. . .

ஹெலி ஸ்ப்ரேயர் மூலம் பூச்சிமருந்து தெளிக்கும் பொறியாளர்கள்

kalanipoo-Helispray

டந்த ஆண்டு பூச்சி மருந்து தெளிக்கும் போது பெரம்பலூர் மாவட்டத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் அதன் பாதிப்பால் இறந்து போனது நாம் அனைவரும் அறிந்த விஷயம். அப்போது அதிகம் மழை பெய்திருந்ததால் பருத்தி செடிகள் 1.5 மீட்டர் முதல் 2 மீட்டர் அளவிற்கு வளர்ந்திருந்தது. அதில் மருந்து தெளிக்க உள்ளே செல்லும் விவசாயிகள் அவர்களின் உயரத்தை விட செடிகள் அதிக உயரமாக இருப்பதால் மேல் நோக்கி செடிகளில் தெளிக்கப்படும் மருந்தானது அவர்களின் உடலை நனைத்து விடுகிறது. அதிக வீரியமுள்ள மருந்தினை தெளிக்கும் போது இப்படி உடல் நனைந்தும் மருந்து தெளிக்கும் போது பாதுகாப்பான முறையில் உடைகள் பயன்படுத்தாததாலும் சில விவசாயிகள் மயங்கி இறந்து போனார்கள். இந்த பிரச்சனையை போக்கும் வகையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மென்பொருள் பொறியாளர்கள் செல்வகுமார் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் பெரம்பலூர் மாவட்டத்தில் ஹெலி ஸ்ப்ரேயர் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும்  தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இவர்கள் இருவரும் அவர்களின் நண்பர்களுடன் இணைந்து மில் பார்ம் டெக்னாலஜீஸ் (Mil Farm Technologies) என்ற நிறுவனத்தை துவங்கி சீனாவில் இருந்து இறக்குமதி செய்து 12 லட்சம் ரூபாய் செலவில் ஹெலி ஸ்ப்ரேயரை வாங்கியுள்ளனர். இதனை தாங்கள் உருவாக்கி உள்ள மென்பொருள் மூலம் இயக்கி பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

நாங்கள் இந்த ஹெலி ஸ்ப்ரேயரை வாங்கி ஓராண்டு ஆகின்றது. கடந்த சீசனில் பருத்தி போன்ற பயிர்களுக்கு மருந்து தெளித்து வந்தோம். இந்த சீசனில் மக்காச்சோளம், கறிவேப்பிலை, நெல், பருத்தி போன்ற பயிர்களுக்கு தெளித்து வருகிறோம். இந்த முறையில் மருந்து தெளிப்பதற்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் மட்டும் தெளித்து வருகிறோம். ஹெலி ஸ்ப்ரேயர் மூலம் மருந்து தெளிக்கும் போது விவசாயிகள் மருந்தினை தொடக்கூட தேவையில்லை. அதே போல 75 சதவீத பூச்சிமருந்து செலவு குறைவு மற்றும் துல்லியமாக பூச்சிகள் மற்றும் நோய்கள் கட்டுப்படுத்தப் படுவதுதான் இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பம்சமாகும். இந்த முறையில் மருந்து தெளிக்க ஒரு ஏக்கருக்கு 10 முதல் 12 நிமிடங்கள் ஆகும். ஹெலி ஸ்ப்ரேயரில் உள்ள டேங்க்கின் கொள்ளளவு 10 லிட்டர் ஆகும். சாதாரணமாக ஒரு டேங்க் மருந்து தெளிக்க எவ்வளவு மருந்து சிபாரிசு செய்யப்படுகிறதோ அதே அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

kalanipoo-Helisprayer

சாதாரண பவர் ஸ்ப்ரேயரில்  மருந்து தெளிக்கும் போது பயிரின் அடர்த்தி மற்றும் வளர்ச்சியை பொறுத்து ஒரு ஏக்கருக்கு 10 டேங்க்கிற்கு மேல் தெளிக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த முறையில் ஒரு டேங்க்கிற்கு தேவையான தண்ணீர் மற்றும் பூச்சிமருந்து மட்டுமே போதும் ஒரு ஏக்கர் முழுவதும் தெளித்து விடலாம். இதற்கு காரணம் நாம் பவர் ஸ்ப்ரேயரில் தெளிக்கும் போது பயிரின் மீது தெளிக்கப்படும் மருந்து துளிகளின் அளவானது (Droplets Size) பெரியதாக இருக்கும். அதே போல மருந்து துளிகளின் அளவு பெரியதாக இருக்கும் போது காற்றடிக்கும் போது அந்த துளிகள் உருண்டு ஓடும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது. ஆனால் ஹெலி ஸ்ப்ரேயரில் தெளிக்கும் போது பூச்சி மருந்தானது புகை மாதிரி தெளிக்கப்படுவதால் எளிதாக பயிர்களின் பாகங்களில் படர்ந்து விடுகின்றது. இந்த முறையில் தெளிக்க ஒரு ஏக்கருக்கு கட்டணமாக 950 ரூபாய் வாங்குகின்றோம். இதே பவர் ஸ்ப்ரேயரில் தெளிக்கும் போது ஒரு டேங்க்கிற்கு 50 ரூபாய் கூலியாக வாங்குகின்றனர். இதில்லாமல் பெட்ரோல், பூச்சி மருந்து செலவு தனி இதோடு ஹெலி ஸ்ப்ரேயரின் மூலம் தெளிக்கும் செலவை கணக்கிடும் போது குறைவு. காரணம் மருந்து பயன்பாடு 75 சதவீதம் வரை குறைவது தான்.

இதன் சிறப்பம்சங்கள்:

  • மருந்தினை விவசாயிகள் தொட வேண்டிய அவசியம் இல்லை.நன்றாக பலன் தருகிறது.
  • நேரம் மிச்சம்.
  • தெளிக்க படும் பூச்சி மருந்தின் அளவு குறைவதால் தேவையில்லாமல் வீணாவது தடுக்கப்படுகிறது. துல்லியமான தெளிப்பு.
  • பூச்சி மருந்து நச்சுத்தன்மை (Pesticide toxicity) முற்றிலும் தவிர்க்கப் படுகிறது. சிறிய நிலப்பரப்புக்கும் அதன் நான்கு புறத்தின் அளவீடுகளை மென்பொருளில் உள்ளிட்டு விட்டால் போதும் கச்சிதமாக ரிமோட் மூலம் இயக்கி தெளித்து விடலாம்.

kalanipoo-Helispray

நடைமுறையில் உள்ள சிக்கல்கள்:

விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது ஆனால் ஒரே ஒரு ஹெலி ஸ்ப்ரேயர் மட்டுமே எங்களிடம் உள்ளதால் ஏற்கனவே நாங்கள் தெளித்து கொண்டிருக்கும் விவசாயிகளின் வயல்களுக்கு மட்டும் மருந்து தெளிக்கவே சிரமமாக இருக்கிறது. தேவை அதிகமாக இருக்கும் இடத்தில் அதற்கான வழங்கல் (Supply) என்பது மிக மிகக் குறைவாக உள்ளது. ஆக இன்னும் நிறைய தொழில்முனைவோர்கள் இந்த துறை நோக்கி வருவது அவசியமாக இருக்கிறது. குறைந்தது ஒரு மாவட்டத்திற்கு 4 ஹெலி ஸ்ப்ரேயராவது இருந்தால் தான் ஒரு மாவட்ட விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். தமிழகம் முழுவதும் இதற்கான தொழில் வாய்ப்பு நன்றாக உள்ளது. இதற்கு தேவை எதாவது ஒரு படிப்பறிவும் உழைக்கும் திறனும் நிதியுதவியும் ஆகும். அதேபோல மென்பொருள் தொழிலை போல நிழலில் அமர்ந்து வேலை செய்ய முடியாது. காலை 6 மணிக்கே வயலுக்கு செல்ல வேண்டும், வெயிலில் தான் வேலை செய்ய வேண்டும். ஆக வேலை கிடைக்கவில்லை என்று உள்ள இளைஞர்கள் 10 பேர் சேர்ந்து கூட இந்த தொழிலை தொடங்கலாம். அதற்கு தேவைப்படும் அத்தனை தொழில்நுட்ப உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்க தயாராக இருக்கின்றோம்.

நாங்க செய்யுறது ஒரு மாதிரி (Demo) மட்டும் தான். இது போல ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த முறை பரவினால் தான் இந்த முறையானது வெற்றி பெறும், இல்லையெனில் “நான் கூட ஹெலி ஸ்ப்ரேயர்ல  மருந்து அடிக்குறது பத்தி கேள்விபட்டன்னு” வெட்டி பேச்சு பேசுவதோடு இந்த தொழில்நுட்பம் காணமல் போய் விடும். நிறைய பேர் இந்த தொழிலுக்கு வர வேண்டும் என்றால் வங்கிகள் இது போன்ற தொழில் தொடங்க கடன் அளிக்க முன்வர வேண்டும். ஆனால் பெரும்பாலான வங்கிகள் நாங்கள் வழக்கமாக கொடுக்குற தொழில்களுக்கு மட்டும் தான் கடன் தருவோம் என்று கூறுகின்ற வங்கி மேலாளர்களின் மனநிலை மாற வேண்டும். அரசும் இது போன்ற தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு நிதியுதவி மற்றும் மானியம் அளிக்க வேண்டும். அப்போது தான் எந்த ஒரு தொழில்நுட்பமும் வெற்றி பெறும் என்றனர்.

அவர்களின் சேவை மேன்மேலும் விவசாயிகளுக்கு விரிவாக தொடர வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றேன்!

தொடர்புக்கு: செல்வகுமார்9786319061.

கட்டுரையாளர்மு.ஜெயராஜ்.(8220851572). தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூதறிவியல் வேளாண்மை (உழவியல்) படித்து வருகிறார். விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித் திட்டத்தில் ஓராண்டு காலம் பணியாற்றி சிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றவர். பகுதி நேரமாக சில இணையதளங்களில் வேளாண்மை, கல்வி, வேலைவாய்ப்பு குறித்து எழுதி வருகிறார்.

கட்டுரையாளரை தொடர்பு கொள்ள: jayarajm96@gmail.com

Twitter:  https://twitter.com/jayarajmuthusmy