. . .

மஞ்சள் சாகுபடியும் பராமரிப்பு மேலாண்மையும் | பகுதி 2

kalanipoo turmeric 2

இந்தக் கட்டுரையின் முதல் பகுதியில் நம் நாட்டில் மூன்று மஞ்சள் வகைகளுக்கு புவிசார் கிடைத்தது பற்றியும், அதில் ஈரோடு மஞ்சளின் சிறப்பு பற்றியும், அம்மஞ்சளின் பயிர் செய்யும் நுணுக்கங்கள் பற்றியும் பார்த்திருந்தோம், அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த கட்டுரை.

பகுதி ஒன்றை படிக்க இங்கே சொடுக்குங்கள்…

மஞ்சளில் பூச்சி மற்றும் புழு தாக்குதலும் – அதன் பராமரிப்பு மேலாண்மையும்

பூச்சிகளின் தாக்குதலால் மஞ்சள் செடியில் அதிக அளவு மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. அதை கட்டுபடுத்தும் முறைகளையும் தீர்வுகளையும் வரிசையாகப் பார்ப்போம்,

இலைச்சுருட்டு புழு

இலைச்சுருட்டு புழுவால் தாக்கப்பட்ட மஞ்சள் செடியின் குருத்து மற்றும் அந்தப் புழுக்களையும் சேகரித்து அழித்து விட வேண்டும். புழுக்கள் இலைகளை, உள்ளே இருந்து கொண்டோ அல்லது இலையின் ஓரத்தை வெட்டிச் சுருள் போன்று செய்து அதனுள் இருந்து கொண்டோ இலையை உண்ணும். இதனைக் கட்டுப்படுத்த புழுக்களைச் சேகரித்து அழிக்க வேண்டும் அல்லது இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தைத் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இலைப்பேன் இலைகளின் அடிப்பரப்பில்  இருந்து கொண்டு இலைகளைச் சுரண்டி சாற்றை உறிஞ்சும். இதனால் இலைகள் நுனியில் இருந்து கீழ்நோக்கி சுருண்டு காய்ந்துவிடும். இளம் இலைப்பேன்கள் மஞ்சள் நிறத்திலும், வளர்ந்தவை கருமை நிறத்திலும் இலைகளில் ஊர்ந்து கொண்டிருக்கும். இலைப்பேன்கள் மிகவும் நுண்ணியவைகளாக இலைகளில் படிந்து காணப்படும். இலைப்பேன்களைக் கட்டுப்படுத்த இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தை தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். இப்பூச்சி மஞ்சள் கிழங்கை தாக்கி சாற்றை உறிஞ்சி சேதத்தை உண்டாக்கும். இதனால் செடி வாடி காய்ந்துவிடும். மேலும் கிழங்கின் பருமன் குறைந்து முளைப்புத்திறனும் குறைந்துவிடும். இதனைக் கட்டுப்படுத்த, பூச்சித்தாக்காத நல்ல விதை கிழங்குகளை தேர்வு செய்து சேமிக்க வேண்டும். விதைக் கிழங்கை விதை நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்.

பூச்சித்தாக்காத நல்ல விதை கிழங்குகளை தேர்வு செய்து சேமிக்க வேண்டும். விதைக் கிழங்கை விதை நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்.

kalanipoo turmeric 2

நூற்புழு

வளர்ந்த ஈக்கள் தண்டின் அடிப்பகுதியில், கிழங்கின் மேல் முட்டையிடும். இவைகள் சாம்பல் கலந்த கருமை நிறத்தில் காணப்படும். புழுக்கள் மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில் இருக்கும். வளர்ந்த ஈக்கள் கிழங்குகளில் துளையிட்டு உட்சென்று தின்னும். இதனால் மகசூல் இழப்பு ஏற்படும். இப்பூச்சியின் தாக்குதல் நல்ல வடிகால் வசதியுள்ள நிலங்களில் குறைவாக இருக்கும். இப்பூச்சியை கட்டுப்படுத்த வயலைச் சுத்தமாகவும், கிழங்கு அழுகல் நோய் வராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். நூற்புழுக்களின் தாக்குதலால் வேர்கள் பாதிக்கப்பட்டு வேர்களில் எண்ணற்ற வேர் முடிச்சுகள் உண்டாகும். இதனால் வேர்கள் வழியாக நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எடுத்து செல்வது தடைப்பட்டு, பயிரின் வளர்ச்சி குன்றி, பழுப்பு நிறமாகி இலைகளின் ஓரங்கள் வாடி விடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

தொழு உரம் இடுவதால் நூற்புழுக்களின் தாக்குதல் குறைகிறது. கடைசி உழவின் போது வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ இட்டு நடவு செய்வதால் நூற்புழுக்களின் சேதத்தை குறைக்கலாம், பயிர் சுழற்சி முறையை கையாண்டு மஞ்சளுக்கு பிறகு நெல், கரும்பு போன்றவற்றை பயிர் செய்து நூற்புழுவை  கட்டுப்படுத்தலாம், செண்டுமல்லி செடியினை வயல் ஓரங்களில் பயிரிட்டு நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

வேர் அழுகலுக்கான தீர்வு

100 லிட்டர் கோமியம், 100 கிலோ சாணம், 6 லிட்டர் பஞ்சகாவ்யா, 3 கிலோ சூடோமோனஸ், 15-20 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு, 15-20 லிட்டர் கரும்புப்பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து 4-5 நாட்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் இந்தக் கரைசலை பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது கலந்துவிட்டால் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்.

kalanipoo erode turmeric 2

இயற்கை தாவர பூச்சிக் கொல்லி மருந்துகள்

தாவரப் பூச்சிக் கொல்லிகள் கிராமங்களில் கிடைக்கும் தாவரங்களைக் கொண்டே இயற்கை முறையில் தயாரிப்பதாகும். நொச்சி, ஆடாதோடா, வேம்பு, எருக்கன், பீச்சங்கு (உண்ணி முள்), இவற்றின் இலைகள் 2 கிலோ, எட்டிக் கொட்டை 2 கிலோ ஆகியவற்றை இடித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு அவை மூழ்கும் அளவுக்கு 12 லிட்டர் மாட்டு சிறுநீர், 3 லிட்டர் சாணக் கரைசல் ஆகியவற்றில் 7 முதல் 15 நாட்கள் வரை ஊற விட வேண்டும். இலைகள் கரைந்து கூழ் ஆகிவிடும். இதில் ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களில் தெளிக்கலாம். இந்த கரைசலுடன் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 500 கிராம் கலந்து தெளிப்பதன் மூலம் பூசண நோயை கட்டுப்படுத்தலாம்.

வேப்பங்கொட்டைச்சாற்றிலும் பூச்சி மருந்து தயாரிக்கலாம் – 5 கிலோ வேப்பங்கொட்டையை நன்கு இடித்து, சல்லி சாக்கு அல்லது மெல்லிய துணியில் கட்டி, 10 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சாற்றினை வடிகட்டி, 200 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.

மஞ்சளின் மருத்துவ குணங்கள்

மஞ்சள் அதிகமான மருத்துவ குணம் கொண்ட தாவரம். எல்லா வகையான உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது. ஆன்மீகத்திலிருந்து அறிவியல் வரை மஞ்சளின் பங்கு மகத்தானது. மஞ்சளைச் சுட்டு புகையை நுகர்ந்தால் தலை நீரேற்றம், மூக்கடைப்பு போன்ற பல பிணிகள் குணமாகும். பெண்கள் மஞ்சளை அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் முகத்தில் வளரும் முடி உதிரும். சளியினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால் தேனுடன் மஞ்சள் தூளை கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டால் சளி அடைப்பு சரியாகி விடும். மஞ்சள் வேப்பிலை ஆகியவற்றை சம எடையாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள், சேற்றுப்புண் ஆகியவை குணமாகும். கை, கால்களில் அடிபட்டால் தேங்காய் எண்ணை, மஞ்சள் பொடி இரண்டையும் கலந்து வைத்தால் புண் சீக்கிரம் சரியாகிவிடும். இது போன்று எண்ணிலடங்கா தேவைகள் மற்றும் மருத்துவ குணம் மிக்கதாக மஞ்சள் இருந்து வருகிறது.

மஞ்சள் நடவுக்குள் ஊடுப்பயிர்

வெங்காயம், சேனைக்கிழங்கு, மிளகாய், துவரை ஆகியவற்றை மஞ்சள் நிலத்தில் ஊடுப்பயிராக பயிரிடலாம்.

அறுவடை

பயிர், மஞ்சள் நிறமாக மாறுதல், சாய்தல், உலர்ந்து விடுதல் போன்றவை அறுவடைக்கான அறிகுறிகளாகும். கிழங்குகளை மண்வெட்டி அல்லது குழி தோண்டும் கருவி கொண்டு தோண்டி எடுக்கலாம். மாட்டு ஏர் மூலமும் உழுது எடுக்கலாம்.

kalanipoo turmeric 2

மகசூல்

ஒரு ஏக்கருக்கு பதப்படுத்தப்படாத கிழங்குகள் 25 முதல் 30 டன் வரை கிடைக்கும். பதப்படுத்தப்பட்ட கிழங்குகள் 5 முதல் 6 டன் வரை கிடைக்கும். கிழங்குகளை நாமே நேரடியாக விற்கலாம். குவின்டால் கணக்கில் விற்கப்படுகிறது. 100 கிலோ தரமான மஞ்சள் ரூபாய் 13,000 வரை விற்கப்படுகிறது. இரண்டாம் ரகம் ரூபாய் 10,000 வரை விற்கப்படுகிறது. 100 கிலோவின் விலை ரூபாய் 8,000 திற்கு கீழே குறைவதேயில்லை. அதனால் எந்த வகையிலும் நஷ்டம் ஏற்படாது.

பொங்கல் நாட்களில் மஞ்சள் செடிகள் அதிக அளவில் விற்கப்படுகிறது. பட்டத்தில் போடப்படும் மஞ்சள் நல்ல லாபத்தை பெற்று தருகிறது. ஒரு மஞ்சள் செடியின் விலை 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இப்படி மஞ்சளின் நுணுக்கமறிந்து பயிரிட்டு அதனைச் சந்தைப்படுத்துவதிலும் சிறப்பாக செயல் பட்டால் மஞ்சள் நிறத்தைப் போலவே நம் வாழ்வும் பளிச்சிடும்.

 

தொகுப்பு: G. செல்வ சுதாகர், வேளாண் மாணவர்

மின்னஞ்சல்: selvasudhakarssk@gmail.com