. . .

க்ளெரிஹியு (Clerihew) -அப்படியென்றால்!?

agri clerihew

 

லகில் மிகச் சிரமமான வேலை என்னவென்று நினைக்கிறீர்கள்? ஒரு வாரம் அலைபேசியை பயன்படுத்தாமல் இருப்பதா?! இல்லை அதைக்காட்டிலும் சிரமமானது மற்றவர் சொல்ல வருவதை கவனிப்பது தான், ஒரு கருத்தை மற்றவருக்கு பகிர வேண்டும், அது அவருக்கு புரிய வேண்டும், கருத்தை அவர் ரசிக்க வேண்டும், கருத்தின் பதிவு அவரது மூளையில் நிலையாகத் தங்க வேண்டும் அதே சமயத்தில் கருத்து சொல்லும் போது கேட்பவருக்கு அலுப்பு வராமல் பார்த்துக் கொள்வதும் கடமையாகிவிட்டது, அதற்காகத் தான் செய்யுள், சித்திரம், நாட்டியம், இசை, என கருத்து பகிர்வு பல நிலைகளில் நிகழ்த்தப்படுகிறது, அப்படியாக ஹைகூ வரிசையில் ஒன்று தான் இந்த க்ளெரிஹியு.

 

க்ளெரிஹியு (Clerihew)-  வேடிக்கைக் கவிதை, எட்மண்ட் க்ளெரிஹியு பெண்ட்லி (1875-1965) என்னும் கவிஞர் அறிமுகப்படுத்திய பாவினம் இது.

ஒரு பிரபலமானவரைப் பற்றியும் அவரது பிரபலத்துக்கான காரணத்தையும் இணைத்த நான்கு – ஐந்து வரி வேடிக்கைக் கவிதை. முடிந்தளவுக்கு வரிகள் கவனிப்பதற்கு கேலிச்சித்திரம் (Cartoon) போல் இருந்தால் உத்தமம்.

நினைவில் நீண்ட நாள் தங்கவும், எளிமையாக கருத்தை பகிர்ந்துகொள்ளவும் க்ளெரிஹியு போன்ற முறைகள் பயனளிக்கும்.

 

மூன்று உதாரணங்கள்:

1. கண்ணகி கதையால் 

   சிலம்பு வைத்து- கண்

   கலங்க வைத்தவர்

   இளங்கோவடிகள்

 2. பண்டைய காலத்தில் குப்தப் பேரரசு காலம் மிக முக்கியமான காலம், அந்த வம்சாவளியில் மிக முக்கியமான அரசர் சமுத்திர குப்தர், தோல்வியே பார்க்காத அரசராம், வடக்கிலிருந்து கடல் சூழ்ந்த தக்காண பீட பூமி வரையிலும் பேரரசை அவர் நிறுவியிருந்தார், மேலும் கவிராஜன் என்ற புனைப் பெயர் அவருக்கு இருக்கிறது, அதற்கு காரணம் அவர் இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், அதனாலேயே அவர் மக்களிடம் வெளியிட்ட நாணயங்களில் கூட வீணையுடன் அமர்ந்திருக்கும் காட்சி பொறிக்கப்பட்டிருக்கும், இத்தனை செய்திகளை க்ளெரிஹியு வின் மூலம் சொல்லப்போனால் 

நாணயத்தில் வீணை- ஒரு

நாளும் தோல்வி இல்லா சேனை

சமுத்திரம் சூழ் பாரத அரசே

சமுத்திர குப்தா!

இப்போது வெகு நாளைக்கு சமுத்திர குப்தரின் நாணயத்தில் வீணை இருப்பது மறக்காது என நம்புகிறேன், இது தான் க்ளெரிஹியு, இது வேடிக்கையாக இருந்தால் இன்னும் நல்லது, எழுத்தாளர் சுஜாதா அதற்கு ஒரு எடுத்துக்காட்டு கொடுத்திருப்பார்

3. ‘வால்மீகிக்கு மேல் ஒருபடி

இராமாயணம் எழுதியபடி

கம்பர் தான் நம்பர் ஒன்’  

(மொழி பாதுகாப்பைக்காட்டிலும் இங்கு கருத்து பகிர்வின் எளிமைக்குத் தான் முக்கியப் பங்கு)

 

சரி, கழனிப்பூவில் க்ளெரிஹியு எதற்கு? நம்முடைய நோக்கம்  கழனி சார்ந்த செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது, அதனை எவ்வளவு எளிமையாக முயற்சிக்க முடியுமோ அந்த அளவுக்கான நேர்மறை முயற்சிகளோடு கழனி சார்ந்த செய்திகளை க்ளெரிஹியுவில் கொண்டு வரும் பகுதி தான் இது, இதனை வேண்டுமானால் வேடிக்கையாக கழனிஹியு (எட்மண்ட் க்ளெரிஹியு அவர்கள் கோபித்துக்கொள்ள வாய்ப்பில்லை) என்று வைத்துக்கொள்ளலாம்.

இதில் பிரபலங்கள் மட்டுமின்றி ஒரு செயலும் அந்த செயல்பாட்டின் பயனும் க்ளெரிஹியுவில் முயற்சிக்கப்படுகிறது.

கழனிஹியுவிற்கான உதாரணம்:

1. அமலா பால் இல்லை,

அமுல் பால் மூலம்

வெள்ளை புரட்சியில்

புகழ் எல்லை எட்டியவர்

நம் வர்க்கீஸ் குரியன்…

 

2. ஒருங்கிணைந்த பண்ணையம்,

ஒன்று சேர்ந்த குழுமம்,

உற்பத்தி இலாபம்,

விலையால் வீடு தேடும் புண்ணியம்…

 

இப்படி பசுமை புரட்சி, ஒளிச்சேர்க்கை, ஜீரோ பட்ஜெட் விவசாயம் என எல்லாவற்றையும் க்ளெரிஹியு ஆக்கலாம், உங்களுக்கும் க்ளெரிஹியு பிடித்துப்போனால் உடனடியாக கழனிஹியு எழுதி நம் கழனிப்பூ (imotkalanipoo@gmail.com) மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடுங்கள். உங்களின் பெயருடன் கழனிப்பூவில் பகிர்கிறோம்.