. . .

அசோலா வளர்ப்பு- ஒரே கல்லில் இரண்டு மாங்கா!

Azolla kalanipoo

“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்று பலர் பேச்சு வழக்கில் பேசுவதை நாம் அனைவரும் கேட்டிருப்போம்.  ஒரு செயல் செய்தால் அதில் பல பயன்கள் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம் அனைவரிடமும் உள்ளது. அதற்கு காரணம் பல்வேறு செயல்கள் செய்ய நேரமும் பொருளாதாரமும் போதிய அளவு இல்லாமல் இருத்தலே ஆகும். நம் எதிர்பார்ப்பிற்கினங்க அசோலா வளர்ப்பு மூலம் காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்துவது மட்டுமில்லாமல் கால்நடைகளுக்கும் சிறந்த தீவனமாக விளங்குகிறது.

அசோலா தண்ணீரில் மிதக்கக்கூடிய பெரணி வகை தாவரம் ஆகும். அசோலாவில் அனபேனா என்னும் நீலப்பச்சைப்பாசி உள்ளது. அது காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்தி மண்ணை வளமாக்குகிறது.

Kalanipoo azolla

அசோலாவை பல்வேறு முறைகளில் வளர்க்கலாம். நெல்வயலில் வளர்ப்பதன் மூலம் நெல் வயலில் வளரும் களைகளையும் கட்டுப்படுத்தலாம். மேலும் சிமெண்ட் தொட்டியிலும் பாலீத்தீன் பைகளை தரையில் விரித்தும் எளிமையாகவும், குறைந்த செலவிலும் வளர்க்கலாம்.

15 நாட்களில் ஒரு பாத்தியில் 3 கிலோ முதல் 5 கிலோ வரை அசோலா தயாராகிவிடும்.

நிழல்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 3 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட பாத்தி அமைத்து, பாத்தியின் அடித்தளத்தில் பாலீத்தீன் காகிதத்தை சீராக விரிக்க வேண்டும். பாலீத்தீன் காகிதத்தின் மேல் 30 கிலோ அளவுக்கு செம்மண் இட்டு சமப்படுத்த வேண்டும். இதன்மேல் 2 செ.மீ அளவுக்கு தண்ணீர் ஊற்றி 30 கிராம் சூப்பர் பாஸ்பேட் அல்லது இரண்டு கையளவு ராக் பாஸ்பேட் மற்றும் 300 கிராம் அசோலா தாய்வித்து இடவேண்டும். நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணில் உள்ள சத்துக்கள் தண்ணீரில் கரைந்து அசோலாவிற்கு எளிதாக கிடைக்கும்.

Azolla kalanipoo

15 நாட்களில் ஒரு பாத்தியில் 3 கிலோ முதல் 5 கிலோ வரை அசோலா தயாராகிவிடும். இதில் இருந்து ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வரையில் அறுவடை செய்யலாம். பூச்சி தாக்குதல் வந்தால் 5 மில்லி வேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியில் தெளிக்க வேண்டும். அசோலாவின் உற்பத்தி கோடை காலங்களில் சிறிது குறைந்தும் மழைக்காலங்களில் அதிகரித்தும் காணப்படும்.

அசோலாவின் பயன்கள்:

1. நெல் வயலில் ஒரு ஹெக்டேருக்கு 40 முதல் 60 கிலோ தழைச்சத்தினை கொடுக்கும்.

2. 15 நாட்களில் தன் தொகையை இரட்டிப்பாக்கும் தன்மை கொண்டது.

3. கறவை மாடுகளுக்கு ஒரு நாளுக்கு ஒரு கிலோ கொடுக்கலாம்.

4. கோழிகளுக்கும் தீவனமாக கொடுக்கலாம்.

5. நெல் வயலில் உள்ள களைகளை கட்டுப்படுத்தும்.


ஆக்கம்:

1. எ. செந்தமிழ், முதுநிலை வேளாண் மாணவர். elasisenthamil@gmail.com

2. முனைவர் க. சுசீந்திரன். உழவியல் துறை, உதவிப் பேராசிரியர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது