. . .

நீர் மேலாண்மை முதல் ‘பிராண்ட்’ உருவாக்குதல் வரை – சாதித்த உழவர் உற்பத்தியாளர் சங்கங்கள்

kalanipoo fpo 2

 

ழவர் உற்பத்தியாளர் சங்கம் என்றால் என்ன, அதனை அமைக்கும் முறைகள், அதன் மூலம் உழவர்களுக்கு என்னென்ன பயன்கள், அரசின் சிறப்பு கவனிப்பு அதில் என்னென்ன இருக்கிறது, பட்ஜெட்டில் வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் 10,000 புதிய உழவர் உற்பத்தியாளர் சங்கம் அமைப்பதற்கான திட்டங்கள் போன்ற வற்றை இந்தக் கட்டுரையின் முந்தைய பாகத்தில் பார்த்தோம், இப்போது இந்த சங்கங்கள் அமைத்து அதன் மூலம் வெற்றி பெற்றவர்களின் வரலாறு சிலவற்றை பார்க்கப் போகிறோம்,

முந்தைய பகுதியை படிக்க

1. நீர் மேலாண்மைக்கான சிறந்த வழி முறை- ‘பொம்மைக்கிருபா புங்ரோ ஜூத்’ (Bhomaikrupa Bhungroo juth) என்ற கூட்டமைப்பு, பதான் மாவட்டம் குஜராத்தில் இயங்கி வருகிறது, இந்த மாவட்டத்தில் நீர் பற்றாக்குறையும், விவசாயத்திற்கு எடுக்கப்படும் நிலத்தடி நீரிலும் அதிக உப்புத் தன்மையும் இருந்தது. இந்தப் பிரச்சனையை சரி செய்ய முடிவெடுத்த ‘புங்ரோ’ கூட்டமைப்பு அவர்களது நிலங்களில் பள்ளமான இடம் பார்த்து ஓரளவிற்கு ஆழமான குழிகளை உருவாக்கி 4 மீட்டர் விட்டம் உள்ள குழாய்களை பதித்து வைத்தனர், அதன் மூலம் மழை நீர் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீருடன் கலப்பதால் உப்பு நீரின் தன்மையும் குறைகின்றது, வருடத்தில் பத்து நாளுக்கான மழை நீரை அதில் சேகரித்து வைத்தால் போதும் இரண்டு பருவத்துக்கும் நீர் வற்றாமல் கிடைக்கிறதாம், இப்படி உழவர் உற்பத்தியாளர் சங்கம் மூலம் வெற்றி கண்ட இந்தக் குழுவிற்கு பல விருதுகள் கிடைத்துள்ளது அதுமட்டுமில்லாமல் இன்னும் சிறப்பாக குஜராத் பள்ளிப் பாட புத்தகத்திலும் இந்தக் குழுவைப் பற்றி குறிப்பிட்டு சிறப்பு செய்துள்ளனர்.

2. மாற்று சக்தியின் மூலம் வருமானத்தில் பெரிய மாற்றம்நாராயன்கத் வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம் (Narayangadh Agro producer company limited) மஹாராஷ்டிரா மாநிலம், பூனேவில் ஜூனார் பகுதியைச் சேர்ந்த விவசாய கூட்டமைப்பு. இந்தக் குழு 2013 இல் தொடங்கப்பட்டது, உற்பத்தியான காய்கறிகளை சூரிய ஒளி இயந்திரங்கள் மூலம் பதப்படுத்தி மதிப்பு கூட்டி வியாபாரம் செய்து காய்கறி வர்த்தகத்தில் புதிய தாக்கதை ஏற்படுத்தினார்கள்.  சூரிய ஒளி மூலம் செயல் படும் இயந்திரம் சுற்றுச்சூழல் பாதுகாப்போடு செலவும் குறைவாகவே ஏற்படுவதால் இதில் நல்ல இலாபம் என தெரிவித்திருக்கிறார்கள், சூரிய ஒளித் திட்டத்தை முன்னிலைப்படுத்தி தொடங்கியவர் நாராயண்கத் வேளாண் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் திரு. ரவிகண்ட் ஃபுல்வாடா அவர்கள், அங்குள்ள சுய உதவிக் குழுக்களும் இதில் இணைந்து வியாபாரத் தொடர்பை விரிவு படுத்தி நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர்.

3. பெண்களைக் கொண்டு மதிப்புக் கூட்டிய வியாபாரத்தால் விவசாயத்தின் மதிப்புக் கூடுகிறது- ருடி வர்த்தக நிறுவனம் (Rudi multi trading limited) குஜராத்தில் தொடங்கப்பட்டு தற்போது உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களிலும் விரிவாக்கத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த உழவர் உற்பத்தியாளர் சங்கம் கையில் எடுத்தது ‘விநியோக’ மேம்பாட்டினை. சிறு குறு விவசாயிகளிடமிருந்து நேரடியாக ‘ருடி’ குழு உற்பத்தியினை கொள்முதல் செய்து அதனை சுத்திகரிப்புச் செய்து மதிப்புக் கூட்டி ஒழுங்குப்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் கொண்ட சந்தையினை நகரங்களிலிருந்து கிராமங்கள் வரை உருவாக்கி அதில் விநியோகம் செய்கிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் பெண்கள் தான் முழுக்க முழுக்க விநியோகப் பொறுப்பை கையில் எடுத்திருப்பது. வியாபார நோக்கம் நன்கறிந்த பெண்களால் வியாபாரம் பெருகி அங்குள்ள பெண்களின் பொருளாதார நிலைமையினையும் ‘ருடி’ குழு மேம்படுத்தியிருக்கிறது.

kalanipoo rudisewa
வியாபாரத்தில் ஈடுபடும் ருடி அமைப்பைச் சேர்ந்த பெண்கள் (photo credits: sewarudi)

4. விவசாயி என்பவன் வியாபாரியாகவும் இருக்க வேண்டும்- நச்சலூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் (Nachalur farmer producer company limited) தமிழ்நாட்டில் உள்ள குளித்தலை அருகில் 2012 இல் தொடங்கப்பட்டது. உரம், விதை, பூச்சி மருந்து போன்ற வற்றை விவசாயிகளுக்கு வியாபாரம் செய்து அதன் மூலம் நல்ல இலாபம் பார்த்து வரும் குழு தான் நச்சலூர் உழவர் குழு. மேலும் அரசு இலவசமாக இந்தக் குழுவிற்கு வழங்கிய வேளாண் இயந்திரங்களைத் தேவைப்படும் விவசாயிகளுக்கு அதனை மலிவான விலைக்கு வாடகைக்கு விட்டு அதன் மூலம் இலாபம் பார்த்து வருகிறார்கள், இப்போது விதை நெல் உற்பத்தி செய்ய நபார்டு வங்கி மூலம் ரூபாய் 30 லட்சம் கடன் உதவி பெற்று பெரும் களம் அமைத்து அந்த வியாபாரத்திலும் இறங்கியுள்ளார்கள், விவசாயம் செய்பவர் விவசாயம் மட்டும் செய்யாமல், அதன் நுணுக்கங்கள் உணர்ந்து வியாபாரியாகவும் செயல்பட வேண்டும், அப்போது தான் பொருளாதாரம் ஈட்டுவதில் விவசாயிகளின் நிலை மேம்படும் என்று கூறி அதில் வெற்றியும் பெற்று பல பேருக்கு முன் மாதிரியாகத் திகழ்கிறார்கள்.

nachalur kalanipoo fpo2
நச்சலூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

5. ‘பிராண்ட்’ (வியாபாரக் குறி) உருவாக்கி அங்கக வேளாண்மையில் வெல்லுங்கள்- தாரணி வேளாண்மை மற்றும் பரஸ்பர சந்தைப் படுத்தும் கூட்டமைப்பு (Dharani farming and marketing mutually aided cooperative limited) ‘Timbaktu organic’ என்ற பெயரில் பிராண்ட் உருவாக்கி ஆந்திர மாநிலத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்கள். ஆரம்பத்தில் அவர்களே தங்களுக்குள் பொருளுதவி செய்து ‘Timbaktu organic’ என்ற பெயரில் இயற்கை வழியில் உற்பத்தியான பொருள்களை தரம் உயர்த்தப்பட்டு ‘Targeted Consumer’ என சொல்லப்படும் நுகர்வோர்களின் தேவையை உணர்ந்து சந்தை கட்டமைப்பை வலுப்படுத்திய வியாபாரமாக ‘Timbaktu organic’ பிராண்ட் உருவாக்கி நுகர்வோர் மத்தியில் பிரபலமாகி வெற்றி கண்டுள்ளனர். இந்த அங்கக வேளாண்மையை பொருத்தமட்டில் ‘பிராண்ட்’ (வியாபார குறி) என்ற விளம்பரம் அவசியமானது. உடல் நலத்தில் அதிக அக்கறை காட்டும் நடுத்தர வர்க்கத்தினரை குறி வைத்து சந்தை அமைக்கப்பட்டால் அங்கக வேளாண்மையில் இலாபம் நிச்சயம், மேலும் அங்கக வேளாண்மையில் ஏற்றுமதிக்கும் அதிக வாய்ப்பிருக்கிறது.

kalanipoo fpo
தாரணி வேளாண்மை மற்றும் பரஸ்பர சந்தைப் படுத்தும் கூட்டமைப்பு

 

6. மலையோர கிராமங்களில் ஒருங்கிணைந்து தேன் எடுத்ததில் இனிப்பான விவசாய முறை- நிஜுமுல்லா மற்றும் மண்டல் பள்ளத்தாக்கு கூட்டமைப்பு (Nizmula and Mandal valley association), உத்தரகாண்ட் மலையோர கிராமங்களில் தேன் எடுத்து வியாபாரம் செய்து வெற்றி கண்டுள்ளது. முதலில் மலையோர கிராம மக்கள் தங்கள் தேவைக்கு மட்டுமே தேன் எடுத்து பயன்படுத்தி வந்தனர், அவ்வப்போது தேன் மூலம் பண்டமாற்றம் முறையில் சில பொருள்களை வாங்கி வந்தனர். இதனைக் கண்ட Appropriate Technology India (ATI) என்ற அரசு சாரா நிறுவனம், அந்த மலையோர மக்களை இலாப நோக்கத்தில் செயல்படுத்த அவர்களை ஒரு உழவர் உற்பத்தியாளர் சங்கமாக அமைத்தனர் அது தான் ‘நிஜுமுல்லா மற்றும் மண்டல் பள்ளத்தாக்கு கூட்டமைப்பு’. இதன் மூலம் தேன் உற்பத்தியில் நல்ல இலாபம் ஈட்ட முடிந்தது, ஒன்றிணைந்து தேன் எடுத்து அதனை சுத்திகரிக்கப்பட்டு அவர்களே வியாபாரம் செய்தனர், கூடுதலாக தேன் வியாபாரத்தில் தங்களுக்கான ‘பிராண்டை’யும் அவர்கள் உருவாக்கினர். உத்தரகாண்ட் மாநிலத்தில் ‘இயற்கைத் தேன்’ என அரசு முதன்முதலாக அங்கீகரிக்கப்பட்டு வியாபாரம் செய்தவர்கள் நிஜுமுல்லா மற்றும் மண்டல் பள்ளத்தாக்கு கூட்டமைப்பு தான். இப்போது 2422 தேன் உற்பத்தியாளர்கள் இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

 

இப்படி சிறிய சிறிய நமக்குள் எழுந்த பொறியை வைத்து முழு உழைப்புடன் ஒன்றிணைந்து செயல்பட்டால் வேளாண்மையில் இலாபம் நிச்சியம், “அட, நமக்கு எதற்கு இதுவெல்லாம்? உண்டானதே நம்மால் செய்ய முடியவில்லை, இதில் எங்கே எல்லாரையும் சேர்த்திக்கொண்டு இங்கு விவசாயம் செய்வது?!” என்று சடைபவர்கள் விவசாயத்தில் இறுதி வரை போராடிக்கொண்டே இருக்க வேண்டியது தான்… எப்போது புதிய முயற்சி எடுக்கப்போகிறீர்கள்? முனையுங்கள், நரியும் நான்கு மாடுகளும் கதை நினைவில் இருக்கிறது தானே?


தொகுப்பு: சா.கவியரசன்.

உயிரித்தகவலியல் பட்டதாரி, கழனிப்பூ வேளாண் வலைதளத்தின் நிர்வாகத் தலைமையாக பொறுப்பு வகிக்கிறேன்.  என் வலைதளம்: FromAKP  மின்னஞ்சல்: kaviyarasan411@gmail.com