. . .

காட்டுத் தீயை கட்டுப்படுத்துவது நம் கையில் தான் இருக்கிறது

Kalanipoo forest fire

மார்ச் 11, 2018 குரங்கனி காட்டுத் தீ 23 உயிர்களை எரித்து பறித்த தினம்… இதில் பலர் காயமுற்றனர். அது மட்டும் தான் மிகப்பரீட்சையமாக நமக்குத் தெரிந்த ஒரே காட்டுத் தீ விபத்து இல்லையா?

ஆனால் பல இடங்களில் எண்ணற்ற மர இனங்கள் வன விலங்குகள் இன்னும் தீக்கிரையாகிக் கொண்டு தான் இருக்கின்றன.

கடந்த சில நாட்களில் கூட முதுமலை வனப் பகுதிகளிலும், சேலத்தின் சில மலைப் பகுதிகளிலும் தீ ஏற்பட்ட தாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

Kalanipoo forest fire

பெரும்பாலும் கோடை காலங்களில் காய்ந்த புற்கள் செடிகொடிகள் மரத்திலிருந்து உதிரும் இலைகள் போன்றவற்றினால் தான் சுலபமாக தீ ஏற்பட்டு விடுகிறது,

“அப்படி அந்த காட்டுத் தீயை யாரு தான் ஏற்படுத்துறது?” என்ற கேள்வி எழும் அதானே?

காட்டுத் தீ ஏற்பட பல காரணிகள் இருக்கின்றது…

மின்னல் தாக்கம் மற்றும் மரங்கள் உரசி காட்டுத் தீ ஏற்படுகிறது என்று சொல்வதெல்லாம் நம் இந்தியாவில் 0.00000001% தான் வாய்ப்பிருக்கிறது.

வழக்கம் போல மனிதர்களாகிய நாம் தான் இதற்கும் காரணமென்று அடிச்சே சொல்லலாம். எப்படியென்றால்?

வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளான சாலைகள், சுற்றுலா தலங்கள் போன்ற இடத்தில் சிகரெட், பீடி போன்றவற்றை அணைக்காமல் போடுவது, கண்ணாடி குப்பிகள் மற்றும் தீ எளிதில் பிடிக்கக் கூடிய பொருட்களை அங்கேயே வீசிவிட்டு வருவது, மின்சார கம்பி மூலமாகவும், காடுகளில் கால்நடைகள் மேய்ப்பவர்கள் அடுத்த பருவத்துக்கு புதுப் புற்கள் முளைக்க வேண்டும் என்று பழைய காய்ந்த புற்களை தீ வைப்பது…

இன்னும் சொல்லப் போனால் மலைப் பிரதேசங்களில் காப்புக் காடுகளை ஒட்டிய வருவாய் நிலங்களில் காடுகள் இருக்கும், அந்த வருவாய் நிலத்தை பட்டா போட்டுக் கொள்வதற்காக சிலர் அந்த நிலத்தை தீ வைத்து சுத்தம் பண்ணி தங்கள் நிலத்தோடு இணைத்துக்கொள்வார்கள்.

இது போன்ற காட்டுத்தீ ஏற்படும் காரணிகளுக்கு பொது மக்களாகிய நமது பங்கும் உண்டு. ஆகையால் நாமும் காட்டுத்தீ கட்டுப்படுத்துவதிலும் உருவாகாமல் தடுப்பதிலும் அக்கறை கொள்ள வேண்டும். ஏனெனில் வனத்துறையில் இருக்கின்ற குறைந்த மனித வளத்தை மட்டும் கொண்டு காட்டுத்தீயை கட்டுப் படுத்துவதோ தடுப்பதோ மிகவும் கடினம்.

Kalanipoo forest fire
நன்றி: பரத் சிவா

சரி வனத்துறையினர் எப்படி காட்டுத்தீயை தடுக்கிறார்கள் ?

1. Forest Fire line (தீக் கோடு) ஏற்படுத்துவார்கள் – அதாவது மேலே உள்ள புகைப்படத்தில் காட்டியிருப்பது போல ஒரு பகுதி காட்டிற்கும் மற்றோரு பகுதிக்கும் இடையில் ஒரு இடைவெளி ஏற்படுத்தி, காய்ந்த புற்கள் செடிகள் இல்லாமல் சுத்தமாக வெட்டி விடுவார்கள்.

2. Control burning (மேற்பார்வையுடன் எரித்தல்)- சாலைகளை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் காய்ந்த புற்களையும் செடிகளையும் காணொளியில் காட்டியிருப்பது போல் தீ வைத்து கட்டுப்பாடாக எரிச்சு விடுவார்கள்.

காணொளி: https://www.facebook.com/100006426239290/videos/282438619778556/

3. Fire map (காட்டுத்தீயின் நில வரைபடம்) – வருடாவருடம் தீ எங்கெங்கு பிடிக்கிறதென்று ஒரு வரைபடம் தயார் செய்து அந்த இடங்களில் எச்சரிக்கையாக இருப்பார்கள்.

தீ ஏற்பட்டுள்ள பகுதியை கண்டறியும் முறைகள்:

  • Satellite (GlS)-  செயற்கைக்கோள்
  • Drone Camera- ஆளில்லா விமானம்
  • Fire Alarming System- அவசர ஒலி எழுப்பக் கூடிய முறை
  • Fire watch towers- தீ விபத்தை கண்காணிக்கும் கோபுரங்கள்
  • Local peoples- உள்ளூர் வாசிகள்

இவைகளின் மூலம் காட்டுத்தீயின் தகவல்கள் கிடைக்கும்.

அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள்:

  • காட்டுத்தீ கண்காணிப்பாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களை ஈடுபடுத்தி தீயை அணைப்பார்கள்… தண்ணீர், மண், பசுந்தழைகள், வேதிப்பொருட்கள் எல்லாம் பயன்படுத்தி அணைக்கலாம்.
  • பெரிய அளவில் இருந்தால் ஹெலிகாப்டர் மூலம் அணைக்கலாம்.

இப்படி பல செயல்முறைகள் இருந்தாலும் காட்டுத்தீயை அவ்வளவு சுலபமாக கட்டுப்படுத்த முடியாது. பொது மக்களாகிய நாம் தான் இதற்கு நிரந்தர தீர்வு.

எப்படியென்றால்?,

வனத்துறையோட ஒத்துழைப்பு கொடுத்து தீயை தடுக்கவும் கட்டுப் படுத்தவும் செய்ய வேண்டும். ஒவ்வொரு வனப்பகுதியை ஒட்டி இருப்பவர்களும் அப்பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அப்பகுததிக்கான வனச்சரகர் (forest range officer) அல்லது ஏதேனும் வன பணியாளர்களிடம் (Forester, Forest guard and watchers) தகவல் தொடர்பில் இருக்கும் அளவிற்கு நட்பு பேணுதல் வேண்டும்.

மேலும் தீயை அணைப்பதில் உள்ளூர் வாசிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்

ஏனெனில் கிட்டத்தட்ட ஒரு வனச்சரகத்தில் 10-15 (இதுவே அதிகம்) அதிகாரிகள் தான் இருப்பார்கள். ஒரே ஒரு பச்ச கலர் Bolero Jeep தான் இருக்கும். ஆகவே பொது மக்களாகிய நாம் தான் அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

முடிந்த அளவு காட்டுத் தீ பற்றிய விழிப்புணர்வை வனத்துறையானது தீ ஏற்படும் வனத்தை ஒட்டியுள்ள மக்களிடம் demo(மாதிரி) முறையில் தீயணைப்பு பற்றி பயிற்சி வகுப்புகள் அமைத்தும், சுற்றுலா தலங்களில் அறிவிப்புப் பலகை நோட்டீஸ் மூலமாகவும், தன்னார்வலர் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

மக்களாகிய நாமும் வனத்ததுக்கு சேதம் விளைவிக்கும் எந்த செயலிலும் ஈடுபடாமல், வனத்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து காட்டுத் தீ ஏற்படாமல் ஆவண செய்ய வேண்டும்.

வனம் காப்போம்! மனித இனம் காப்போம்! 

தொகுப்பு: ச. சரண்குமார் வனவியல் பட்டதாரி, தமிழ்நாடு வன உயர்பயிற்சியகத்தில் பயிற்சியாளராக பணி புரிந்து வருகிறார்.


மேலும் காடுகளின் முக்கியத்துவத்தையும் காடுகளுடனான நமது தொடர்பையும் தெரிந்து கொள்ள இதனைச் சொடுக்குங்கள்….

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது