. . .

தில்லியில் இருப்பவர்கள் பாவம் செய்தவர்களா ?

தில்லியில் இருப்பவர்கள் பாவம் செய்தவர்களா?…
ஏழுமலையான் கோவிலைப்
போலொரு நகரம் தான் தில்லி…
ஆம்…
காசுள்ளவர் சொகுசு வழி கொள்ளலாம்…
காசற்றவர்- காசான் செய்த காற்று
மாசோடு பொது வழி கொள்ளலாம்…
பக்தியான பொழப்பைத் தேடி
காத்திருக்கும் கஷ்டத்தோடு

தில்லியின் பாதிப்புகளை பழக்கப்படுத்திக் கொள்ளலாம்…

காரினுள் ஏசி, இறங்கினால் வீட்டினுள் ஏசி,
நுழைந்தால் அலுவலகத்தில் ஏசி…
கட்டுப்பாடற்ற காரின் புகையும், வீட்டின் புகையும், அலுவலகப் புகையும் மாற்றானுக்கு வீசி…

பஞ்சாப் ஹரியானா
பயிர் புகை தில்லி நகரை நாசமாக்குது…
பனியும் தன் பணிக்கு புகையுடன் கைகோர்க்குது…
kalanipoo delhi pollution

சுலாப்பின் சர்வதேச கழிவறை அருங்காட்சியகம்
மக்களுக்காக மாபெரும் இரயிலக அருங்காட்சியகமென
தில்லி பறை சாற்றுதே…அந்த வழி
அனைத்துமான காற்று மாசுக்கு ஒட்டுமொத்த
தில்லியே அருங்காட்சியகமாய் ஆகுதே…
மைனஸிலிருந்து ஐம்பது வரை செல்சியஸ் செல்லுதே…
பைத்தியமான யானையாக பருவ மாற்றம் போகுதே…
பழகிவாழும் மனித வாழ்க்கை பாவமாக சிரிக்குதே…
மாற்றான் மேல் பழியை மாற்றிவிட்டு
மனம் மெட்ரோ ஏறி ஓடுதே…

மனிதர்களைப் போலவே புறாக்களும் தில்லியில் அதிகம்…
அந்த புறாக்கள் அங்கிருக்க காரணம்
அவைகளின் போன ஜென்ம பாவத்தின் கதியாம்…

கூட்டமான பறவைகளைக் கண்டு வந்த
அண்டை மாநில பறவைகளைப் போல
மாவட்டாச்சியர் கனவோடு வாழ்பவர்களும்,
பானிபூரி விற்பதை குலத்தொழிலாக
நினைக்க வைக்கப்பட்டவர்களும்,
பிறந்ததால் வாழ்வது கட்டாயக்கடமையென்று
வாழ்பவர்களும், ‘ஒன்’னென்றால்
ஏக்கென்றுகூட அறியாத மொழியர்களும்
தான் தில்லியின் அடையாளங்கள்…
வெளியில் தெரிவதென்னவோ விராட் கோலியும், குதுப் மினாரும் தான்…

மமோஸ், சமோஷாவினுள் அடைக்கப்பட்ட- அந்த
மசாலாக்களைப் போல அவர்களது
வாழ்க்கையும் அடைக்கப்பட்டுள்ளது…
குறிப்பிட்ட மொழி, குறிப்பிட்ட பொருளாதாரம்,
குறிப்பிட்ட சூழலும்,
இப்படி குறிப்பிட மட்டும் தான் முடிகிறது அவர்களது வாழ்க்கை…
இனம், கலாச்சாரமென அறிவு செய்ய பெரியாரும்
இருமொழி கொள்கைக்கொரு அண்ணாவும்
அங்கும் இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது…

புகைத்துப் போன நுரையீரலுக்கு
அறுவை சிகிச்சை உயிர் காக்குமாம்…
தில்லிக்குத் தேவை அறுவை சிகிச்சை…
புறாக்கள் மூலம் அவை சாத்தியமில்லை…
புறா மனதிலிருந்து மனிதர்கள் மாறவேண்டும்…
புறம் அகமென தில்லியிலிருந்து
மாசு மறைய வேண்டும்…
அக்கரையும் அறிவியலுமாக தலைவலி
போக தலை வழி விரைய
தில்லி சலவை செய்ய வேண்டும்…

நம் தேசத்தின் நுரையீரலிலிருந்து சா. கவியரசன்.

மின்னஞ்சல்: kaviyarasan411@gmail.com
என்வலை: FromAKP (https://fromakp.blogspot.com/)
Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது