. . .

கவனம் பெற்று வரும் உழவர் உற்பத்தியாளர் சங்கங்கள் !

FPO-kalanipoo

பட்ஜெட் 2019-20ல், அடுத்து வரும் ஐந்தாண்டுகளுக்குள் 10,000 புதிய உழவர் உற்பத்தியாளர் சங்கங்களை (Farmer Producer Organizations) உருவாக்கி வேளாண்மையை மேம்படுத்தப் போவதாக அரசு நம்பிக்கை அளித்திருக்கிறது. இதேப் போன்று கடந்த முறை பட்ஜெட் 2018-19லும் ரூபாய் 100 கோடிக்கு கீழ் வருவாய் பார்த்து வரும் உழவர் உற்பத்தியாளர் சங்களுக்கான வரி விதிப்பை முழுவதுமாக ரத்து செய்வதாக அப்போதைய நிதி அமைச்சர் திரு. அருண் ஜெட்லி அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர்ச்சியான அறிவிப்புகள், இந்திய அரசு உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

உழவர் உற்பத்தியாளர் சங்கம் (FPO- Farmer Producing Organization) விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களில் தொழில் முறை, உற்பத்தி என்பது முதல் அதனை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல் வரை ஒரு நிறுவனம் போல குழுவாக ஒருங்கிணைந்து செய்யும் முறையாகும்.

உழவர் உற்பத்தியாளர் சங்கம்
நன்றி: திரு.உத்தண்டா

உழவர் உற்பத்தியாளர் சங்கம் பதிவு செய்யும் வழி முறை:

உழவர் உற்பத்தியாளர் சங்கம் – விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களது பிரச்சனைகளைக் களைவதற்காக நிறுவனச் சட்டம், 1956 இன் கீழ்க் கொண்டு வரப்பட்டதாகும்.

உழவர் உற்பத்தியாளர் சங்கங்களைப் பல வகையாகப் பதிவு செய்யலாம், அஃதாவது கூட்டுறவுச்சங்கங்களாக (Cooperative society), அறக்கட்டளையாக (trusts), ஒன்றிணைந்த கழகமாக (federations) மற்றும் நிறுவனமாக (company) எனப் பதிவு செய்து அந்தந்த விதி முறைகளுக்கேற்ப நடைமுறையை பின்பற்றி பயனடையலாம். உழவர் உற்பத்தியாளர் சங்கமானது சிறு விவசாயிகளின் வேளாண் தொழில் கூட்டமைப்புக்கு (SFAC- Small Farmer’s Agri-Business Consortium) கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். 

ஒவ்வொரு குழுவிற்கும் குறைந்தது பத்து விவசாயிகள் வேண்டும், அதற்கென உறுப்பினர்களிலிருந்தே தலைவர்கள், செயலர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட வேண்டியது அவசியம். உறுப்பினர் ஒவ்வொருவரும் வங்கிக்கணக்கு தொடங்கி குழுவின் பதிவுக்கேற்ப இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டியது அவசியம். தங்களது வட்டத்திற்கு உட்பட்ட வேளாண் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு மேலும் விரிவான வழி முறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

என்னென்ன செய்யலாம் ?

உழவர் உற்பத்தியாளர் சங்கம் மூலமாக உரம், பூச்சி மருந்து, விதைகள், வேளாண்மைக்குத் தேவையான இயந்திரங்கள் என அனைத்தையும் நேரடியாக ஒட்டுமொத்தமாக வாங்குவதன் மூலம் குறைந்த விலையில் வாங்கி பயன் பெறலாம். 

அடுத்து அவர்களது உற்பத்தியை மதிப்புக் கூட்டி வியாபாரம் செய்வது, கிடங்குகளில் சேமித்து வைப்பது, பெரு நிறுவனங்களுக்கு நேரடிக் கொள்முதல் மூலம் அனுப்பப்படுவது, சிறு சந்தைகளையும் நோக்கிய வியாபார உத்திகள், தேவைகளை அரசிடம் கேட்டுப் பெற முறையான குழுவாக அமைந்திருப்பது என பல பயன்களை பூர்த்தி செய்கிறது உழவர் உற்பத்தியாளர் சங்கம் (FPO).

அரசின் உதவிகளைப் பெறுவதில் இந்தச் சங்கங்கள் எந்த அளவிற்கு பயனாக இருக்கிறதென பார்த்தால், உழவர்களின் தேவைகளை எளிதில் கேட்டுத் தெரிந்து கொள்வது, ஒரு குழுவிற்கு இரண்டிலிருந்து ஐந்து நபர்கள் வரை அழைத்து வேளாண்மையிலுள்ள புதிய தொழில் நுட்பத்திற்கான பயிற்சி அளித்து குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கு அதனை அறிமுகப்படுத்தச் செய்வது, இலவசமாக வேளாண்மைக்கான இயந்திரங்களை குழு ஒவ்வொன்றிற்கும் அளித்து உதவுவது, விழிப்புணர்வு கூட்டங்கள் அமைப்பது என பல அக்கறையான செயல் திட்டங்களை உழவர் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு அளித்து வருகிறது.

உழவர் உற்பத்தியாளர் சங்கம் -kalanipoo
நன்றி-www.isapindia.org

உழவர் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலம் ஏற்படும் சமூகம் மற்றும் பொருளாதார மாற்றங்கள்:

* பெண்கள் பங்களிப்பு அதிகரித்து பொருளாதார கட்டமைப்பு மேம்படும்.

* வேளாண்மைக்குத் தேவையான உள்ளீடுகளைக் குறைந்த விலையில் பெற முடியும்.

* மக்களின் வாழ்வாதாரம் நிலை நாட்டப்படும்.

* உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுடைய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்கள் குறையும்.

* ஒட்டுமொத்தமாக செலவினங்கள் இருக்கும் போது கார்பன் வெளிப்படுவதும் குறையும்.

* மக்களின் நிர்வாகத்திறன் அதிகரித்து பொருளாதார மேம்பாடு நோக்கிய நகர்வாக இருக்கும்.

* திறன் மேம்பாடு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு உற்பத்தியில் உயர்வு காணக்கூடும்.

* உப வேளாண் சார்ந்த துறைகள் பெரிதாக வளர்ச்சி காணும்.

* சமூக அளவிலும் சரி பொருளாதார அடிப்படையிலும் சரி பின் தங்கிய நிலையில்  இருப்போருக்கும், சிறந்திருப்போருக்கும் உள்ள இடைவெளி குறையும்.

* வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

* வேலை தேடி நகரங்கள் நோக்கி இடம் பெயர்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும்.

 

இப்படி அடுக்கடுக்கான நன்மைகளைக் கொண்ட ஒன்றிணைந்த வேளாண்மை முறையை தவிர்த்திவிட்டு தனியொருவராக வேளாண்மையில் போராடி இறுதியில் நட்டத்தில் முடிந்து வேளாண்மையை உதறுகிறார்கள், பொருள் ஈட்டக்கூடிய சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து செயல்படாமல் இத்தனை நாள் இருந்தது நம் தவறு. ஒன்றிணைந்த வேளாண்மையை முன்னெடுத்து பட்ஜெட்டில் அரசு குறிப்பிட்ட அடுத்த ஐந்து வருடத்திற்குள் 10,000 புதிய உழவர் உற்பத்தியாளர் சங்கங்கள் உருவாக்கிட நாமும் விரைந்து நம் வியாபாரத்தை பெருக்கிடுவோம்.

மேலும், உழவர் உற்பத்தியாளர் சங்கம் அமைத்து வெற்றி பெற்றுள்ள சில உதாரணங்களையும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாக அடுத்த பாகத்தில் பார்க்கலாம். 

இரண்டாம் பகுதியை படிக்க


தொகுப்பு: சா. கவியரசன்.

உயிரித்தகவலியல் பட்டதாரி, கழனிப்பூ வேளாண் வலைதளத்தின் நிர்வாகத் தலைமையாக பொறுப்பு வகிக்கிறேன். என் வலைமனை: FromAkp

மின்னஞ்சல்: kaviyarasan411@gmail.com

 

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது