. . .

படைப்புழு எனும் தீவிரவாதி | இப்போது தீவன சோளத்திலும்!

மெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட படைப்புழு (American Fall Army worm – Spodoptera frugiperda) கடந்த மே மாதம் கர்நாடக மாநிலத்தில் மக்காசோளப் பயிரில் தாக்குதல் ஏற்படுத்தியது முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. தொடர்ந்து தமிழகம், ஆந்திர பிரதேசம், மகராஷ்டிரா மாநிலங்களிலும் பல லட்சம் ஏக்கர் மக்காசோளப் பயிரில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்ததாக கடந்த டிசம்பர் (2018) மாதம் ஈரோடு மாவட்டத்தில் கரும்பு பயிரில் படைப்புழு தாக்குதல் ஏற்படுத்தியதை கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க நிலையம் வெளியிட்டது. அதோடு கரும்பு விவசாயிகள் முன்னெடுக்க வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் படைப்புழுவை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் மக்காசோளம், கரும்பிற்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் நாவக்குறிச்சி கிராமத்தில் விவசாயி முத்துசாமி என்பவரின் வயலில் சோளப்பயிரில் தீவிரமாக படைப்புழு தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. சோளத்தில் படைப்புழு தாக்குதல் ஏற்படுத்துவது இந்தியாவில் இங்கு தான் முதலில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் உலகிற்கு இது புதிதல்ல.

படைப்புழுவை தவர்க்கும் தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கூறும் 9 வழி முறையைத் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்

கடந்த 2016-ம் ஆண்டே பல லட்சம் ஏக்கரில் உணவு தானியத்திற்காக ஆப்ரிக்காவில் பயிரிடப்பட்டிருந்த சோளத்தை படைப்புழு சேதப்படுத்தியுள்ளது கண்டறியப்பட்டது. இந்த புழுவானது 80க்கும் மேற்பட்ட பயிர் வகைகளை தாக்கக்கூடிய வல்லமை வாய்ந்தது.

Spodoptera frugiperda

இதன் அந்துப்பூச்சியானது ஒரே இரவில் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறன் வாய்ந்தது. ஒரு பெண் அந்துப்பூச்சி மட்டும் 1000 முட்டைகள் வரை இடும். அதிலிருந்து 3 முதல் 5 நாட்களுக்குள் முட்டைகள் பொறித்து புழுவாக மாறிவிடும். கோடை காலத்தில் 30 நாட்கள் மற்றும் மழைக்காலத்தில் 80-90 நாட்கள் வரை வாழ்நாளை நீட்டித்துக் கொள்ளும். ஆக இனி விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் பயிர் செய்ய வேண்டியது அவசியமாகிறது. வருமுன் காப்பதே சிறந்தது என்கிற பழமொழிக்கு ஏற்றாற் போல் தாக்குதல் ஏற்படுத்துவதற்கு முன்பே தாக்குதல் ஏற்படுத்தாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதன் அந்துப்பூச்சியானது ஒரே இரவில் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறன் வாய்ந்தது. ஒரு பெண் அந்துப்பூச்சி மட்டும் 1000 முட்டைகள் வரை இடும். அதிலிருந்து 3 முதல் 5 நாட்களுக்குள் முட்டைகள் பொறித்து புழுவாக மாறிவிடும். கோடை காலத்தில் 30 நாட்கள் மற்றும் மழைக்காலத்தில் 80-90 நாட்கள் வரை வாழ்நாளை நீட்டித்துக் கொள்ளும்.

இதுகுறித்து விவசாயி முத்துசாமி கூறியதாவது: மழை வந்தால் கடலை போடலாம்னு ஒன்னரை ஏக்கர் நிலத்தை உழுது வச்சிருந்தேன். ஆனா போன வருஷம் மாதிரி மழை அதிகமா இல்லை. சரி சோளத்தை விதைச்சி விட்டா மாட்டுக்கு தீனி ஆகுமேனு விதைச்சேன். இப்போதான் 35 நாள் பயிர். இன்னும்10 நாள் ஆனா மாட்டுக்கு தீனியா அறுத்து போட ஆரம்பிச்சிருப்பேன். அதுக்குள்ள இப்போ பார்த்தா எல்லா குருத்துலையும் புழு தாக்கிருக்கு. இலைய சாப்பிடரதோட இல்லாம குருத்தையும் வெட்டிருது. 35 வருஷமா விவசாயம் பண்றன் ஒரு நாளும் சோளத்துல இப்படி புழு வந்து பாத்ததில்ல. இப்படியே நிலைமை போன விவசாயமே பண்ண முடியாது என்றார் வருத்தத்துடன்.

இந்த அமெரிக்க படைப்புழுவை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று அண்ணாமலைப் பல்கலைக்கழக உழவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர்..பாபு கூறியதாவது:எதிரியின் பலத்தினை அறிந்து அதற்கு தகுந்தாற் போல் யுத்திகளை கையாள்வதே வெற்றிக்கு வழிவகுக்கும். இதன் அடிப்படையில் விவசாயிகள் உயிர் பூஞ்சாண மருந்தான மெட்டரைசியம் அனிசோபிலியே மற்றும் பெவேரியா பேசியானா போன்றவற்றை அருகில் உள்ள மண்டல ஆராய்ச்சி நிலையங்களில் வாங்கி பூச்சிமருந்து தெளிப்பது போலவே பயிர்களின் மீது தெளிக்கும் போது இந்த பூஞ்சாணங்கள் படைப்புழுவின் மேல் பட்டு நோய் தொற்றுக்கு உள்ளாகி 4 முதல் 7 நாட்களில் இறந்து விடும். மேலும் இதுதவிர எதிர்உயிரிகளான (Parasitoids) டிரைக்கோகிராமா மற்றும் பூச்சி உண்ணியான ரெடியூவிட் பூச்சி, பிரக்கானாய்ட்ஸ், கொடீசியா, கிரைசோபெர்லா ஜஸ்ட்ரோமி போன்றவைகளை வயலில் விட்டும் உயிரியல் முறையில் படைப்புழுவை அழிக்கலாம்.

இது தவிர இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் விளக்குப் பொறியை வைத்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்தும் அழிக்கலாம். இவைகளில் எதிர்பார்த்த அளவில் புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை எனில் அசாடிராக்டின் @2.5 மி.லி /ஒரு லிட்டர் தண்ணீருக்கு தையோடிகார்ப் அல்லது இமாமெக்டின் பென்சோயேட் போன்ற ரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பரிந்துரைக்கப்பட்ட அளவில் ஒட்டுப் பசையுடன் சேர்த்து தெளிப்பதினால் முழுமையாக கட்டுப்படுத்தலாம். மேற்சொன்ன ரசாயன மருந்துகள் தெளித்து 8 மணிநேரத்திற்கு பிறகு தான் புழுக்கள் இறக்கும். ரசாயன மருந்துகள் தெளித்து 15 நாட்கள் கழித்து தான் கால்நடைகளுக்கு சோளத்தை தீவனமாக கொடுக்க வேண்டும். இவ்வாறு ஒருங்கிணைந்த முறையில் பூச்சி மேலாண்மை மேற்கொண்டால் குறைந்த செலவில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் படைப்புழு தாக்குதலை எளிதில் வெல்லலாம் என்றார்.

கட்டுரையாளர்: மு.ஜெயராஜ்

உதவிப்பேராசிரியர் (உழவியல் துறை), தொன் போஸ்கோ வேளாண்மைக் கல்லூரி, சகாயத்தோட்டம், வேலூர் மாவட்டம். தொடர்புக்கு: jayarajm96@gmail.com அலைபேசி எண் : 8220851572.

Print Friendly, PDF & Email
error: தகவல் பாதுகாக்கப்பட்டுள்ளது