெல் பிலிம் சாகுபடி. இந்த நீரேரிய களியை (Hydrogel) முதலில் மருத்துவத்துறையில் இரத்த சுத்திகரிப்பு (Haemodialysis) மற்றும் வாஸ்குலர் ஒட்டு (Vascular Graft) போன்றவற்றிக்குத்தான் அதிகம் உபயோகப்படுத்தினார்கள். இன்று குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் டயபரில் (Diaper) அதிகம் உள்ளது இந்த ஹைட்ரொஜெல் தான். காரணம் அதிகமான நீரை உறிஞ்சி வைத்துக்கொள்ளும் இதன் தன்மைதான். ஹைட்ரொஜெல் பிலிம் சாகுபடி நடைமுறைக்கு வந்ததுக்கு ஒரு வரலாறு உள்ளது.

polyfilm cultivation-kalanipoo

ஹைட்ரொஜெல் பிலிம் வரலாறு

2011 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பியூகுஷிமா (Fukushima) என்ற இடத்தில் உள்ள அணு உலையில் விபத்து ஏற்பட்டது. இதனால் பியூகுஷிமா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் கதிரியக்க கழிவுகளால் மாசுபட்டன. இனிமேல் இந்நிலங்களில் விவசாயம் என்ற சூழ்நிலையில், வாசேட பல்கலைக்கழகத்தில் (Waseda University) பேராசிரியராக பணிபுரிந்த யுச்சி மோரி (Yuchi Mori) என்பவர் மாசுபட்ட நிலங்களிலும், பாலைவனங்களிலும் விவசாயம் செய்ய வேண்டும் என நினைத்து உருவாக்கியது தான் இந்த தொழில்நுட்பம். இதன் பயன்பாடு இன்னும் ஆச்சர்யமாக உள்ளது. இது நாம் தாவரங்களுக்கு கொடுக்கும் நீரையும், ஊட்டச்சத்துகளையும் உறிஞ்சி வைத்துக்கொண்டு தாவரத்தின் தேவைக்கு ஏற்ப வெளியிடும். இதிலுள்ள நானோ துளைகள் நாம் கொடுக்கும் நீரையும், ஊட்டச்சத்துகளை மட்டுமே உள்ளே அனுமதிக்கும். வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்றவற்றை உள்ளே அனுமதிக்காது.

polyfilm-kalanipoo

இதனால் தாவரத்திற்கு வரும் நோய்த் தாக்குதல் குறையும். மேலும் இதிலுள்ள ஆச்சர்யமான தகவல் என்னவென்றால் இந்த தொழில்நுட்பத்தில் உற்பத்தியாகும் காய்கறிகள் மிகவும் சுவையாக உள்ளதாம். ஏனென்றால் தாவரம் நாம் கொடுக்கும் நீரையும் ஊட்டச்சத்துகளையும் அதிக ஆற்றல் கொடுத்துதான் உறிஞ்சுகிறது. இதனால் தான் அது சுவையாக உள்ளது என்கிறார்கள்.

நாம் தாவரங்களுக்கு கொடுக்கும் நீரையும், ஊட்டச்சத்துகளையும் உறிஞ்சி வைத்துக்கொண்டு தாவரத்தின் தேவைக்கு ஏற்ப வெளியிடும். இதிலுள்ள நானோ துளைகள் நாம் கொடுக்கும் நீரையும், ஊட்டச்சத்துகளை மட்டுமே உள்ளே அனுமதிக்கும். வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்றவற்றை உள்ளே அனுமதிக்காது.

அறிஞர்களின் அடுத்த ஆராய்ச்சி என்னவென்றால் இதே தொழில்நுட்பத்தை வைத்து பழமரங்களைச் சாகுபடி செய்வதை பற்றித்தான். மரத்தையே ஒரு காகிதத்தில் சாகுபடி செய்ய முடியும் என்றால் எவ்வளவு வியப்பாக உள்ளது இந்த தொழில்நுட்பம். ஜப்பான் மற்றும் சீனாவை சுற்றியுள்ள 150 இடங்களில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேளாண்மை செய்து வருகிறார்கள். மேலும் பாலைவனத்திலும் சாத்தியம் என்கிறவகையில் யூனியன் அரப் எமிரேட்ஸ் நாட்டின் பாலைவனத்தில் விவசாயம் செய்து அதிக மகசூலும் எடுத்துள்ளனர். விவசாயம் இவர்தான் செய்ய வேண்டும், அவர்தான் செய்ய வேண்டும், இங்கு தான் செய்ய வேண்டும், அங்கு தான் செய்ய வேண்டும் என்பதை முறியடித்திருக்கிறது இந்த பாலி பிலிம் கல்டிவேஷன் தொழில்நுட்பம் (Poly Film Cultivation). எங்கும் விவசாயம் சாத்தியமே…

தொகுப்பு: P. கோகிலா

இளங்கலை வேளாண்மை படித்தவர். மின்னஞ்சல்: kokilaagri96@gmail.com

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது