. . .

ஆண்டு தோறும் இலாபம் தரும் அரளிப்பூ -சாகுபடி முறை

kalanipoo arali

 

ரளிப்பூவானது செவ்வரளி, வெள்ளை அரளி என இரண்டு ரகமாக உள்ளது. 100 செடிகள் வளர்ப்பதற்கு 15 செண்ட் நிலமே போதுமானது. அனைத்து விதமான மண்ணிலும் வளரக்கூடியது. செம்மண்ணில் இன்னும் நன்றாக வளரும்.

நடவு செய்யும் முறை

பதியம் போட்ட செடியை வாங்கி வந்து நடவு செய்ய வேண்டும், செடிக்கு செடி இடைவெளி மூன்று அடியாகவும், வரிசைக்கு வரிசை பத்து அடியாகவும் இருந்தால் காற்றோட்டமாக செடிகள் வளரும்.

kalanipoo arali

 

பாசன முறை

செடி நடவு செய்து இரண்டு மாதத்திற்கு கால்வாய் முறையென்றால் வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்க்கலாம், சொட்டு நீர் பாசனமாக இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை பாய்க்க வேண்டும்.

அதன் பிறகு, கால்வாய் முறையென்றால் 15 நாட்களுக்கு ஒரு முறையும், சொட்டு நீர் பாசனமென்றால் வாரத்திற்கு ஒரு முறையும் நீர் விட்டால் போதுமானது.

kalanipoo arali

 

உரமிடுதல் 

நடவு செய்து ஒரு மாதத்திற்கு பிறகு செடிகளுக்கு உரமிடலாம் ( உர வகைகள் – DAP, complex ), அடுத்து இரண்டு மாதத்திற்கு ஒரு முறை உரமிட்டால் போதுமானது.

நோய் தாக்கம் (இலைப்புள்ளி நோய் மற்றும் பூச்சித்தொற்று) பொறுத்து இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பூச்சிக்கொல்லி (carbofuran 5 மில்லி/ டேங்க், Bifenthirin 35 மில்லி/டேங்க்)  தெளிக்கலாம். மேலும் செடி நன்றாக வளர அமிர்த கரைசலை தெளிக்கலாம்.

kalanipoo arali

 

அரளிப்பூ மகசூல்

செடி நடவு செய்த இரண்டு வாரத்தில் இருந்தே மொட்டு விட ஆரம்பித்து விடும், மூன்று மாதங்களுக்கு பிறகு சந்தைக்கு அனுப்பும் படி மகசூல் கிடைக்கும்.

நான்கு வருடங்கள் வரை தொடர்ந்து பூ பறிக்கலாம், அதன் பிறகு செடிகளை அழித்து புதிதாக நடவு செய்யலாம் அல்லது கவாத்து செய்யலாம், கவாத்து செய்வதைக் காட்டிலும் புதிதாக நடவு செய்வதில் மகசூல் அதிகமாக இருக்கும்.

விற்பனை நிலவரம் கிலோவிற்கு குறைந்த பட்சம் 20 ரூபாயிலிருந்து அதிகபட்சம் விழாக்காலங்களில் 200 ரூபாய் வரை போகும், தினசரி வருமானம் இருந்து கொண்டே இருக்கும்.

ஒரு கிலோ சராசரியாக 60 ரூபாய்க்கு சென்றாலே இலாபகரமானது. 

நாள்தோறும் காலை வேளைகளில் பூ பறிக்கலாம், மகசூல் அதிகமாக இருக்கும் பொழுது காலை வேளையில் மட்டும் பூ பறிப்பது கடினம் ஆகையால் மாலை வேளைகளில் பறித்து அடுத்த நாள் காலை சந்தைக்கு அனுப்பும் பொழுது சேர்த்து அனுப்பிவிடலாம். 

100 செடிகளில் நான்காவது மாதத்தில் ஒரு நாளைக்கு ஏறத்தாழ ஒரு கிலோ வரையிலும், ஒரு வருடத்தில் நாள் ஒன்றுக்கு எட்டு கிலோ வரையிலும் பூ பறிக்கலாம்.


 

விவசாயி: மு. மகாலிங்கம், தருமபுரி.

தொகுப்பு: செ. சுதாகர்உயிரி தகவலியல் பட்டதாரி, ஒருங்கிணைந்த பண்ணை முறையில் அதிக ஆர்வமுடையவர். மின்னஞ்சல்: sudhagarsenthilkumar@gmail.com