. . .

தொழில் தொடங்கும் உங்களது புது ஐடியாவுக்கு பணம் ஒரு தடையா?

புதுமையான கண்டுபிடிப்புகள், புதுமையான தொழில் முனையும் எண்ணம், அந்த எண்ணம் மூலம் இலாபம் எப்படி பார்க்க போகிறீர்கள், இவைகளுக்கான பதில் வைத்திருந்தீர்களானால் போதும் நமது தமிழக அரசு உங்கள் முயற்சிக்கு தாராளமாக நிதி உதவி செய்ய காத்திருக்கிறது புத்தாக்க பற்றுச் சீட்டுத் திட்டம் (Innovation Voucher Program) மூலம்.

புத்தாக்க பற்றுச்சீட்டுத் திட்டம், இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் மாநிலமாக இத்திட்டத்தை தொடங்கியுள்ளது. இஃது குறு, சிறு மற்றும் நடுத்தர வகையில் புத்தாக்க முறையில் தொழில் தொடங்குவோருக்கு நிதி உதவி அளித்து அவர்களுக்கு துணை இருக்கும் விதமாக தொடங்கப்பட்டத் திட்டம்.

இத்திட்டம் அரசாங்கம், ஆராய்ச்சியாளர்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் என அனைவரையும் ஒருங்கிணைக்கும் திட்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

 

எப்படி இத்திட்டத்தை அணுகுவது?

இத்திட்டத்தில், பகுதி 1 (Voucher A), பகுதி 2 (Voucher B) என இரண்டாக பிரிக்கப்பட்டு நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. பகுதி 1 இல் அதிக பட்சமாக ₹2 இலட்சம் வரை நிதி வழங்கப்படுகிறது, இது பிரத்யேகமாக புதிய தொழில் தொடங்கும் முன் நாம் மேற்கொள்ளும் ஆராய்ச்சி செலவுக்காக அளிக்கப்படுகிறது. அடுத்து பகுதி 2 இல் சந்தை படுத்துதலில் கவனம் செலுத்துவதற்காக ₹5 இலட்சம் வரை அளிக்கப்படுகிறது. இதில் சிறப்பு என்னவென்றால், இந்த நிதி எதுவும் கடன் கிடையாது, நம் திட்டத்தை அவர்கள் ஒப்புதல் அளித்துவிட்டால் போதும் நம் திட்டத்திற்கு நிதி அளிக்கப்படும். 

இதில் கவனமாக நாம் பார்க்க வேண்டியது தொழில் முனையும் நிறுவனம் தமிழ் நாட்டிற்குள் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும், கட்டாயம் அறிவாற்றல் பங்குதாரரை (Knowledge Partner) பெற்றிருத்தல் வேண்டும். அப்போது தான் இத்திட்டம் மூலம் பயன்பெற முடியும்.

அறிவாற்றல் பங்குதாரர் என்பவர், நாம் புத்தாக்க முறையில் தொழில் தொடங்கவிருக்கும் நம் திட்டத்தில் உள்ள நிறைகுறைகளை ஆய்ந்து திட்ட ஆராய்ச்சியினை மெருகூட்டி திட்டத்தின் செயல்பாட்டிற்கு துணை புரிபவர்கள் ஆவர். அரசு அளிக்கும் நிதி இந்த அறிவாற்றல் பங்குதாரரைச் சென்று அவர்களிடமிருந்து தான் நமக்குப் பெறப்படும். 

 

அப்படியானால், நாம் யாரை அறிவாற்றல் பங்குதாரராக துணை கோருவது?

தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக, ஆய்வு மேற்கொள்ளக்கூடிய பல்கலைக்கழகமாக, கல்லூரியாக, பெருநிறுவனங்கள் அல்லது பன்னாட்டு நிறுவனங்களின் ஆய்வக அமைப்பாக இரண்டு வருடம் அனுபவத்தோடு இயங்கி வரும் யாவையும் நம் கண்டுபிடிப்பு திட்டதிற்கு அறிவாற்றல் பங்குதாரராக அணுகலாம். அந்த அறிவாற்றல் பங்குதாரருடைய அமைப்பும் தமிழகத்திற்குள் பதியப்பட்டு இயங்கக்கூடியதாக இருப்பது அவசியம்.

வருடத்தில் 12 மாதமும் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. www.editn.in என்ற இணையதளத்தில் சென்று மாதத்தின் முதல் பத்து நாட்களுக்குள்ளாக விண்ணப்பத்தில் திட்டத்தை பதிவு செய்யலாம். அவர்களுக்கு திட்டம் ஒத்துப்போனால் அடுத்த பத்து நாட்களுக்குள் அவர்களிடமிருந்து அழைப்பு வரும்.

நம் திட்டத்தில் எதிர்பார்ப்பது ?

புத்தாக்க பற்றுச்சீட்டுத் திட்ட அமைப்பு முக்கியமாக நம் திட்டத்தில் எதிர்பார்ப்பது: திட்டத்தின் நோக்கம், செயல்படுத்தும் திட்டத்தின் தாக்கம் எவ்வாறாக இருக்குமென்ற கணிப்பு, திட்டத்தை நடைமுறை படுத்தும் சாத்தியக்கூறு, திட்டம் சந்தையில் வெற்றி பெற எந்த அளவிற்கு வாய்ப்பிருக்கிறது, இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் நம் திட்டம் அமையுமானால் நிச்சயம் தமிழக அரசு நமக்கு நிதியுதவி அளிக்கும்.

இன்னும் விளக்கமாக இத்திட்டத்தில் நிதி உதவிக்கு ஒப்புதல் பெறப்பட்ட ஒரு திட்டத்தை உதாரணமாக பார்க்கப்போனால், புத்தாக்க தொழில் முனையும் ஆர்வலர் ரவி செஞ்சி அவர்கள், கிரெஸண்ட் (Crescent Innovation Incubation center) புத்தாக்கு அமைப்பினை தன் அறிவாற்றல் பங்குதாரராக துணை சேர்த்து புத்தாக்க பற்றுச்சீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ளார், அவருடைய திட்டம் என்னவென்றால், OLA, UBER போன்று, பெண்கள் உடல் உபாதைகளுக்கான அவசர நேரத்தில், வாகனத்தில் அமைக்கப்பட்ட நகரும் கழிவறைகளை பெண்கள் தாங்கள் இருக்கும் இடத்திற்கே அழைத்து பயன்பெறலாம் என்பது தான். கழிவறை கட்டமைப்பு முறையாக இல்லாத இடத்தில் இது போன்ற திட்டங்கள் நல்ல முன்னேற்றம் அளிக்கும் என்பதால் இத்திட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்று சுற்றுச்சூழல், மருத்துவம், வேளாண்மை என எந்தத் துறை சார்ந்தும் புத்தாக்குத் திட்டங்களை நீங்களும் முயற்சிக்கலாம்.

பெற்றோர்கள், நண்பர்களிடமிருந்து அல்லது வட்டிக்கு கடன் வாங்கி முதலீடு செய்வதற்கு மாற்றாக நம் திட்டத்தை அரசிடம் சமர்பிக்கப்பட்டு கடனே இல்லாமல் நம் சொந்த முதலீட்டில் செயல்பட பெரும் உதவியாக இத்திட்டம் அமையும். துணிகர முதலீடு (Venture capital) எல்லாம் நம் தொழில் தொடங்கிய பின்பு தான் நமக்கு கைகொடுக்கும், ஆனால் இந்த புத்தாக்க பற்றுச்சீட்டுத் திட்டம் ஆராய்ச்சி நிலையில் இருக்கும் நம் திட்டத்திற்கே நிதி உதவியளிக்கிறது. மற்றொன்றும் தெரிந்துகொள்ளுங்கள்,இந்த புத்தாக்க பற்றுச்சீட்டுத் திட்டம் மூலம் வருடம் 400 பேருக்கு இதில் பதியப்பட்டு நிதியுதவியை அளித்திருக்க வேண்டும் என அரசு உத்தரவு கொடுத்திருக்கிறது, இப்போது வரை இந்த அமைப்பு 10 பேருக்குத் தான் நிதியுதவி அளித்திருக்கிறதாம். காரணம் மக்களுக்கு இதனைப் பற்றிய விழிப்புணர்வு இன்மையும், தொழில் தொடங்குவதில் தயக்கம் காட்டுவதும் தான், உங்களுடைய புதுமையான திட்டத்தோடு முனைப்புடன் பதிவிடுங்கள், அரசு உங்களை அரவணைக்கக் காத்திருக்கிறது.

‘வேலை வாய்ப்பு இல்லை’ என்று அரசை குறை கூறிக்கொண்டு பிறருக்கு கீழ் உழைக்க வேண்டுமென்ற மனோபாவத்தை உடைத்து தொழில் முனைவோராக நம்முடன் நம்மைச் சார்ந்தவரையும் முன் கொண்டு வருவோம். அதற்கு இத்திட்டம் பேருதவியாக இருக்கும்.

 

சமீபத்தில் நாஸ்காம் (NASSCOM) அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ‘உலகளவில் உள்ள 3100 அக்ரிடெக் ஸ்டார்டப்களில் நமது இந்தியாவில் தான் 450 ஸ்டார்டப்கள் இருக்கிறது’ என்பது வேளாண்மை சார்ந்து நமது தொழில் தொடங்கும் ஆர்வம் அதிகரித்து வருவதை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது. இதில் இன்னும் சிறப்பு என்னவென்றால் நமது தமிழக அரசின் தனிப்பட்ட முறையில் இந்த புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டமும் தொழில் முனைவோருக்காக செயலாற்றி வருவதால் கூடுதலான மகிழ்ச்சி. கட்டாயம் இத்திட்டம் மூலம் பயன்பெற்று, வரும் காலத்தில் வேலைவாய்ப்பற்ற நிலையை போக்கவும், வேளாண்மையை இலாபகரமான தொழிலாக மாற்றவும் முனைவோம்.


ஆக்கம்: சா.கவியரசன்.  உயிரித்தகவலியல் பட்டதாரி, கழனிப்பூ வேளாண் வலைதளத்தின் நிர்வாகத் தலைமையாக பொறுப்பு வகிக்கிறேன். என் வலைமனை: FromAKP

மின்னஞ்சல்: kaviyarasan411@gmail.com

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது