. . .

பூ வாசத்திற்கும் பொங்கலுக்கும் என்ன தொடர்பு?

Thuvarai Kalanipoo pongal flower

 

காவிரி டெல்டா மாவட்டங்களில் தாளடி நெல்லோ சம்பா நெல்லோ அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கும். ஆனால் மற்ற மாவட்டங்களில் இந்நிலை முற்றிலும் மாறுபட்டு வயல்களில் வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குழுங்கி கொண்டிருக்கிறது. கிராமங்களில் உள்ள சாலைகளில் நாம் பயணம் செய்யும் பொழுது ஜன்னல் வழியாக வெளியே பார்த்தால் வயலில் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண பூக்கள் செல்போனை பார்த்து எரிச்சலடைந்த நம் கண்களுக்கு குளிர்ச்சியாக அமையும். இத்துடன் நம் ஹெட்செட்டில் ஒலித்து வரும் இளையராஜாவின் ஏலேலோ பாடலும், பசுமையான வயல்வெளியும், ஏரிக்கரை பூங்காற்றும் கூட்டு சேர்ந்து நம் மனதுக்கும் மூளைக்கும் குளிர்ச்சியாக அமையும்.

Kalanipoo flower pongal 2
சிறுகண்பீளை மலர்

ஆடி ஆவணி பட்டங்களில் மானாவாரியாக விதைக்கப்பட்ட அவரை செடிகள் கார்த்திகை இறுதியில் பூக்கத்தொடங்கி சில காய்களும் இச்சமயம் விட்டிருக்கிறது. அதே ஆடி பட்டத்தில் விதைக்கப்பட்ட துவரை செடிகள் மார்கழி மாதத்தில் பூக்கத் தொடங்கிவிட்டது.

Avarai Kalanipoo flower pongal
அவரையின் வெள்ளை நிற மலர்

அவரை- வீட்டு அவரை, மொச்சை என இரண்டு வகைப்படும். இவையிரண்டுமே வெள்ளை நிறத்திலும் ஊதா நிறத்திலும் பூக்கும். துவரையின் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். (கட்டுரையின் முதலில் இருப்பது துவரையின் மலர்) இத்துடன் பொங்கல் பூவும், பண்ணைப்பூவும் கூட்டுசேர வயல் வெளிகள் முழுவதும் வண்ண மையமாக காட்சி அளித்து கொண்டிருக்கிறது.

Mochaii Kalanipoo pongal flower
அவரையின் ஊதா நிற மலர்

மார்கழி மாதத்தில்  பச்சை செடியில் ஆங்காங்கே பற்றி எரியும் நெருப்புப்பூ போல் பந்தலில் படர்ந்து கொண்டிருக்கும் பூசணி பூவை பறித்து வாசலில் இட்ட வண்ணக் கோலங்களுக்கு நடுவில் மாட்டுச்சாணத்தில் பிள்ளையார் பிடித்து அதன் உச்சியில் செருகி வைப்பர்.  ஆண்பூவை பறித்து அதன் எண்ணிக்கையை குறைத்தால் பெண்பூவின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அறிவியலை அன்றே சொல்லி வைத்து விட்டு போனார்கள் தமிழையும் அறிவியலையும் வளர்த்த நம் முன்னோர்கள்.

பூக்கள் பூத்தால்தான் பொங்கல் நெருங்குகிறது என்ற எண்ணம் நம் மனதில் நெடுங்காலமாக பதிந்துவிட்டது. கார்த்திகை மாத இறுதி வாரத்தில் பூக்கத்தொடங்கும் பூக்கள் தைமாதம் இறுதி வாரம் வரை பூத்துக்கொண்டிருக்கும்.

மேற்கண்ட எல்லாவற்றையும்விட தனிச்சிறப்புடையது மஞ்சள் பூ. பூக்கள் அனைத்தும் பூத்து பொங்கலை வரவேற்கிறது. பூக்கள் பூத்தால்தான் பொங்கல் நெருங்குகிறது என்ற எண்ணம் நம் மனதில் நெடுங்காலமாக பதிந்துவிட்டது. கார்த்திகை மாத இறுதி வாரத்தில் பூக்கத்தொடங்கும் பூக்கள் தைமாதம் இறுதி வாரம் வரை பூத்துக்கொண்டிருக்கும். இதன் சிறப்பை “பூ பூக்கும் மாசம் தைமாசம் ஊரெங்கும் வீசும் பூவாசம்” என்ற பாடல் வரிகள் உணரத்தும். மழையால் வரும் மண்வாசமும் ரோஜா பூக்களும் மட்டும் வாசம் அல்ல. கிராமத்தில் பூக்கும் அனைத்து பூக்களும் வாசமே. நகரத்து பிடியில் இருந்து விலகி நெடுந்தூர பயணமாக சொந்த ஊருக்குச்செல்லும் நாம் செல்போன் பிடியில் இருந்து விலகி சில்லென்ற பனிகாற்றுடன் கூடிய மார்கழி மாதத்து கிராமத்து வாசனையை ரசிப்போம்.

 

ஆக்கம்: எ. செந்தமிழ் மற்றும் எ. கீதப்பிரியா. இளம் அறிவியல் வேளாண்மை

 

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது